Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மோசடி நிதி நிறுவனங்களைத் தவிர்ப்பது எப்படி?

மோசடி நிதி நிறுவனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களிடம் விழிப்புஉணர்வு அதிகரித்தால்தான் மோசடிகள் குறையும். ஆனால், படித்தவர்கள்தான் அதிகளவில் ஏமாறுகின்றனர். `ஈமு கோழி, நாட்டு கோழி வளர்ப்புத் திட்டம், கொப்பரைத் தேங்காய் திட்டம்' என்ற பெயரிலும், வேறு வழிகளிலும் லாபம் கிடைக்கும் என்ற விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் ஏமாந்து வருகின்றனர். 

மோசடி நிதி நிறுவனங்களிலிருந்து ஏமாற்றப்படாமல் இருக்க சில ஆலோசனைகள்...

1. வங்கிசாரா நிறுவனங்கள் (Non Banking Financial Institutions) கட்டாயமாக, இந்திய ரிசர்வ் வங்கியிடம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனங்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள், இந்திய ரிசர்வ் வங்கி இணையதளத்தில் (http://rbi.org.in) பட்டியலிடப்பட்டுள்ளன. 

2. அனைத்து நிதி நிறுவனங்களும் பொதுமக்களிடமிருந்து பணத்தை முதலீடாகப் பெற முடியாது. ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் டெபாசிட் வாங்குவதற்கு அதிகாரமுள்ள நிறுவனங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 

நிதி நிறுவனங்கள்

3. டெபாசிட் பெறும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள், அதிகபட்சமாக ஐந்தாண்டு முதிர்வு காலத்திற்கு மட்டுமே டெபாசிட் பெற முடியும். இதுபோன்ற நிதி நிறுவனங்கள் அதிகபட்சமாக 12.5 சதவிகிதம் மட்டுமே வட்டியாகத் தரமுடியும். 

4. இந்த நிதி நிறுவனங்கள், மக்களிடமிருந்து டெபாசிட் பெறுவதற்கு பரிசுப் பொருள்கள், ஊக்கத்தொகை முதலியவற்றைத் தருவது தடைசெய்யப்பட்டுள்ளது. ஆகவே பொதுமக்கள் தங்களிடமுள்ள பணத்தை வங்கி சாரா நிதி நிறுவனத்தில் போடுவதற்கு முன்னால் அல்லது அது போன்ற நிறுவனத்திடமிருந்து கடன் பெறுவதற்கு முன்னர் பின்வரும் கேள்விகளைக் கேட்கத் தவறக்கூடாது.

அ) அந்த நிதி நிறுவனம் இந்திய ரிசர்வ் வங்கியிடம் பதிவு செய்யப்பட்டுள்ளதா? 

ஆ) அவ்வாறு பதிவு செய்யப்பட்டிருந்தால், மக்களிடமிருந்து டெபாசிட் பெறும் உரிமையுள்ள நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா?

இ) டெபாசிட்மீது அந்நிறுவனம் அளிக்கும் வட்டி 12.5 சதவிகிதத்துக்குக் கூடுதலாக இல்லாமல் உள்ளதா? 

ஈ) டெபாசிட்டுக்கான அதிகபட்ச முதிர்வு காலம் ஐந்தாண்டுகளுக்கு மிகாமல் இருக்கிறதா?

உ) முதலீடு செய்யப்படும் பணத்திற்கு முறையான ரசீது வழங்கப்படுகிறதா?

ஊ) நீங்கள் கடன் வாங்குவதாக இருந்தால் நீங்கள் கையெழுத்திட்ட கடன் ஒப்பந்த நகல் உங்களுக்குத் தரப்படுகிறதா?

மேற்கூறிய அனைத்து கேள்விகளுக்கும் பதில் `ஆம்' என்றிருந்தால் மட்டுமே அத்தகைய நிறுவனத்துடன் கொடுக்கல், வாங்கல் வைத்துக் கொள்ளலாம்.

5. டெபாசிட் பெறுவதற்கு பரிசுப் பொருள்கள் அல்லது ஊக்கத்தொகை கொடுப்பதாக விளம்பரப்படுத்தி இருந்தால், அது போன்ற நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் சட்ட திட்டங்களுக்கு மீறி செயல்படுபவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

6. மிக அதிக வருமானம் கிடைக்கும், கிடைக்கும் என்று அளிக்கப்படும் வாக்குறுதிகளை நம்ப வேண்டாம்.

7. பொதுமக்களிடமிருந்து முதலீடுகளை வாங்கும் நிதி நிறுவனங்கள், தாங்கள் பெறும் முதலீடுகளை எந்த விதமான திட்டத்தில் முதலீடு செய்து, பணத்தைப் பெருக்கி முதலீட்டாளர்களுக்குத் திருப்பி தருகிறார்கள் என்பதையும், உண்மையில் அதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதா என்பதையும் ஆராய்ந்து பார்த்து முதலீடு செய்ய வேண்டும்.

8. பொதுமக்கள் முதலீடு செய்யும் முன்பு, தாங்கள் முதலீடு செய்யும் தொகையைத் திருப்பி கொடுக்கும் அளவிற்கு அந்த `நிறுவனத்திற்கு அசையும் மற்றும் அசையா சொத்துகள் போதுமானதாக உள்ளதா?' என்பதை ஆராய்ந்து பார்த்து முதலீடு செய்ய வேண்டும்.

9. பரிசு சீட்டு மற்றும் பணச்சுழற்சி திட்ட தடை சட்டம் 1978-ன் கீழ் பணச்சுழற்சி திட்டங்கள், தடை செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற திட்டங்களில் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம்.

10. அதிகாரபூர்வமற்ற நிதி நிறுவனங்கள் மற்றும் பணச்சுழற்சி திட்டங்களை நடத்துவோர் பற்றி தகவல் இருந்தால், அந்தந்த மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவியுங்கள். 

இந்தியாவில் பல நிறுவனங்கள் பல்லாயிரம் கோடி ரூபாய் பணத்தை மோசடியாக சுருட்டியுள்ளன. பல நிதி நிறுவனங்கள் உண்மைக்குப் புறம்பாக விளம்பரம் செய்து தங்களின் பாலிசியை விற்கின்றன. ஆசைகாட்டி ஏமாற்றும் நிதி நிறுவனங்களிடம், படித்தவர்கள்தான் முதலில் ஏமாறுகின்றனர். மக்களே... அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை தொலைத்து விடாதீர்கள். மோசடி நிதி நிறுவனங்களை தவிர்ப்பீர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement