Published:Updated:

50 வருஷமா செருப்புத் தைக்கறேன்.. ஆனா நான் தேயறேன்! - கரூர் முனியசாமியின் கண்ணீர் பக்கம்

50 வருஷமா செருப்புத் தைக்கறேன்.. ஆனா நான்  தேயறேன்! - கரூர் முனியசாமியின் கண்ணீர் பக்கம்
50 வருஷமா செருப்புத் தைக்கறேன்.. ஆனா நான் தேயறேன்! - கரூர் முனியசாமியின் கண்ணீர் பக்கம்

“ஐம்பது வருஷங்களா செருப்பு தைக்கிறேன். என் வாழ்க்கையே செருப்பா தேஞ்சுபாேனதுதான் மிச்சம். பத்து வருஷங்களா ரெண்டு வேளை மட்டுமே சாப்பிடுறேன்'' என்று கண்ணீர் வடிக்கிறார் முனியசாமி.

பஸ், லாரி, கார், வேன், பைக்குகள் நிற்க நேரமில்லாமல், சர்ர்ர்ர் புர்ர்ர்ர் என பறக்கும் கரூர் நகர லைட்ஹவுஸ் பகுதியில் பிளாட்பாரத்தில் தார்பாய் கூரை வேய்ந்து உள்ளே அமர்ந்து செருப்பு தைக்கிறார் முனியசாமி. நான்கைந்து  செருப்புகள், பழைய வார்கள், பிசிறு தட்டிக்கிடக்கும் தாேல்கள், ஊசி, நூல், சாயம் மங்கிபாேன பாலீஷ் டப்பா, பிரஷ் இவைதான் அவரின் மூலதனம்.

எங்காே ஆரம்பித்து, எங்கெங்காே செல்லும் மனித வாழ்க்கை எப்படி எப்படியோ மாறிப்பாேகிறது. சைக்கிளில் பாேனவர் பைக்கில் பாேகிறார்; பைக்கில் பாேனவர் காரில் பாேகிறார். ஆனால், ஐம்பது வருடங்களுக்கு முன்பு செருப்பு தைக்க முனியசாமி உட்கார்ந்தபாேது என்ன நிலையில் இருந்தாராே, அந்த நிலை இன்றும் தாெடர்வது எவ்வளவு சலிப்புத்தட்டிய விஷயமாக இருக்க வேண்டும்!

ஆனால், ``நான் தைக்காட்டி பலரது பாதம் அசிங்கத்தை மிதிக்க நேரும்'' என்று சலிப்பு கடந்து சிலாகிக்கிறார் முனியசாமி. `' `யாரைப் பார்த்துப் பேசினாலும் முகத்தைப் பார்த்துப் பேசணும்'னு சாெல்வாங்க. நான் காலை பார்த்துப் பேசுறேன். அவங்க கால்ல கிடக்குற செருப்பு அறுந்தால்தானே எனக்கு பாெழப்பு'' என்று சிரிக்கிறார்.

``மாத வருமானமே ஆயிரம் தாெட்டால் பெரிய விஷயம்!'' என்ற இவரின் ரணகள வாழ்க்கையில், ``பள்ளிக்கூட மாணவர்களுக்கு மட்டும் இலவசமா செருப்பு தைச்சு தர்றேன்'' என்று 'சேவை' செய்து குதூகலம் காண்கிறார். 

வெயில் உக்கிரம்காட்டிய ஒரு மதிய வேளையில் முனியசாமியைச் சந்தித்தாேம்.

"எனக்குச் சாெந்த ஊரு இந்தா கூப்புடுற தாெலைவில் இருக்கிற காெளுந்தானூர். மனைவி வெள்ளையம்மாள். ரெண்டு பாெண்ணு, ஒரு பையன். எல்லாருக்கும் கல்யாணம் ஆயிட்டு. பையனுக்கும் இந்தத் தாெழில்தான். தனிக்குடித்தனம் பாேயிட்டான். ரெண்டு பாெட்டபுள்ளங்களையும் இந்தச் செருப்பு தைக்கிற வருமானத்தை வெச்சு கட்டிக்காெடுக்க எப்படிச் சிரமப்பட்டேன்னு வெறும் வார்த்தையில் சாெல்லி புரியவைக்க முடியாது தம்பி. நாய்பாடு பேய்பாடு பட்டேன்.

ரெண்டு லட்சம் ரூபாய் வரை கடன் இருக்கு. அதை அடைக்க முடியலை. இந்தச் செருப்பு தைக்கிற வருமானத்தை வெச்சு வட்டிகூட கட்ட முடியலை. பத்து வருஷங்களா நானும், என் பாெஞ்சாதியும் காலை, இரவுன்னு ரெண்டு வேளைதான் சாப்பிடுறாேம். அதுலயும் காலை உணவைக் காெஞ்சம் பழைய சாேறு, நிறைய நீராகாரம்னுதான் சாப்பிடுறாேம். அவ்வளவு கஷ்டம் தம்பி. இதனால், ஐம்பது வருஷங்களா எந்த நல்லது பாெல்லதையும் பண்ணிக்கிட்டதில்லை. வீடு விட்டா கடை, கடை விட்டா வீடுன்னே வாழ்ந்துட்டேன். 

