Published:Updated:

ஆப்பிரிக்காவில் இந்திய இளைஞரின் 300 ஏக்கர் நெல் விவசாயம்!

ஆப்பிரிக்காவில்  இந்திய இளைஞரின் 300 ஏக்கர்  நெல் விவசாயம்!
ஆப்பிரிக்காவில் இந்திய இளைஞரின் 300 ஏக்கர் நெல் விவசாயம்!

கர்நாடக மாநிலம் மைசூரு அடுத்துள்ள பண்ணூர் கிராமத்தைச் சேர்ந்த 34 வயது இளைஞர் சேத்தன் கெம்பே கவுடா. இப்போது இருப்பது ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான ருவாண்டாவில். அங்கே என்ன செய்கிறார்? அங்கே அவர் மேற்கொண்டுவருவது நெல் விவசாயம். விவசாயம் என்றால், பத்து ஏக்கர், இருபது ஏக்கர் நிலத்தில் அல்ல. 300 ஏக்கர் பரப்பில். அது எப்படி சாத்தியமானது? சமீபத்தில் விவசாயம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க ஈரோடு வந்திருந்தவரிடம் பேசினோம்.

"நடுத்தர விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த நான், எங்களுக்குச் சொந்தமான 7 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தேன். நெல், வாழை, கரும்பு இந்த மூன்றும்தான் பிரதான பயிர். கட்டுப்படியாகாத விலை, பாசனத் தண்ணீர் பிரச்னை என்று எப்போதுமே போராட்டமான வாழ்க்கைதான். இருந்தாலும் விவசாயத்தில் எதாவது சாதிக்க வேண்டும் என்கிற முனைப்பு எனக்குள் இருந்து வந்தது. விவசாயம் சம்பந்தமான கண்காட்சி, கருத்தரங்கு, பண்ணைச்சுற்றுலா போன்ற நிகழ்வுகள் எங்கு நடந்தாலும் அதில் போய் முதல் நபராய் கலந்துகொள்வேன். அங்கு நான் அறிந்து கொண்ட விஷயங்களை மற்ற விவசாயிகளிடமும் பகிர்ந்து கொள்வேன்.

விவசாயிகளை கடனாளியாக்கி தற்கொலை அளவுக்கு கொண்டுபோய் தள்ளும் காரணங்களில் முக்கியமானது ரசாயன விவசாயம்தான் என்பதை சுபாஷ் பாலேக்கர் நடத்திய ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்பு ஒன்றில் கலந்து கொண்டதில் தெள்ளத்தெளிவாக புரிந்து கொண்டேன். மண்ணையும், மனிதர்களையும் காப்பாற்ற இயற்கை விவசாயம் செய்ய வேண்டியது அவசியம் என்பதையும் உணர்ந்து அதை எனது வயலில் நடைமுறைப்படுத்தினேன். இயற்கை விவசாயிகள் குழு அமைத்து நூற்றுக்கணக்கான விவசாயிகளை இயற்கை விவசாயத்தின் பக்கம் கொண்டுவந்தேன். மைசூரு மாவட்டத்தின் சிறந்த முன்னோடி விவசாயி என்கிற விருதும் பெற்றேன்.

இந்தச் சமயத்தில், 2012 ஆம் ஆண்டு வாக்கில் ஆப்பிரிக்கா நாட்டில் நடந்த சர்வதேச விவசாய கண்காட்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முன்னோடி விவசாயிகள் பலருடன் ஆப்பிரிக்கா சென்று கண்காட்சியில் பங்கேற்றேன். கண்காட்சியை ஒட்டி தினம்தோறும் கருத்தரங்குகளும் நடந்தது. அதில் ஆப்பிரிக்கா நாட்டைச்சேர்ந்த விவசாய வல்லுநர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பேசினார்கள்.

