Published:Updated:

‘கணவன், மனைவிக்குள்ள விட்டுக்கொடுக்கவெல்லாம் வேண்டாம்..!’ - நடிகை ஆர்த்தி

‘கணவன், மனைவிக்குள்ள விட்டுக்கொடுக்கவெல்லாம் வேண்டாம்..!’ - நடிகை ஆர்த்தி
‘கணவன், மனைவிக்குள்ள விட்டுக்கொடுக்கவெல்லாம் வேண்டாம்..!’ - நடிகை ஆர்த்தி

சின்னதிரை, வெள்ளித்திரை என இரண்டிலுமே ஆர்த்தி என்ற பெயரைச் சொன்னதும், குழந்தை போன்ற கொழுகொழு கன்னங்களோடு சிரிக்கும் அந்த முகம் நினைவுக்கு வந்து நம் முகம் புன்னகை பூக்கும். குழந்தைப் பருவத்திலேயே 63 படங்கள் நடித்தவர். தற்போது, 90 படங்களைத் தாண்டிவிட்டார். விரைவில் சதம் அடிக்கப்போகும் ஆர்த்தியோடு ஒரு பேட்டி மேட்ச்! 

''உங்களைப் பற்றிய நெகட்டிவான செய்திகள் வரும்போது எப்படி எடுத்துக்கிறீங்க?'' 

''அதைப் பற்றி கவலைப்படவே மாட்டேன். பாராட்டோ, திட்டோ எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொண்டு அடுத்தடுத்து நகர்ந்துட்டே இருக்கும் மனப்பான்மை இருக்கணும். அது எனக்கு இருக்கு. 'என்ன இவங்க இவ்வளவு குண்டா இருக்காங்க, பார்க்கவே பயமா இருக்கு'னு கமெண்ட்ஸ் வரும். அதையெல்லாம் பாசிட்டிவாக பார்க்கிறேன். மக்கள் நம்மைத் தொடர்ந்து கவனிக்கிறதாதான் நிறைய விமர்சனம் வருதுனு நினைச்சுப்பேன். நெகட்டிவ் பார்த்து பயப்படுறவங்க பொது வாழ்க்கையில் இருக்க வேண்டியதில்லை.'' 

''இப்படி 'பளிச்' என பேசும் பழக்கம் யார்கிட்ட இருந்து வந்துச்சு?'' 

''நிச்சயமா என் அப்பா, அம்மாகிட்ட இருந்துதான். நான் சின்ன வயசா இருக்கும்போதும் சரி, இப்பவும் சரி, எனக்கு என்ன பிடிக்குமோ அதைச் செய்யவிடுவாங்க. 'நீ ஏன் குண்டா இருக்கேனு யாராவது கேட்டா, அதைப் பத்தி நானே கவலைப்படலை. நீ ஏன் கவலைப்படுறேனு சொல்லிடு'னு தன்னம்பிக்கைக் கொடுத்து வளர்த்தாங்க. உலகத்திலேயே நான் அதிக அன்பு வெச்சிருக்கிறது அவங்க மேலத்தான். எனக்கு விவரம் தெரிஞ்ச நாளிலிருந்து இப்போவரைக்கும் அவங்க இரண்டு பேரும் சண்டைப் போட்டதே கிடையாது. அம்மா என்ன சொன்னாலும் அப்பா கேட்டுப்பார். அப்பா, அம்மாவுக்குச் சமைச்சுத் தருவார். அதைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கும். 'எதுக்கு அழணும், எதுக்கு வருத்திக்கணும். நமக்கு கிடைச்சிருக்கிறது ஒரே ஒரு வாழ்க்கை. யார் சொல்றதுக்கும் பயப்படாமல் சந்தோஷமா நமக்குப் பிடிச்ச மாதிரி வாழ்ந்துட்டுப் போவோம்'னு சொல்வாங்க. அதே நேரத்துல மத்தவங்களை மதிக்கவும் கத்துக்கொடுத்திருக்காங்க.'' 

''உங்க கணவர் கணேஷ் எப்படி?'' 

''பலரும் மீடியாவுக்காக சொல்ற மாதிரி 'நாங்க மேட் ஃபார் ஈச் அதர்'னு சொல்ல மாட்டேன். வீட்டுக்கு வீட்டு வாசல்படி மாதிரி எங்களுக்கும் அடிக்கடி பிரச்னை வரும். சண்டை வந்தாலும், அடுத்த சில மணி நேரத்திலேயோ, சில நாளிலேயோ சமாதானமாகிடுவோம். இது, எல்லா உறவுக்குள்ளும் நடக்கிறதுதானே.'' 

''அப்போ, இரண்டு பேருக்கும் ஒரே மாதிரியான டேஸ்ட் கிடையாதா?'' 

