மிதக்கும் சோலார் பிளான்ட்... சீனாவின் உலக சாதனை! #SolarEnergy

லகமே அணுசக்தி, சோலார் மின்சாரம் என தனக்கென ஒரு பாதையை அமைத்து அதில் பயணம் செய்து கொண்டிருக்கிறது. இன்னும் சில நாடுகள் மின்சாரம் தயாரிப்பதற்காக அணு உலை, சோலார், காற்றாலை மின்சாரம், நீர் மூலம் மின்சாரம் உற்பத்தி எனப் பல வழிகளையும் ஒன்றாக கையாள்கின்றன. கொரியாவில் சாலையில் அமைக்கப்பட்டுள்ள சோலார் பேனல்கள் முதல் எலான் மஸ்க் கண்டுபிடித்த சோலார் ஓடுகள் வரை சோலார் பேனல்கள் மூலம் தனது பாதையை சில நாடுகள் தீர்மானித்துக் கொள்கின்றன. இந்நாடுகளின் தேவை மற்றும் குறிக்கோள் அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்வதே ஆகும். இந்தியா போல சில நாடுகள் சோலாருக்கும், பயங்கரமான சேதத்தை உருவாக்கக்கூடிய அணு உலைகளுக்கும் தனியாக இடத்தை ஒதுக்கி மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்கின்றன. தற்போது சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரில் உலகிலேயே மிகப்பெரிய மிதக்கும் சோலார் பிளான்டை அமைத்து வருகிறது.

சோலார் பேனல்கள்

இதுவரை இவ்வளவு பெரிய பிளான்டை உலகத்தில் யாரும் அமைத்தது இல்லை. இந்தப் பணிகள் வரும் 2020-ம் ஆண்டுக்குள் முடிவடையும் எனவும் சீனா அறிவித்துள்ளது. நம் இந்தியாவில் சோலாருக்கென தனி இடங்கள் ஒரு நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டது. உலக நாடுகளில் பெரும்பாலான நாடுகள் அணு உலையை வேண்டாம் என்று சொன்ன பிறகு, இந்தியா பத்து அணு உலைகள் நிறுவப்படும் எனச் சமீபத்தில் அறிவித்தது. ஏற்கனவே கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணு உலையிலிருந்து முதல் யூனிட் கூட ஒழுங்காகச் செயல்படவில்லை. ஆனால் சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீரானது வீணாக பெரும் பரப்பளவு இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும். அதனால் இடப்பரப்பு வீணாகிறதே என யோசித்த சீனா பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு இந்த பிளான்டை நிறுவத் திட்டமிட்டது. இந்தக் கழிவுநீரில் நிறுவப்படும் பேனல்கள் மட்டும் 1 லட்சத்து 66 ஆயிரம் பேனல்களாம்.

சோலார் பேனல்கள்

இந்தத் திட்டம் குறித்து ஜப்பான், இங்கிலாந்து மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் யோசனையில் ஈடுபட்டன. ஆனால் அதை முதல் கட்டமாக சீனா செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இதனால் சோலார் பேனல்கள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காகக் கடந்த வியாழன் அன்று பெய்ஜிங்கில் நடைபெற்ற ஆற்றல் வளம் குறித்த அமைச்சர்கள் ஆலோசனையின்போது இதற்காக 360 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலையின் முடிவுகாலம் 2020-க்குள் இருக்க வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த சோலார் பிளான்டின் மூலம் பெறப்படும் மின்சாரம் சிறிய அணு உலையிலிருந்து பெறப்படும் மின்சாரத்திற்குச் சமமாக இருக்கும். மொத்தமாக 40 வாட் மின்சாரத்துக்கும் மேல் தயாரிக்கும் தன்மை கொண்டதாக ஒவ்வொரு சோலார் தகடுகளும் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. மாறி வரும் பருவநிலைக்கு இது ஒரு மாற்று வழியாக அமையும்.

மாதிரி வடிவம்

இதை மட்டும் சீனா முடித்து விட்டால், மரபு சாரா ஆற்றல் வளத்தைக் கொண்டு இன்னும் அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முயற்சி எடுக்கும். அப்போது எடுக்கப்படும் முடிவுகளைப் பொறுத்து 2030-ம் ஆண்டுக்குள் சீனாவின் முக்கால்வாசி பகுதிகள் சோலார் மையமாகிவிடும். வீணாகும் நிலக்கரி நீரைத்தான் பயன்படுத்த முடியவில்லை, அந்த நீரைக் கருவியாக பயன்படுத்தி அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என்ற முடிவைச் சீனா எடுத்துள்ளது. ஆனால், இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் அமைத்த பிரம்மாண்டமான சோலார் பிளான்டில் பல முறைகேடுகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதுதவிர பத்து அணு உலைகளை நிறுவப்போகிறோம் என இந்தியா எடுத்திருக்கும் முடிவின் விளைவு மிக மோசமானதாக இருக்கும் என அறிவியல் வல்லுநர்களும், சுற்றுச்சுழல் ஆர்வலர்களும் எச்சரிக்கின்றனர். ஏற்கனவே அணு உலைகளை நிறுவிய நாடுகளில் ஏற்பட்ட அசம்பாவிதத்தின் விளைவு இன்றளவும் அனைவராலும் பேசப்படுகிறது. அணு உலையை விடுத்து, மரபுசாரா எரிசக்தி ஆற்றலைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் வழிகளை இந்தியா பின்பற்றினால் நன்றாக இருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!