'எங்கள பாடச் சொல்லாத... நாங்க கண்டபடி பாடிப்புடுவோம்..!' ஸ்மூல் ஆப் சட்டதிட்டங்கள் | Satire article on rules to sing in Smule app

வெளியிடப்பட்ட நேரம்: 20:47 (14/06/2017)

கடைசி தொடர்பு:20:47 (14/06/2017)

'எங்கள பாடச் சொல்லாத... நாங்க கண்டபடி பாடிப்புடுவோம்..!' ஸ்மூல் ஆப் சட்டதிட்டங்கள்

பிடிக்காத பாட்டுகளையெல்லாம் விட்டுட்டு, பிடிச்ச பாட்டை வெச்சு செய்றதுக்குனே கண்டுபிடிக்கப்பட்ட ஆப் தான் ஸ்மூல் ஆப். இது கிச்சன்... சமைக்கலாம் பொறிக்கலாம்ங்கிற மாதிரி இது ஸ்டூடியோ பாட்டைக் கொலை பண்ணலாம்... புதைக்கலாம்... எரிக்கலாம். மொத்தத்தில் இது எங்கள் சொத்துங்கிற மாதிரியான ஆப். அட ஆமாங்க... நீங்க பாடுனா உங்கள் சொத்து.

ஸ்மூல் ஆப் - Smule App

ஃபர்ஸ்ட் பாட்டை செலக்ட் பண்ணனும். எனக்குப் பிடிச்ச பாட்டை நான் ஒற்றை ஆளாத்தான் பாடுவேன்னு கொக்கு மாதிரி ஒற்றைக் கால்ல நின்னு அடம் பிடிச்சா ஆப்காரன் 110 ரூவா கேட்டு ஆப்பு வைப்பான். நம்மளால முடியுமா... இல்லைல... அவய்ங்களா நமக்கு ரெக்கமண்டட் ஆப்சன்ல ஏதோ நாலஞ்சு பாட்டு கொடுப்பாய்ங்க. அதுல ஏதாவது ஒண்ணை செலக்ட் பண்ணிக் கொலை பண்ணுனா போதும்.

இப்போ நம்ம கூடச் சேர்ந்து பாடப் போற அந்தத் தியாக உள்ளங்களை நாமளே செலக்ட் பண்ணனும். ரெண்டு ட்ரிக் இருக்கு... ஒண்ணு நம்மளை விடக் கேவலமா பாடுறவங்களை செலக்ட் பண்ணலாம். அப்போதான் அந்த வாய்ஸ்க்கு நம்ம வாய்ஸ் எவ்வளவோ பரவால்லனு பாட்டைக் கேட்குறவங்களுக்குத் தோணும். இல்லைன்னா நம்மளை விட ரொம்ப சூப்பரா பாடுறவங்கள செலக்ட் பண்ணலாம். ஏதோ நம்ம வாய்ஸ் தான் கொஞ்சம் முன்னப்பின்ன இருந்தாலும் அவங்க வாய்ஸ் புண்ணியத்துல பொழச்சுக்கலாம். வாய்ஸ் கேட்டுப் பாட்டை செலக்ட் பண்ணும்போதே ஆப்பை விட்டுத் தெறிச்சு ஓடுனவனும் இருக்கான். அப்படிலாம் மனசைத் தளரவிடக்கூடாது. இரும்பா வச்சுக்கனும். அப்போதான் சாதிக்க முடியும். பயிற்சி உடையார் இகழ்ச்சி அடையார்..!

இதுக்கெல்லாம் முன்னாடியே நாம பண்ணவேண்டிய முக்கியமான விஷயம்... நாம பாடும்போது நம்மகூட யாருமே இருக்கக்கூடாது. மீறி யாராவது இருந்தா, அப்புறம் என்ன கொலை கேஸ்ல உள்ளபோக வேண்டியதுதான்.

நம்மளை ஒரு எஸ்.பி.பி-யாவோ சின்னக்குயில் சித்ராவாகவோ நினைச்சுப் பாட ஆரம்பிக்கும்போதுதான் போன்ல கால் வரும். அடேய் ஆரம்பமே அக்கப்போரானு மனசைத் தேத்தி ஒரு ஃப்ளோவுல பாடிக்கிட்டுருக்கும்போதே கொசுக்கள் எறும்புகள்லாம் கடிக்கும். அதையெல்லாம் கண்டுக்கப்படாது. பாட்டு போய்ருமா இல்லியா... பாடும் மக்கள் சமூகம் பொதுவாக இரவு நேரத்தையே தேர்ந்தெடுக்கிறாங்க. ஏன்னா அப்போதான் ஆள் அரவமெல்லாம் இருக்காது. பாடிக்கிட்டு இருக்கும்போது நாய் ஊளைவிடுற சத்தம் கேட்ருச்சுனு பாட்டை டெலிட் பண்ணவனும் இருக்கான். ஃபேன் சுத்துற சத்தத்துனால தான் பாட்டு நல்லாயில்ல... மத்தபடி நம்ம குரல் ஸ்ருதி சுத்தம்லாம் செம்ம'னு நம்புறவனும் இருக்கான். அந்த மனசுதான் சார் தெய்வம்!