நடந்த கருத்தரங்கில் வேளாண் அதிகாரி ஒருவர் பேசும்போது ‘‘ மண்வளம், மனிதவளம், நீர் வளம் நிறைந்த ருவாண்டா நாட்டில் நெல் விவசாயம் சிறப்பாக இல்லை. போதிய மகசூலும் கிடைப்பதில்லை. எனவே, கடுமையான உழைப்பும், தொழில் நுட்ப அறிவும் கொண்ட இந்தியா போன்ற நாட்டில் உள்ள விவசாயிகள் ருவாண்டா நாட்டில் வந்து விவசாயம் செய்யலாம். அதற்கான ஏற்பாடுகளை ருவாண்டா அரசாங்கமே செய்து தரும் என்று அழைப்பு விடுத்தார்.

அதைத் தொடர்ந்து ஊர்திரும்பியதும் நண்பர்கள் சிலரின் ஆலோசனைப்படி ருவாண்டா நாட்டுக்கு விமானம் ஏறினேன். அந்த நாட்டில் தனியார் நிலம் என்பதே கிடையாது. எல்லா நிலமும் அரசாங்கத்துக்குத்தான் சொந்தம். தேவைப்பட்டவர்கள் அரசாங்கத்திடம் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்யலாம். அந்த அடிப்படையில், 300 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்தேன். தனி மனிதனாக இருந்து 300 ஏக்கர் நிலத்தை நிர்வாகம் செய்வது கடினம் என்பதால், குழுவாக விவசாயம் செய்ய முடிவு செய்து, என்போல் ஆர்வம் உள்ள விவசாய நண்பர்கள் சிலரையும் இணைத்துக்கொண்டேன். அவர்களையும் ருவாண்டா நாட்டுக்கு வரவழைத்தேன்.

கடந்த மூன்று ஆண்டாக ருவாண்டா நாட்டில் நெல் விவசாயத்தில் கொடிகட்டிப் பறக்கிறோம். அந்த நாட்டு விவசாயிகளைக் காட்டிலும் இரண்டு மடங்கு மகசூலை எடுப்பதால், அந்த அரசாங்கத்தின் பாராட்டு கிடைத்துள்ளது. நடவு முதல் அறுவடை வரை இயந்திரங்களைத்தான் பயன்படுத்தி வருகிறோம். அந்த நாட்டைப் பொறுத்தவரை, ரசாயன விவசாயம்தான் பிரதானமாக இருக்கிறது. எங்களுக்கும் முழுமையாக இயற்கை விவசாயம் செய்ய முடியாத சூழல் உள்ளது. அந்த நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு உள்பட்ட அரசாங்க அனுமதியுடன் 10 ஏக்கரில் மட்டும் இயற்கை விவசாய நெல் சாகுபடியை மேற்கொண்டு வருகிறோம். ருவாண்டா நாட்டின் நாட்டு மாடுகள் இந்திய நாட்டு மாடுகளைப்போலவே பாரம்பர்யம் மிக்கவை. அந்த மாடுகளின் சாணம், சிறுநீர் உள்ளிட்ட பொருள்களை பயன்படுத்தி ஜீவாமிர்தம் தயாரித்து நெல் வயலுக்கு கொடுத்து வருகிறோம். நமது உழைப்பும், சாகுபடி நுட்பமும் அந்த நாட்டினரை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த நாட்டைச் சேர்ந்த விவசாயிகள் பலரும் எங்களது வயலுக்கு நேரில் வந்து சாகுபடி முறைகளைப் பார்த்து செல்கிறார்கள் என்பது நமக்கான இந்தியப்பெருமை. 

காலப்போக்கில் 300 ஏக்கரிலும் இயற்கை விவசாயம் மேற்கொள்ள வேண்டும் என்கிற லட்சியத்துடன் ருவாண்டாவில் நடக்கிறது எங்களது குழு விவசாயம்.

அனைத்து வளமும் கொண்ட அமைதியான ருவாண்டா சுற்றுச்சூழல் மாசில்லாத ஒரு நாடு. அதை ஒரு போதும் சீர்கேடு செய்யக்கூடாது என்கிற எண்ணம் கொண்டவர்களை அந்த நாடு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது என்றார் சேத்தன் கெம்பே கவுடா.

திரைக்கடல் ஓடி திரவியம் தேடு என்றார் ஔவை கிழவி. திரைக்கடல் ஓடி கழனி செய் என்று அதை மாற்றி சொல்லும் காலம் வந்து விட்டது.