110 சிசியா... 125 சிசியா? ஹோண்டா ஆக்டிவாவில் எதை வாங்கலாம்? | 110cc or 125cc, which is the activa to go for?

வெளியிடப்பட்ட நேரம்: 21:47 (12/06/2017)

கடைசி தொடர்பு:21:47 (12/06/2017)

110 சிசியா... 125 சிசியா? ஹோண்டா ஆக்டிவாவில் எதை வாங்கலாம்?

ஹோண்டா

புதிதாக ஸ்கூட்டர் வாங்கலாம் என்ற முடிவில் இருக்கிறீர்களா? பைக்கில் ஸ்ப்ளெண்டர் எப்படியோ, ஸ்கூட்டரில் ஆக்டிவா அப்படி. ஆனால், 110சிசி ஸ்கூட்டரின் பவர் போதவில்லை என்பவரா நீங்கள்? உங்களைப் போன்றோர்களை மனதில்வைத்துதான், 125சிசி-யிலும் ஆக்டிவாவைத் தயாரித்துள்ளது ஹோண்டா நிறுவனம். இந்த இரண்டில் எந்த ஸ்கூட்டரில் ப்ளஸ்கள் அதிகம்? வாருங்கள் பார்க்கலாம்!

FRONT APRONLED

இந்தியர்களுக்குப் பிடித்தமான உலோகத்திலான பாடியை, இரண்டு ஆக்டிவாக்களும் கொண்டிருக்கின்றன. ஏப்ரிலியாபோல மிகவும் ஸ்போர்ட்வ்வான டிசைன் இல்லாமல், மெல்லிய கோடுகளுடன் ஸ்மார்ட்டாக இவை டிசைன் செய்யப்பட்டிருக்கின்றன. ஆக்டிவா 125-ன் முன்பக்கத்தில் உள்ள LED பார்க்கிங் லைட் அழகு; ஆக்டிவா 4G-ல் வழக்கமான அனலாக் டயல்கள் இருக்க, ஆக்டிவா 125-ன் சில்வர் கேஸிங்குக்குள் இருக்கக்கூடிய அனலாக் மீட்டரில், சின்னதாக டிஜிட்டல் ஸ்க்ரீனும் இருக்கிறது.

CLICMETAL BODY

சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை AHO ஹெட்லைட் - டியூப்லெஸ் டயர்கள், MF பேட்டரி, 3D க்ரோம் லோகோ, பேப்பர் ஏர் ஃபில்டர் என அதிக ஒற்றுமைகள் இருப்பதுடன், வேண்டுமென்றால் மொபைல் சார்ஜிங் பாயின்ட்டை ஆப்ஷனலாக இரண்டிலுமே பொருத்திக்கொள்ள முடியும். ஆக்டிவா 125-ல் இருக்கக்கூடிய ஐந்து ஸ்போக் அலாய் வீல் ஆப்ஷன், ஸ்கூட்டருக்கு ஒரு ரிச் லுக் தருகிறது. Convenient Lift-up Independent Cover (CLIC) மெக்கானிசம்கொண்ட ஆக்டிவா 4G-யை, ஈஸியாக சர்வீஸ் செய்ய முடியும்!

ANALOGDIGITAL

ஆக்டிவா 4G-ன் HET BS-IV இன்ஜின், 109.19 சிசி திறன்கொண்டது. பெயருக்கு ஏற்ப ஆக்டிவா 125-ன் HET BS-IV இன்ஜின், 124.9 சிசி திறன்கொண்டது. இன்ஜின் சிசி அளவில் இரண்டு ஸ்கூட்டர்களுக்கும் இடையே வித்தியாசம் இருந்தாலும், பவர் விஷயத்தில் பெரிய வித்தியாசமில்லை. 8 bhp சக்திகொண்ட ஆக்டிவா 4G, 0-60 கி.மீ வேகத்தை 10.16 விநாடிகளில் தொடுகிறது. இதுவே 8.5 bhp சக்திகொண்ட ஆக்டிவா 125, இதே வேகத்தை 9.29 விநாடிகளிலேயே கடந்துவிடுகிறது.

DRUM STEELDISC ALLOY

ஆக்டிவா 125-ன் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் இருக்க, ஆக்டிவா 4G-ல் பழைமையான ஹைட்ராலிக் ஸ்ப்ரீங் சஸ்பென்ஷனே இருக்கிறது. ஆனால், இரண்டு ஸ்கூட்டரின் பின் பக்கங்களிலும் சிங்கிள் ஷாக் அப்ஸார்பர்தான் இருக்கின்றன. எனவே, மேடு பள்ளங்கள் நிறைந்த சாலைகளில், ஆக்டிவா 4G கொஞ்சம் தூக்கிப்போடும். ஆக்டிவா 125-ல் இந்தப் பிரச்னை இல்லை. இதற்கு அதன் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷனுடன், பெரிய முன்பக்க 12 இன்ச் வீலும் ஒரு காரணம்.

HET BS-IVCBS

பெர்ஃபாமன்ஸில் 125 சிசி ஆக்டிவா அதிகமாக ஸ்கோர் செய்தாலும், மைலேஜில் 110 சிசி ஆக்டிவா அசத்திவிடுகிறது. நகருக்குள் ஆக்டிவா 125 ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 44 கி.மீ மைலேஜ் தருகிறது என்றால். ஆக்டிவா 4G கிட்டத்தட்ட 10 சதவிகிதம் அதிகமாக, அதாவது நகருக்குள் 48 கி.மீ மைலேஜ் தருகிறது. இந்த இரண்டிலும் CBS டிரம் பிரேக் இருக்கிறது என்றாலும், ஆக்டிவா 125-ல் முன்பக்க டிஸ்க் பிரேக் ஆப்ஷனும் உண்டு!

AHOMOBILE SOCKET

ஒரே வேரியன்ட்டில் கிடைக்கக்கூடிய BS-IV ஆக்டிவா 4G-ன் சென்னை ஆன் ரோடு விலை, 61 ஆயிரத்தைத் தொட்டுவிடுகிறது. டிரம் பிரேக் - ஸ்டீல் வீல், டிரம் பிரேக் - அலாய் வீல், டிஸ்க் பிரேக் - அலாய் வீல் எனும் மூன்று வேரியன்ட்களில் கிடைக்கும் BS-IV ஆக்டிவா 125-ன் சென்னை ஆன் ரோடு விலை, 68 ஆயிரத்தில் தொடங்கி 73 ஆயிரம் வரை நீள்கிறது. இரண்டுமே விலைக்கேற்ற தரமான தயாரிப்புகள் என்பதால், உங்கள் பட்ஜெட் மற்றும் தேவைக்கேற்ப முடிவு எடுங்கள்!

ஹோண்டா

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்