அடடா இன்னைக்கு நம்ம குரல் தேவாமிர்தமா இருக்கேனு மூச்சு முட்டமுட்டப் பல பாடல்களைப் பாடி வெச்சு, காலையில வந்து கேட்டா அய்யே நம்ம பாடுனதா இவ்ளோ கேவலமா இருக்குனு சத்தம் இல்லாம டெலிட் பண்றதெல்லாம் எவ்வளவு பெரிய துயரம் தெரியுமா? அதையும் சந்திக்கிற மனப்பக்குவம் வேணும். 

நாம பாடுன பாட்டை நம்மளாலேயே திரும்பக் கேட்க முடியாம ஆப்பை விட்டு ஓடிப்போறவன் மனுஷன். கொய்யால... எல்லோரும் கேட்டுட்டுச் சாவட்டும்னு நினைச்சு ஷேர் பண்ணிட்டுப் போறவன் பெரிய மனுசன். பாடுறது தப்பில்ல... ஆனா நாம பாடுன பாட்டை நாமளே திரும்பத் திரும்பக் கேட்டு ப்ளே ஆப்ஷன்ல ஸ்கோர் ஏத்துறதுலாம் ரொம்ப தப்பு..!

கல்பனா அக்கா - மண்ணை சாதிக்

ஆனா ஒண்ணு, பாடத் தெரியுதோ பாட வருதோ அதெல்லாம் ரெண்டாவது விஷயம். முதல் விஷயம் பாட்டு ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி ஹாய்... முடிஞ்சதுக்கு அப்புறம் தேங்க்யூ இதெல்லாம் சொல்லத் தெரிஞ்சுருக்கணும். பாடும்போது ஏற்படும் தவறுகளை எல்லாம் மன்னித்துக் கொள்ளுங்கள் ஆண்டவரேனு மக்கள்கிட்ட மன்னிப்புக் கேட்கத் தயாரா இருக்கணும். அப்போதான் இந்தத் துறையில ஜொலிக்க முடியும்.

மின்னுவதெல்லாம் பொன்னல்ல... அது போல நீங்க பாடி நீங்களே கேட்டுக்குற வாய்ஸ் உங்களோடது இல்ல... நம்ம மனசு சங்கடப்படக் கூடாதேனு ஆப் காரன் பட்டி டிங்கரிங் பார்த்து தர்றது அது. அந்த நல்ல உள்ளம் எங்கிருந்தாலும் வாழ்க!

ஏண்டா ஏன்... உன் குரல்ல ஸ்ருதியே சேர மாட்டேங்குதுனு மனசாட்சி கேட்குதா... ஒரே ஒரு நிமிஷம் கண்ணை மூடிக் கல்பனா அக்காவையும் மன்னை சாதிக்கையும் நினைச்சிப் பாருங்க. டன் கணக்குல தன்னம்பிக்கை வந்து கொட்டும்.

வெறும் வாய்ஸ்க்கே இப்படினா வீடியோ ரெக்கார்டிங் பார்க்குறவய்ங்க எல்லாம் உயிரோட இருப்பாய்ங்கனு நினைக்கிறீங்க..? மூஞ்சியை மறைப்போம்... மனித நலம் காப்போம்! ஸ்மூல் ஆப்காரனுக்கு நாம் கொடுக்குற ஒரே ஒரு ஃப்ரீ அட்வைஸ் இது தான்.'எங்களா பாடச் சொல்லாத... நாங்க கண்டபடி பாடிப்புடுவோம்..!'

பின்குறிப்பு: இது என் சொந்த அனுபவம் அல்ல. உண்மையான பாடகர்கள் மாற்றுப்பாதையில் செல்லவும். 

இதுவரைக்கும் பாடாதவங்க இதுக்கு மேலேயும் பாடியேதான் ஆகணும்னா லிங்க் இந்தா இருக்கு... உங்க முறைக்கு நாலு பேரைக் கதற விடுங்க... Smule App
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்