அறிவாலயம் மேல் மேம்பாலம்!
##~## |
''உலக விஷயங்களைத் தெரிந்துகொள்வதில் அபாரமாக இருப்பவர்கள், வாழ்க்கையில் கோட்டை விட்டுவிடுகிறார்களே?''
''உங்களுக்காக ஒரு குட்டிக் கதை. கல்வி அறிவு இல்லாத ஒரு தந்தை, நன்கு படித்த தன் மகனோடு காட்டுக்குள் போனார். இரவு நெருங்கியதால், இருவரும் ஓர் இடத்தில் கூடாரம் அமைத்துத் தங்க முடிவு செய்த னர். நள்ளிரவில் கண் விழித்த தந்தை, தன் மகனைத் தட்டி எழுப்பி, 'மகனே, வானத் தைப் பார். உனக்கு என்ன தெரிகிறது?’ என்று கேட்டார். 'கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் தெரிகின்றன’ என்றான் மகன். 'இதில் இருந்து உனக்கு என்ன தெரிகிறது?’ என்றார் அப்பா. 'விஞ்ஞானரீதியாகச் சொல்வது என்றால், ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களும் கோள்களும் இந்தப் பால்வீதியில் உள்ளன’ என்றான். பளார் என்று ஓர் அறைவிட்ட அப்பா சொன் னார், 'டேய் மடையா, நம் கூடாரத்தை யாரோ திருடிவிட்டார்கள்!’ ''
- சி.பூவேந்தன், சென்னை-52.
''சமச்சீர்க் கல்விக்காக யார் யாரோ போராட்டம் நடத்துகிறார்களே, ஆசிரியர்கள் ஏன் போராட்டத்தில் குதிக்கவில்லை?''
''இதையேதான் ஓர் ஆசிரியரிடம் கேட்டேன். 'ஏன் நாங்க நிம்மதியா இருக்கிறது உங்களுக்குப் பிடிக்கலையா? ஒரே கையெழுத்தில், ஒன்றரை லட்சம் பேரை வீட்டுக்கு அனுப்பியது இன்னும் நினைவில் இருக்கிறது’ என்றார் அந்த ஆசிரியர். சரிதானே?''
- பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.

''விஜயகாந்த் தமிழக முதல்வர் ஆனால்..?''
''தேனாம்பேட்டையில் மேம்பாலம் கட்டுவதற்காக அறிவாலயமும் அன்பகமும் இடிக்கப்படும். மேம்பாலப் பணிகளை அதிகாலையில் டிராக் ஷூட்டோடு வந்து மேற்பார்வை இடுவார் உள்ளாட்சித் துறை அமைச்சர் சுதீஷ்!''
- பழநி.சங்கர், சென்னை-107.
'' 'தமிழ்நாட்டில் காங்கிரஸ் தோற்றதற்கு தங்கபாலுதான் பொறுப்பு!’ என்று காங்கிரஸ்காரர்களே குற்றம்சாட்டுகிறார்களே?''
''இது அவருக்குப் பெருமைதானே! இனி, அவரை யாரும் 'பொறுப்பில்லாதவர்’ என்று சொல்ல முடியாதே!''
- தாமு, தஞ்சாவூர்.
''சமீபத்தில் உங்களை முகம்சுளிக்க வைத்தது..?''
''பொதுவாக, மன்னிப்பு கேட்பதும் மன்னிப்பதும் மனித இனத்தின் மகத்தான குணங்கள். ஆனால், சமீபத்திய மன்னிப்பு கேட்பு ஒன்று அருவருப்பையே தந்தது. இந்தியா வந்த இலங்கை எம்.பி-க்களுக்கு தமிழக எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்களை அடக்கிய நாடாளுமன்ற சபாநாயகர் மீராகுமார், தமிழக எம்.பி-க்களின் நடவடிக்கைகளுக்காக இலங்கை எம்.பி-க்களிடம் மன்னிப்பு கேட்டது தமிழர்களால் மன்னிக்க முடியாத விஷயம். உண்மையில், மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டியது தமிழர்களிடம்தானே தவிர, போர்க் குற்றவாளிகளான இலங்கை அரசின் பிரதிநிதி களிடம் அல்ல!''
- நிலோஃபர், ஊட்டி.
