Published:Updated:

சூப்பர் ஓவர் தெரியும்.. ஐஐடி சூப்பர் 30 தெரியுமா?

சூப்பர் ஓவர் தெரியும்.. ஐஐடி சூப்பர் 30 தெரியுமா?
சூப்பர் ஓவர் தெரியும்.. ஐஐடி சூப்பர் 30 தெரியுமா?

சூப்பர் ஓவர் தெரியும்.. ஐஐடி சூப்பர் 30 தெரியுமா?

ஐஐடி நுழைவுத் தேர்வு Joint Entrance Examination (JEE) முடிகள் நேற்று வெளியிடப்பட்டது. அரசுத் தேர்வில்  பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெறுவது போல, ஐஐடி நுழைவுத் தேர்வில், ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த 30 மாணவர்களும் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். தெருவில் முட்டை விற்பவர் மகன்  முதல் விவசாயி மகன் வரை ஐஐடியன் ஆகப் போகின்றனர். ஏழை மாணவர்களின் இத்தகைய வெற்றிக்கு காரணம் தனியொரு மனிதர். பாட்னாவைச் சேர்ந்த அவரது பெயர் ஆனந்த்குமார். மிகச்சிறந்த கணிதப் பேராசிரியர். கடந்த 2002 ஆம் ஆண்டு ஆனந்த்குமார், 'Ramanujan School of Mathematics ' என்ற பெயரில் ஐஐடி-க்கான பயிற்சி மையம் தொடங்கினார். 

இவர் வகுத்த திட்டம்தான் 'சூப்பர் 30'. ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் பயிற்சி எடுக்க வசதியில்லாத  ஏழை  மாணவர்கள் 30 பேரைத் தேர்வு செய்வார் ஆனந்த்குமார்.  பயிற்சித் திட்டம் பற்றி,  இணையதளத்தில் விவரங்கள் வெளியிடப்படும். அதேவேளையில்,  அந்தப் பயிற்சி... இந்தப் பயிற்சி என மாணவர்களிடம் பணத்தை கறக்கும் மையங்களில் இருந்து வித்தியாசமானது Ramanujan School of Mathematics . தகுதியுடைய மாணவர்கள் பெட்டியை எடுத்துக்கொண்டு ஆனந்த்குமாரிடம் வந்து விட்டால் போதும்... தங்கும் வசதியில் இருந்து உணவு வரை இலவசமாக வழங்கப்படும். ஆனந்த்குமாரின் தாய்., மாணவர்களுக்குத் தேவையான உணவை சமைக்கும் பணியை மேற்கொள்கிறார். சகோதரர் பிரணவ் பயிற்சி மையம் தொடர்பான பிற விஷயங்களைப் பார்த்துக் கொள்வார். 

பயிற்சிக்காக எந்த மாணவர்களிடம் இருந்தும்  ஆனந்த்குமார் சல்லிக்காசு பெறுவதில்லை. பின்னர் எப்படி செலவுகளை அவர் சமாளிக்கிறார்?. அறிந்தால் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். உண்மையில் , 'ஓய்வறியா சூரியன்' என்ற வார்த்தை அப்படியே ஆனந்த்குமாருக்கு அப்படியே பொருந்தும். உறங்குவது தினமும் 4 மணி நேரம் மட்டும்தான். காலை 4 மணிக்கு எழுந்தார் என்றால் இரவு 11 மணி வரை பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பணக்கார வீட்டு மாணவர்களுக்கு டியூசன் எடுப்பார். இடைப்பட்ட நேரத்தில் JEE நுழைவுத் தேர்வு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வேலை. 

டியூசனில்  கிடைக்கும் வருவாயைக் கொண்டே பயிற்சி மையச் செலவுகளை பார்த்துக் கொள்கிறார். இதுதவிர, மையத்தில் படித்து தற்போது உயர்ந்த நிலையில் இருப்பவர்களும் உதவுகின்றனர். ஆனந்த்குமாரின் குடும்பத்தினர் மற்றும் முன்னாள் மாணவர்களின் உதவியாலும் ஐஐடியன்களை உருவாக்கும் பணியில் ஆனந்த்குமாரால் தங்கு தடையின்றி இயங்க முடிகிறது. இவரது மையத்தைச் சேர்ந்த  30 மாணவர்களும் ஐஐடி நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவது இது முதல்முறையல்ல.

கடந்த 2008,09,10 ஆண்டுகளில் இது போல் 30 பேரும் தேர்ச்சி பெற்று ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தியிருக்கின்றனர். கடந்த 15 ஆண்டுகளில் 396 பேரை ஐஐடிக்கு ' Ramanujan School of Mathematics  'அனுப்பியிருக்கிறது. ஐஐடியில் சேரவுள்ள கெல்வினின் தந்தைக்கு நிரந்தரப் பணி கிடையாது. தந்தை ஒரு யோகா ஆசிரியர். சொற்ப வருமானத்தில் ப்ளஸ் 2 வரை மகனை படிக்க வைத்ததே பெரிய விஷயம். தகுதியும் திறமையும் வாய்ந்த கெல்வின், பேராசிரியர் ஆனந்த்குமார் பற்றி கேள்விபட்டு, பெட்டியுடன் வந்து சேர்ந்து இப்போது தேர்ச்சியும் பெற்று விட்டார்.

ஆனந்த் குமார் என்கிற தனி மனிதரால் JEE நுழைவுத் தேர்வில் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களை சாதனையாளர்களாக மாற்ற முடியும்போது, ஒரு அரசால் முடியாதா?. தமிழகத்திலும் ஐஐடி நுழைவுத் தேர்வு மையத்தை  மாவட்டத் தலைநகரங்களில் தொடங்க வேண்டும் என்பது கல்வியாளர்களின் கோரிக்கை.  உணவு , உறைவிட வசதியுடன் பயிற்சி அளித்தால், ஏழை மாணவர்களுக்கு உதவிகரமாக இருக்கும். ஆனால், தமிழக அரசு எங்கே இதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்தப் போகிறது?.

PIC: NDTV

அடுத்த கட்டுரைக்கு