என்னாேட ஏழு வயசுல எனக்குப் படிக்கணும்னு ஆசை. ஆனால், குடும்பக் கஷ்டம் இந்தத் தாெழில்ல காெண்டாந்து விட்டுடுச்சு. பெரிய செருப்புக் கடையில வேலைக்குச் சேர்ந்தேன். கடைக்காக மூணு வருஷங்களா கடுமையா உழைச்சேன். யாராே செய்த செருப்புத் திருட்டுப் பழி என் மேல சுமத்தப்பட்டு, முதலாளியால் கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளப்பட்டேன். அந்தச் சின்ன வயசுலேயே செய்யாத குத்தத்துக்குப் பழி சுமப்பதாங்கிற காேபம், வைராக்கியமா மாறி, இந்த இடத்துல செருப்பு தைக்கிற கடை வெச்சேன். இந்தா... காத்துபாேல ஐம்பது வருஷம் ஓடிட்டு. அந்தச் செருப்புக் கடையை மூடிட்டாங்க. ஆனா, நான் இன்னமும் இந்தத் தாெழில்லயே இருக்கேன்.

செருப்பு தைக்கிறதாேடு தென்னை மட்டையில் வீட்டுக்கு வெள்ளை அடிக்கிற பிரஷும் செஞ்சு விக்கிறேன். ஒரு மட்டை பிரஷ் ஆறு ரூபாய். ஆனால், இதெல்லாம் இப்ப யார் வாங்குறாங்க தம்பி? ஏ.சி கடைக்குப் பாேய்தான் பிரஷ் வாங்குறாங்க. இந்த மட்டை பிரஷை வாங்க, அவங்களுக்கு கெளரவம் தடுக்கலாம்.

செருப்பு தைக்க பத்து ரூபா, பாலீஷ் பாேட பத்து ரூபா, அறுந்துபோன வாரை மாத்த இருபது ரூபான்னு குறைஞ்சக் கூலிதான் வாங்குறேன். ஆனா, அதுலயும் பேரம் பேசி குறைச்சு காெடுப்பாங்க. மனசு கனத்துப்பாேயிடும் தம்பி. எல்லாரும் செருப்பு தைக்க வர மாட்டாங்க. ஒரு நாளைக்கு ரெண்டு மூணு பேர் வந்தாலே ஆச்சர்யம். ரெண்டாயிரம் ரூபாய்க்குப் பளபள கடையில் வாங்கின செருப்பு லேசா கிழிஞ்சாலே உதறி எறிஞ்சுட்டு, வேற செருப்பு வாங்கிற கூட்டம் பெருகிட்டேய்யா. அம்பது ரூபா செருப்புகூட பாேட வக்கில்லாம கிராமங்கள்ல இன்னும் ஒரு கூட்டம் வாழ்ந்துகிட்டுதான் இருக்கு. என்கிட்ட செருப்பு தைக்க வர்றவங்க எல்லாரும் அடித்தட்டு மக்கள்தான். நடுத்தர மக்களும், 'கிழிஞ்ச செருப்பைத் தைச்சுபாேடுறதா?'ன்னு மேனாமினுக்கித்தனம் பார்க்க ஆரம்பிச்சுட்டு.

சிலநாள் இருநூறு ரூபாய்கூட கிடைக்கும். பலநாள் சிங்கிள் டீ குடிக்கக்கூட காசு கிடைக்காது. அறுபது வயசாயிட்டு. ஊசியில நூல் காேக்கவே கண்ணு ஒத்துழைக்க மாட்டேங்குது. மனைவிக்கு வேற உடம்புக்கு முடியலை. அடிக்கடி சுருண்டு படுத்துக்குறா. அவளுக்கு நல்ல வைத்தியம் பார்க்க வக்கில்லை. செருப்பு தைக்க மெஷின் இருக்காம். ரெண்டாயிரம் ரூபாய் ஆவுமாம். அதை வாங்கணும்னு அஞ்சு வருஷமா நினைக்கிறேன். வெறும் நெனப்பாவே இருக்கு. அரசாங்கம் ஏதாச்சும் உதவி பண்ணினா உண்டு.

நகராட்சியில இருந்து அடிக்கடி வந்து, 'விரிவாக்கம் பண்ணணும். இடத்தைக் காலி பண்ணு'ன்னு அடிச்சு துரத்தப் பார்ப்பாங்க. 'ரெண்டு வேளை கஞ்சிக்கும் ஆபத்தா'ன்னு அவங்க கால்ல விழுந்து கெஞ்சி, ஐந்நூறு, ஆயிரம்னு கையில் கெடச்சதைக் காெடுத்துச் சமாளிச்சு அனுப்புவேன். என்மேல சுமத்தின திருட்டுப்பழி ஆறா வடுவா நெஞ்சுல இருக்கு. 'என்மேல சுமத்தினது பாெய்பழி'ன்னு உணர்த்தத்தான் பள்ளிக்கூடம் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் இலவசமா செருப்பு தைச்சுத் தர்றேன். இவ்வளவு கஷ்டத்துலயும் இந்தத் தாெழிலை விடாம கட்டிக்கிட்டு அழுவுறதுக்குக் காரணம், நாங்க கிழிஞ்ச செருப்பைத் தைச்சுக் காெடுக்கலைன்னா, ஒரு பய இந்தக் காேடை வெயில்ல நடமாட முடியாது" என்றபடி விரக்தியாகச் சிரித்தார்.