Published:Updated:

''அடுத்த வாரம் நான் மிஸஸ்!'' - பூரிக்கும் தலையணை பூக்கள் வனிதா

வெ.வித்யா காயத்ரி
''அடுத்த வாரம் நான் மிஸஸ்!'' - பூரிக்கும் தலையணை பூக்கள் வனிதா
''அடுத்த வாரம் நான் மிஸஸ்!'' - பூரிக்கும் தலையணை பூக்கள் வனிதா

'தெய்வமகள்', 'தலையணைப் பூக்கள்' என பல்வேறு சீரியல்கள் வழியே தமிழ்க் குடும்பங்களின் உள்ளங்களைக் கவர்ந்தவர் வனிதா. வெள்ளித்திரையிலும் வலம் வந்துகொண்டிருக்கும் அவருடன் சில நிமிடங்கள் பேசியதிலிருந்து... 

''நடிப்பு வாய்ப்பு கிடைச்சது எப்படி?'' 

''நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னைதான். லயோலா கல்லூரியில் பி.எஸ்.சி விஸ்காம் படிக்கும்போதே ஷார்ட் ஃபிலிம்களில் நடிச்சேன். அதைப் பார்த்து, 'வணக்கம் சென்னை' படத்தில் நடிக்க கூப்பிட்டாங்க. அதுதான் என் முதல் படம்.'' 

''வெள்ளித்திரையிலிருந்து சின்னத்திரைக்கு ஏன் வந்தீங்க?'' 

'' 'தெய்வமகள்' சீரியல்ல வில்லி ரோலுக்கு கேட்டாங்க. 'எனக்கு வில்லி ரோல் செட்டாகாது. வேற ரோல் இருந்தா சொல்லுங்க'னு சொன்னேன். அப்புறம்தான் ராகினி கேரக்டருக்கு ரீப்ளேஸ்மென்ன்டா வாய்ப்பு கிடைச்சது. சீரியல் சூட்டிங் தினமும் இருக்கும். எல்லா ஆர்டிஸ்டும் நல்லாப் பழகுவாங்க. வீடு மாதிரி ஃபீல் இருக்கும். அதனால், சின்னத்திரை ரொம்பவே பிடிச்சுப்போச்சு. இப்பவும் சில சினிமாக்களில் நடிச்சுட்டுதான் இருக்கேன்.'' 

''உங்க பாட்டிதான் உங்களுக்கு ரொம்ப ஃபேவரைட்டாமே....'' 

''ஆமாம்! என் பாட்டிதான் எனக்கு எல்லாமே. டிரஸ் செலக்ட் பண்றது, தலையைப் பின்னிவிடுறதுனு எல்லாமே செய்வாங்க. என் தங்கச்சி பிளஸ் டூ படிக்கிறா. அவளும் நானும் சண்டை போடும்போது அதிகமா எங்களை திட்டறதும் பாட்டிதான்; சமாதானம் செய்யறதும் பாட்டிதான். இப்போ, கல்யாணம் முடிஞ்சி போகப்போறேனு வீடே வருத்தத்துல இருக்கு.'' 

''உங்களுக்குக் கல்யாணமா..?'' 

''ஆமாங்க. அவர் பெயர் கார்த்திக். ஜெர்மனியில் வொர்க் பண்றார். முதல்ல வீட்டுல கேட்டப்போ நான் ஒத்துக்கலை. 'யாருன்னே தெரியாத ஒருத்தருக்கு எப்படி உடனே ஓகே சொல்ல முடியும்?'னு கேட்டேன். அப்புறம் அவரோடு போனில் பேசினேன். என் மேல ரொம்ப கேரிங்கா இருந்தார். என் சீரியல்களைப் பார்த்துட்டு பாராட்டினார். எனக்காக டைம் ஒதுக்கி என் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பார்த்து பாராட்டின அவருடைய அப்ரோச் பிடிச்சுப்போச்சு. கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டேன். இப்போ, சென்னை வந்துட்டார். என்னோடு சூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவார். கூடவே இருந்து சூட்டிங் முடிஞ்சதும் வீட்டுல விட்டுட்டுதான் அவர் வீட்டுக்குப் போறார். கல்யாணத்துக்குப் பிறகு நடிக்க நோ பிராப்ளம்னு சொல்லிட்டார். இப்போ, சென்னையிலேயே வேலை தேடிட்டிருகார். அடுத்த வாரம் நான் மிஸஸ் கார்த்திக்.'' 

''உங்க மாமியார் எப்படி..?'' 

''அவங்க வீட்டுல கார்த்திக் ஒரே பையன். அவங்களுக்குப் பொண்ணு இல்லாததால், என்னையே அவங்க பொண்ணு மாதிரி பார்த்துப்பாங்க. எங்கே ஷாப்பிங் போனாலும், 'இங்கே ஒரு டிரஸ் பார்த்தோம். உனக்கு ரொம்ப நல்லா இருக்கும். வாங்கறோம்'னு போன் பண்ணி சொல்வாங்க. பார்த்துப் பார்த்து ஒவ்வொண்ணா வாங்கிட்டு வந்து கொடுக்கறாங்க. எனக்கு இன்னொரு அம்மாவாக மாமியார் கிடைச்சிருக்காங்க.'' 

''உங்க வருங்கால கணவர் கொடுத்த மறக்கமுடியாத சர்ப்ரைஸ் எது?'' 

''அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்குறது அல்வா சாப்பிடுற மாதிரி. எப்பவோ பேசினபோது எனக்கு நாய்க்குட்டி பிடிக்கும்னு சொன்னேன். என் பிறந்த நாளுக்குச் சென்னைக்கு வந்தவர், நாய்க்குட்டியோடு வீட்டுக்கு வந்து என்னை எழுப்பினார். அந்த நாளை மறக்கவே முடியாது.'' 

''சரி, என்னிக்கு கல்யாணம்?'' 

''ஜூலை 19. சென்னையில் கல்யாணம். மறக்காமல் வந்து எங்களை வாழ்த்துங்க.''

வாழ்த்துகள் வனிதா - கார்த்திக்!