Published:Updated:

''பேர் வாங்கி என்ன பண்ண... பிஎஃப் தராம இழுத்தடிக்கிறாங்க'' - வறுமையில் தவிக்கும் முதல் பெண் பேருந்து ஓட்டுநர்!

''பேர் வாங்கி என்ன பண்ண... பிஎஃப் தராம இழுத்தடிக்கிறாங்க'' - வறுமையில் தவிக்கும் முதல் பெண் பேருந்து ஓட்டுநர்!
''பேர் வாங்கி என்ன பண்ண... பிஎஃப் தராம இழுத்தடிக்கிறாங்க'' - வறுமையில் தவிக்கும் முதல் பெண் பேருந்து ஓட்டுநர்!

"பேருந்து ஓட்டுநரா பணியில் சேர்ந்த காலம் முதல் இப்போ வரைக்கும் என்னைப் பாராட்டுறவங்க அதிகம். ஆனா இந்தப் பணியில நான் பட்ட கஷ்டங்களும், வேதனைகளும் ரொம்பவே அதிகம். திறமையான பெண்கள் முழுமையா பிரகாசிக்க முடியாத சூழலே இப்போ வரைக்கும் நிலவுதுன்னு சொல்ல... நானே ஓர் உதாரணம்" என வேதனைக் குரலில் பேசும் வசந்தகுமாரி, ஆசியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர். பழிவாங்கல், சக அதிகாரிகளால் புறக்கணிப்பு, உடல்நலக் குறைவு என கடும் சிரமங்களுக்கு இடையே வெற்றிகரமாக தன் பணியைச் செய்து கடந்த ஏப்ரல் மாதம் பணி ஓய்வு பெற்றிருக்கிறார் வசந்தகுமாரி. நாகர்கோவிலில் தன் குடும்பத்துடன் வசித்து வரும் இவர், இன்றைய தலைமுறையினரின் புரிதலுக்காக முதலில் தன் வாழ்க்கைப் பயணத்தைப் பகிர்கிறார். 

"சின்ன வயசுல இருந்தே கியர் வண்டி ஓட்ட ரொம்பவே ஆசைப்படுவேன். ஸ்கூல் படிக்கிறப்போவே என்னோட அண்ணன்தான் (பெரியப்பா மகன்) பைக், கார் எல்லாம் ஓட்டக் கத்துக்கொடுத்தார். பத்தாவது வரை மட்டுமே படிச்சுட்டு குடும்பக் கஷ்டத்துல மேற்கொண்டு படிக்க முடியல. அதனால மகளிர் மன்ற வேலை, கூட்டுறவுச் சங்க வேலைகளைச் செய்துகிட்டு இருந்தேன். அப்போதுதன் பெண்களுக்கு எல்லா வேலையிலயும் 33 சதவிகித பணி ஒதுக்கீடு முறை வந்துச்சு. அதன்படி நானும் பஸ் டிரைவர் பணிக்கு 1989-ல் விண்ணப்பிச்சேன். 1991-ல் இன்டர்வியூவில் உயரம் குறைவுன்னு என்னை நிராகரிச்சுட்டாங்க. ஆண்களுக்கே 160 செ.மீ உயரம் போதும் என்ற நிலையில எனக்கு 162 செ.மீ உயரம் இருந்துச்சு. ஆனாலும் நீக்கணும்னு முடிவு செய்து 159.8 செ.மீ என உயரத்தை தவறாகக் குறிப்பிட்டு என்னை அதிகாரிகள் நீக்கினாங்க. இதனை எதிர்த்து பல வழிகளில் போராடி, கடைசியா அப்போ முதல்வரா இருந்த ஜெயலலிதா அம்மாவைச் சந்தித்து முறையிட்டேன். 'மீண்டும் இன்டர்வியூ வைக்கச் சொல்லி' அவர் உத்தரவிட, பின்னர் சரியான முறையில உயரத்தைக் குறிப்பிட்டு பணி வழங்கப்பட்டது. 

‘வாழ்த்துகள். நல்லபடியா உங்க வேலையைச் செய்யுங்க. எப்போதுமே உங்களுக்கு ஆதரவா இருப்பேன். பணிப் பாதுகாப்புக் கொடுப்பேன். எதுக்குமே பயப்படவேண்டாம்’னு ஜெயலலிதா அம்மா எனக்குப் பணி ஆணைக் கடிதம் கொடுக்கும்போது அன்போடு பேசி என்னை பாராட்டினது நல்லாவே நியாபகம் இருக்குது. ஆசியாவிலேயே முதல் பெண் ஓட்டுநரா 30.03.1993 -ல் என்னோட ஓட்டுநர் பணியைத் தொடங்கினேன். முதல்ல கன்னியாகுமரி மாவட்டம் ராணித்தோட்டத்துல தொடங்கி நாகர்கோவில் பஸ் ஸ்டேண்டுல ட்ரிப்பை முடிப்பேன். அப்படியே பல ஊர், நகரம் தாண்டி நாகர்கோவில் டூ திருவனந்தபுரம் வரைக்கும் பஸ் ஓட்டியிருக்கேன். 

அப்போ எனக்குக் கிடைச்ச பாராட்டுகளுக்கு அளவே கிடையாது. சந்தோஷமா கம்பீரமா ஓட்டுநர் யூனிஃபார்மைப் போட்டுகிட்டு தினமும் பணியைத் தொடங்குவேன். என்னோட சர்வீஸ்ல எந்த விபத்தும் நடந்திடக்கூடாதுன்னு மிகவும் கவனமா பஸ் ஓட்டுவேன். பயணிகளைச் சரியான நேரத்துக்கு ஏற்றி இறக்குவது, ஸ்மூத்தா ஓட்டுவது, சக பயணிகளோடு பழகுறது, பணி நேரத்துல செல்போன் பயன்படுத்தாததுன்னு கவனத்தோடு பஸ் ஓட்டி நல்ல பெயர் எடுத்தேன். அந்த சந்தோஷம் கொஞ்ச நாள்தான் நீடிச்சுது" என கலங்குபவர் தன் பணிக்காலத்தில் எதிர்கொண்ட பிரச்னைகளைக் கூறுகிறார். 

"பணிக்குச் சேர்ந்த கொஞ்ச நாள்லயே என்னோட வளர்ச்சியை பார்த்துப் பொறாமைப்பட்ட சக அதிகாரிகள், ஊழியர்கள் எனக்குக் கொடுத்த இடையூறுகள் ரொம்பவே அதிகம். என்னை வேலையை விட்டு அனுப்ப பலரும் முயற்சி செய்தாங்க. குறிப்பா ஜெயலலிதா அம்மா 2001-ல் என்னைத் தொழிற்சங்க யூனியன் லீடரா நியமிக்க, அது கொள்ளை அடிக்க நினைச்ச ஆட்கள் பலருக்கும் பிடிக்கல. அதனால எதிரிகள் எனக்கு அதிகமானாங்க. தொழிற்சங்க அடிப்படை உறுப்பினர் பதவியில இருந்தும் தூக்கினாங்க. சஸ்பெண்ட், உங்களை ஏன் டிஸ்மிஸ் பண்ணக்கூடாதுனு கடிதம் அனுப்பினாங்க. இப்படி அடுக்கடுக்காய் பிரச்னைகள் வர ஆரம்பிச்சதுல என் உடல்நிலை பாதிப்படைய ஆரம்பிச்சது. உடல்நிலை சரியில்லாம இருக்கிறப்ப டிப்போவுலயே பணிசெய்றது மாதிரியான இலகுவான வேலையைக் கொடுக்கணும்னு ரூல்ஸ் இருந்தும் அப்படி எந்தச் சலுகையும் எனக்கு கிடைக்கலை. 

ஜெயலலிதா அம்மா பெண்கள் முன்னேற்றத்துக்குப் பல திட்டங்களைக் கொண்டு வந்தாங்க. ஆனா அது நல்லபடியா நடக்கவிடாம பல அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் வேலை செய்தாங்க. அப்படி எனக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை எல்லாம் அம்மா கவனத்துக்கு கொண்டு போகலாம்னு பல நாள் சென்னையில தங்கியிருந்தேன். ஆனா அதிகாரிகள் என்னை அம்மாவை சந்திக்கவே விடலை. ஒருவேளை அப்படி நடந்திருந்தா 'வா வசந்தா’னு அன்போடு அழைச்சுப் பேசி எனக்கு நல்லது பண்ணியிருப்பாங்க" என்பவர் வீட்டு வறுமையைச் சமாளிக்க வேறு வேலை தேடி கொண்டிருக்கிறார். 

"பணி செய்யும் காலத்துல தொடங்கி, இப்போ ஓய்வு பெற்றப் பிறகும்கூட அநீதியை சந்திச்சுகிட்டுதான் இருக்கேன். இருதயப் பிரச்னை, முதுகு வலி, சர்க்கரை நோய் பிரச்னைனு டியூட்டி டைம்ல கொஞ்ச காலம் விடுப்பு எடுத்தேன். ஆனா நிறையக் காலம் விடுப்பு எடுத்ததுபோல கணக்கிட்டு, என்னோட சர்வீஸான 24 வருஷத்தை 17 வருஷம்னு கணக்கு காட்டிட்டாங்க. அதைத்தான் என்னால தாங்கிக்க முடியல. ஓய்வு பெற்று ரெண்டு மாசம் ஆகுது. ஆனா பிஎஃப், பென்ஷன்... இப்படி எதுவுமே வரல.  

உடம்புல இன்னும் உயிர் இருக்குது. ஆனா நான் உழைச்ச காசை தராம உயிரோடு போஸ்ட்மார்ட்டம் பண்ற மாதிரி கொடுமை பண்றாங்க. குடும்ப வறுமையில, எனக்கான மருத்துவச் செலவும் அதிகமாகுது. வயசு 58 ஆச்சு. இதுவரைக்கும் வாங்கின பேர் புகழை வச்சு என்ன பண்ண சொல்லுங்க... இன்னும் வறுமை பிடியில சிக்கிட்டு இருக்கேன். அதான் வேற வேலைக்குப் போகலாம்னு இருக்கேன்'' என்பவரின் வார்த்தைகள் கம்முகிறது.