''கண்டிப்பா இல்லைங்க. எதிரெதிர் ரசனை உள்ளவங்க நாங்க. அவர் தளபதி ரசிகர்னா, நான் தல ரசிகை. அவர் சிவாஜி ரசிகர்னா, நான் எம்.ஜி.ஆர் ரசிகை. அவருக்கு காமெடி, சென்டிமென்ட் அதிகம் பிடிக்கும். எனக்கு ஆக்‌ஷன் பிடிக்கும். இப்படிச் சாதாரண ரசனையிலிருந்து சாப்பாடு ரசனை வரை பலவும் மாறுபடும். அவர் வேலையை அவரும், என் வேலையை நானும் பார்த்துட்டிருக்கோம். அப்படி இருந்தாலே போதுமே. மத்தவங்க சுதந்திரத்தில் தலையிடும்போதுதான் தேவையில்லாத பிரச்னைகள் வரும். ரசனைகள் வேறாக இருந்தாலும் காதலால் சேர்ந்திருக்கோம்.'' 

''உறவுக்குள் மனக்கசப்பு வரும்போது பிரிகிறார்களே அது தவறு என்கிறீர்களா?'' 

''நான் அப்படிச் சொல்லலை. அது அவங்களுடைய தனிப்பட்ட விஷயம். ஒவ்வொரு விரலும் ஒரே மாதிரி இருக்கிறதில்லியே. ஒவ்வொரு குடும்பத்தில் இருக்கிறவங்களும் வேறு வேறு சூழ்நிலைகளில் வளர்க்கப்பட்டவங்க. அவங்க விருப்பங்கள் மாறுபடும். சில விஷயங்களை சகிச்சுக்க பழகிட்டாலே போதும், பிரிவுகள் வராது. நம்ம வாழ்க்கை காகிதத்தின் தீர்ப்பிலா இருக்கு? அது மனசு சார்ந்தது. கோர்ட் படியேறி, விவகாரத்து வாங்கிட்டா மனசுல இருக்கிறதெல்லாம் அழிஞ்சுடாது. இத்தனை வருஷங்களா என் அம்மாவும் அப்பாவும் சண்டையில்லாமல் வாழ்ந்து காட்டும்போது, என்னால் ஏன் முடியாதுனு நினைச்சுப்பேன். எந்த உறவையும் உடனே புரிஞ்சுக்க முடியாது. ஒவ்வொரு விஷயத்தையும் சந்திக்கும்போதுதான் புரிஞ்சுக்க முடியும். அதுக்கான தூரம், காலத்தை நோக்கித்தான் நானும் கணேஷும் போய்ட்டிருக்கோம்.'' 

''இரண்டு பேரும் இணைந்து சில காமெடி சீரியல்களில் நடிக்கிறீங்களே... ஏன் குடும்ப சீரியலில் நடிக்கலை?'' 

''ஒவ்வொரு நாளும் வேலைக்குப் போய்ட்டு களைப்போடு வீடு திரும்பறவங்க முதல்ல ஆன் பண்றது டி.வியைத்தான். ஆனால், எல்லா சீரியலிலும் அழுது வடிஞ்சுட்டு இருக்கிறதையே பார்த்தால் மனநிலை எப்படி இருக்கும். அந்த மாதிரி சீரியலில் நடிக்கிறதில் எங்களுக்கு விருப்பமில்லை. அதனால்தான் காமெடியா செலக்ட் பண்றோம்.'' 

“கணவன் மனைவிக்குள்ளே எப்படிப்பட்ட புரிதல் இருக்கணும்னு நினைக்கிறீங்க?'' 

''என்னை கேட்டால் இரண்டு பேருமே விட்டுக்கொடுக்க கூடாதுனு சொல்வேன். நமக்காக இவங்க இதை எல்லாம் விட்டுக்கொடுக்கணும்னு எதிர்பாக்கிறதே தவறுனு நினைக்கிறேன். அவங்க அவங்களாவே இருக்கணும். அதையும் மீறி மாற்றிக்கொள்ள முயற்சி பண்ணினா அது நடிப்பா இருக்கும். மேக்கப் கலையும் சூழ்நிலை வந்தால், உண்மை வெளியில் தெரிய ஆரம்பிச்சுடும். திருமணத்தின்போது மணமகன், மணமகள் இருவரும் சுண்டு விரலை பிடிச்சுக்கிட்டு அக்னியைச் சுத்தி வர்றது எதுக்குத் தெரியுமா? கை விரல்களிலேயே அதிக கர்வம்கொண்டது சுண்டு விரல்தானாம். மற்ற விரல்களைவிட நான்தான் பெரியவன் என்கிற எண்ணம் சுண்டு விரலுக்கு உண்டாம். 'அந்த மாதிரி கர்வமும், ஆதிக்கமும் என்கிட்டே இருந்தால், அதையெல்லாம் கட்டுப்படுத்திக்கொள்வேன்' எனச் சொல்லி போடும் ஒப்பந்தம்தான் சுண்டு விரல்களை இணைச்சுக்கிறது. அப்படி அடக்கி, அன்பைக் காண்பிக்கும் தம்பதிகள் கடைசிவரை சந்தோஷமா இருக்கலாம்.'' 

''திடீர்னு உடல் இளைச்ச மாதிரி தெரியுதே... என்ன காரணம்?' 

''மன்னிக்கணும். அது சீக்ரெட். இப்போ கேட்க வேணாம். நிச்சயமா ஒருநாள் சொல்வேன். நன்றி!'' 

மாறாத அழகுப் புன்னகையுடன் கைகூப்புகிறார் ஆர்த்தி.