விகடன் வரவேற்பறை
முன்றில் - இதழ் தொகுப்பு தொகுப்பாசிரியர்: பேரா.காவ்யா சண்முகசுந்தரம்
வெளியீடு: காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், சென்னை-24.
பக்கங்கள்: 704 விலை:

550

1988 முதல் 1996 வரை வெளிவந்த 'முன்றில்’ சிறு பத்திரிகையில் வெளியான கவிதைகள், சிறுகதைகள், விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு. மா.அரங்கநாதன், க.நா.சு, அசோகமித்திரன் என்னும் மூவரின் முயற்சியால் வெளிவந்த பத்திரிகை 'முன்றில்’. க.நா.சு-வை முற்போக்குக்கு எதிரானவராகவே அறிந்திருப்போம். ஆனால், 'இந்தி என்னும் பிரிவினை சக்தி’ என்னும் கட்டுரை, திருக்குறளில் உள்ள அவைதீகக் கூறுகள் மற்றும் பெரியாரின் கடவுள் மறுப்பு குறித்த க.நா.சு-வின் கருத்துகள் அவரது இன்னொரு பக்கத்தை அறிய வாய்ப்பு அளிக்கின்றன. சுஜாதாவின் 'மஞ்சள் ரத்தம்’ சிறுகதை குறித்து ரவிக்குமார் மற்றும் ராஜன்குறையின் வெவ்வேறு பார்வைகளை முன்வைக்கும் கட்டுரைகள் ஒரு படைப்பின் வெவ்வேறான வாசிப்பின் சாத்தியங்களுக்கான உதாரணம்!
பேயோன் பக்கம்! www.writerpayon.com

ட்விட்டரில் தன் அடையாளம் மறைத்து எழுதி 'யார் இவர்’ எனக் கவனிக்கவைத்த பேயோன் என்பவரின் வலை தளம். 'சிரிக்கும் சூரியன்/ சிரிக்கும் ரயில்/ சிரிக்கும் நண்டு/ எல்லாமே சிரித்தாக வேண்டும்/ குழந்தைகளுக்கு’ என்று கவிதையிலாகட்டும், 'இலக்கின்மை சார்ந்த வாளா விருத்தலுக்குத் தீர்வாக உலகாயுதவாதத்தை முன்வைக்கிறது...’ என்று 'பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்துக்கு விமர் சனம் எழுதுவதில் ஆகட்டும் வாசிப்புச் சுகம் சேர்க்கும் சுவாரஸ்யம்!
தேசமே என் சுவாசம் இயக்கம்: சி.ஆர். வெளியீடு: ஜீவானந்தம் ரத்தினம் ஃபிலிம்ஸ்

சாணியில் விழப்போகும் தேசியக் கொடியைக் காப்பாற்றப்போய் விபத்தில் உயிரிழக்கிறான் ஒரு பள்ளிச் சிறுவன். அந்தச் சிறுவனின் பெற்றோரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார் ஒரு போலீஸ்காரர், ஊரையே சுற்றி வந்த பின், அது தன் மகனோ என்கிற சந்தேகம் எழுகிறது அவருக்கு. அது அவரது மகன்தானா என்பது க்ளைமாக்ஸ். லாஜிக்கில் கோட்டை விட்டிருந்தாலும், யாரோ பெற்ற புள்ளைக்காக அழும் ஒரு தாய், 'எனக்கு இன்னும் கல்யாணம் முடியலை’ என்று வெடுக்கென முகம் திருப்பும் இளம் பெண் என சின்னச் சின்ன கேரக்டர்கள் காட்டி சுவாரஸ்யம் கூட்டுகிறார்கள்!
தமிழ் அலைவரிசை!
www.tamilradios.com

தமிழ் வானொலி நிகழ்ச்சிகள், பண்பலை பொழுதுபோக்குகள், முக்கியமான தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசைகள் என எல்லாமே இந்த வலைதளத்தில் அடக்கம். தவிர, ஒரே சொடுக்கில் தமிழ் எம்.பி.3 பாடல்களைக் கேட்பதற் கான தளத்தையும் இணைத்திருக்கிறார்கள்!
மல்லுக்கட்டு இசை: தாஜ்நூர்
வெளியீடு: க்யூபர் ஏவி விலை:

60

ஹரிசரணின் குரலில் முதல் பாடலாக ஒலிக்கும் 'என்ன என்ன’ தாஜ்நூரின் இசை மீது நம்பிக்கை கொள்ள வைக்கிறது. 'கும்தலக்கடி’, 'மாப்பிள்ளைக்குத் தோழன்’ ஆகிய பாடல்களின் துள்ளல் இசையில் உற்சாக அலை. ஆண்டாள் பிரியதர்ஷிணி எழுதிய 'வெட்கம் நூறு கிலோ’ பாடல் தொடங்கு முன்னும் இடையிடையேயும் வரும் புல்லாங்குழல் இசை அத்தனை சுகம்! 'கலர் கலராய்’ பாடல் முகேஷின் குரலுக்கு டெடிகேட்!