Published:Updated:

“ஓரினச் சேர்க்கை தடை... தனி மனித உரிமைக்கு எதிரானது!” அஞ்சலி கோபாலன்

“ஓரினச் சேர்க்கை தடை... தனி மனித உரிமைக்கு எதிரானது!” அஞ்சலி கோபாலன்
“ஓரினச் சேர்க்கை தடை... தனி மனித உரிமைக்கு எதிரானது!” அஞ்சலி கோபாலன்

“ஓரினச் சேர்க்கை தடை... தனி மனித உரிமைக்கு எதிரானது!” அஞ்சலி கோபாலன்

ஞ்சலி கோபாலன்  உலகம் முழுக்க ஒலிக்கும் ஒரு தமிழ்ப் பெண் பெயர். மாற்றுத்திறன் விலங்குகள் இவரின் தத்துப் பிள்ளைகள். இவரது செல்ல அணைப்பில் கைவிடப்பட்ட விலங்குகள் அமைதியாக உறங்குகின்றன. பறவைகள் மற்றும் விலங்கினங்களுக்காக டெல்லியில் நடத்தும் 'ஆல் கீரீச்சர்ஸ் கிரேட் அண்டு ஸ்மால்' என்ற பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு மையத்தில் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட உயிரினங்கள் உள்ளன. 

அஞ்சலி கோபாலனின் சொந்த ஊர் சென்னை. தந்தை கோபாலன், இந்திய விமானப் படை அதிகாரி. இவரின் தாய், ஒரு சீக்கியர். இந்தியாவிலும் அமெரிக்காவிலும் தன் படிப்பை முடித்தார் அஞ்சலி கோபாலன். பொலிடிகல் சயின்ஸ், இதழியல், பன்னாட்டு வணிக மேலாண்மை எனப் பல துறைகளைப் படித்தார். விளிம்புநிலை மக்களுக்குச் சிறப்பான சேவை புரிந்ததற்கான காமன் வெல்த் விருது (2001), எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணியாற்றியமைக்காக, சத்குரு ஞானானந்தா விருது (2003), இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் பெண் சாதனையாளர் விருது (2007), டைம்ஸ் இதழ் வெளியிட்ட உலகின் 100 வலிமைமிக்கவர்கள் பட்டியலில் பதினைந்தாம் இடம் (2012), செவாலியர் விருதுபெற்ற முதல் தமிழ்ப் பெண் (2013) என சாதனைகளால் நிரம்பியுள்ளது இவரது வாழ்க்கைப் பயணம். 2005 ஆம் ஆண்டு இந்தியாவின் சார்பில் நோபல் விருதுக்கும் அஞ்சலி பரிந்துரைக்கப்பட்டார். 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில்தான் இவரது சேவைப் பணி தொடங்கியது. அங்கே, எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டு தவித்தவர்களுக்கு உதவிக்கரம் நீட்டினார். அதன் தொடர்ச்சியாக 1995 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தவர், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி மையம் ஒன்றை புது டெல்லியில் நிறுவினார். இதுவே, நாஸ் அறக்கட்டளையாக உருவெடுத்தது. எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான கேர் ஹோமையும் ஆரம்பித்தார். தற்போது, இவரது அரவணைப்பில் 32 எச்.ஐ.வி. குழந்தைகள் உள்ளனர். இவர் தத்தெடுத்த முதல் குழந்தை, இன்று கல்லூரி மாணவர். 

ஒரு பாலின ஈர்ப்பு உள்ளவர்களுக்கான உரிமைகளுக்காகத் தனது நாஸ் அறக்கட்டளை வழியே 2001 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து போராடிவருகிறார். ''இந்தியாவின் 377-வது சட்டப் பிரிவு, இயற்கைக்கு மாறான உடலுறவைத் தடை செய்கிறது. ஆரம்பத்தில் வாயும் ஆசனவாயும் பங்குபெறும் கல்வி, இயற்கைக்கு விரோதமானதாகக் கருதப்பட்டது. பிறகு, ஒரு பால் உறவைத் தடை செய்தது. இதுபோன்று தனிமனித விருப்பத்தைத் தண்டனைக்குரியதாகக் கருதும் இந்தச் சட்டம், மனித உரிமை மீறலாக உள்ளது'' என்கிறார். 

‘‘இதற்கான போராட்டத்தில் ஒரு பெண்ணாக நான் சந்தித்த நெருக்கடிகள் அதிகம். அரசியல் கட்சிகள், மத அமைப்புகள், தனி நபர் மிரட்டல்கள் எனப் பல வகைகளில் எதிர்ப்புகளைச் சந்தித்தேன். எதைப் பற்றியும் கவலைப்படாமல் போராட்டத்தைத் தொடர்ந்தேன். ஒரு பால் விருப்பத்தை அறிவியல்பூர்வமாகப் பார்க்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் 2009 ஆம் ஆண்டு சொன்னது. ஆனால், உச்ச நீதிமன்றம் இதை ஏற்காமல், நாடாளுமன்றத்தின் முடிவுக்கு விட்டுவிட்டது. எனவே, இன்றளவும் போராட்டம் தொடர்கிறது.

இந்தப் போராட்டம் வெற்றிபெற்றால், ஒரு பால் ஈர்ப்பு உள்ளவர்களுக்கு உரிமைகளும் பாதுகாப்பும் கிடைக்கும். பாலியல் குறித்து மக்களிடம் உள்ள தவறான எண்ணங்கள் மாறும். இதற்கான ஆண்டுகள் கடக்கலாம், ஆனாலும், ஒருநாள் இது நடக்கும். சங்க காலம், வேதம் அனைத்திலும் ஒரு பால் ஈர்ப்பு இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. ஆனால், இப்போதுதான் தங்களது உண்மை இயல்பை வெளியில் சொல்ல முடியாத அளவுக்குச் சமுதாயம் இறுக்கமாக உள்ளது. கணினி அறிவியலின் தந்தை என்று அழைக்கப்படும் ஆலன் டியூரிங் ஒரு பால் ஈர்ப்பு உடையவர். ஒரு பால் ஈர்ப்பினர் திறமையில் சளைத்தவர்கள் அல்ல. உலகின் பல நாடுகள் ஒரு பால் ஈர்ப்பை அங்கீகரித்துள்ளன. இந்தியாவிலும் அந்த நிலை வரவேண்டும்’’ என்கிறார் அஞ்சலி கோபாலன். 

ஒதுக்கப்பட்டவர்களுக்காகத் தனது வாழ்வை அர்ப்பணித்த அஞ்சலிக்கு கிரேட் சல்யூட்! 

அடுத்த கட்டுரைக்கு