வெளியிடப்பட்ட நேரம்: 11:10 (16/06/2017)

கடைசி தொடர்பு:11:10 (16/06/2017)

இனி தங்கம்போல பெட்ரோல், டீசல் விலையும் தினமும் மாறும்!

உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலையில் நிகழும் மாற்றம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப, நாடு முழுவதும் பெட்ரோல் - டீசல் விலையை 15 நாள்களுக்கு ஒருமுறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றிவந்தன. ஆனால், தங்கம்போலவே பல சர்வதேச நாடுகளில் பெட்ரோல் - டீசல் விலை தினசரி மாற்றத்துக்கு உள்ளாகிறது. எனவே, இந்தியாவிலும் பெட்ரோல் - டீசல் விலையை தினசரி மாற்றியமைக்க முடிவுசெய்யப்பட்டது.

பெட்ரோல்

 

பாண்டிச்சேரி, விசாகப்பட்டினம், உதய்பூர், ஜாம்ஷெட்பூர், சண்டீகர் ஆகிய ஐந்து நகரங்களில் பரிசோதனை அடிப்படையில் கடந்த மே 1-ம் தேதி முதல் பெட்ரோல் - டீசல் விலை தினசரி மாற்றப்பட்டுவந்தது. இது வெற்றிகரமாக அமைந்ததால், இந்த முறையை நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு முடிவுசெய்யது.

திடீர் ஸ்டிரைக் அறிவிப்பு... வாபஸ்... நடந்தது என்ன?

இந்நிலையில் BP, HP, IOC ஆகிய எண்ணெய் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள், மத்திய பெட்ரோலியத் துறை மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிராதனைச் சந்தித்து பெட்ரோல் - டீசல் விலையை தினசரி மாற்றுவது குறித்துப் பேசினர். இதைத் தொடர்ந்து நாடெங்கும் பெட்ரோல் - டீசல் விலையை தினசரி மாற்றியமைக்க அவர் ஒப்புதல் அளித்தார். எனவே, அதன்படி இன்று முதல் (மே 16, 2017) இந்த விதிமுறை இந்தியா முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சுமார் 4,850 பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனைநிலையங்கள் உள்ளன.

 

டீசல்

இதற்கு அதன் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், மத்திய அரசின் இந்த விலை நிர்ணயக்கொள்கையைக் கண்டித்தும் இனறு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். இந்நிலையில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சரான தர்மேந்திர பிரதானை அகில இந்திய பெட்ரோலியம் டீலர்கள் கூட்டமைப்புச் சங்கத்தின் தலைவர் பிரபாகர் ரெட்டி சந்தித்துப் பேசினார். இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, இன்று முதல் பெட்ரோல் பங்க் டீலர்கள் மேற்கொள்ளவிருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டார். 

 

petrol

“பெட்ரோல், டீசலுக்கு தினசரி விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக எங்களுக்கு எழுந்த பல பிரச்னைகளை அமைச்சர் தீர்த்துவைத்தார். இதையடுத்து எங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றோம்” என பிரபாகர் ரெட்டி கூறியுள்ளார். ஒவ்வொரு நாளும் இரவு 8 மணிக்கு, அடுத்த நாளுக்கான விலை குறித்த விவரம் டீலர்களுக்குத் தெரிவிக்கப்படும். கூடவே பெட்ரோல் பங்க்கில் இருக்கும் LED ஸ்க்ரீன் மூலம் அன்றைய பெட்ரோல் - டீசல் விலை விவரங்கள் பார்வைக்கு வைக்கப்படும். ஆக, தினசரி நிர்ணயிக்கப்படும் பெட்ரோல் - டீசல் விலை நள்ளிரவு 12 மணிக்குப் பதிலாக ஒவ்வொரு நாளும் காலை 6 மணி முதல் அமல்படுத்தப்படும் என BP, HP, IOC ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

தினமும் விலையைத் தெரிந்துகொள்வது எப்படி?

பெட்ரோல் - டீசல் விலைகள் தினமும் எவ்வளவு மாறுகின்றன என்பதைத் தெரிந்துகொள்ள, அதற்கேற்ற முன்னேற்பாடுகளை எண்ணெய் நிறுவனங்கள் செய்துவிட்டன. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், Fuel@IOC என்ற ஆப்பைப் பிரத்யேகமாக அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட்ஃபோன் இல்லாதவர்கள், RSP < SPACE > DEALER CODE போன்ற விவரங்களை 9224992249 என்ற எண்ணுக்கு SMS அனுப்பியும் அன்றைய பெட்ரோல் - டீசல் விலைகளைத் தெரிந்துகொள்ளலாம். 

diesel

இவர்களைத் தொடர்ந்து, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனும் `HPPRICE < SPACE > DEALER CODE' ஆகிய தகவல்களை 9222201122 என்ற எண்ணுக்கு SMS அனுப்பி, அன்றைய பெட்ரோல் - டீசல் விலையைத் தெரிந்துகொள்ளும் வசதியைக் கொண்டுவந்திருக்கிறது. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், `RSP <SPACE > DEALER CODE' என்ன என்பதை 9223112222 என்ற எண்ணுக்கு SMS அனுப்பி, அன்றைய பெட்ரோல் - டீசல் விலைகளைத் தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது. 

BP HP IOC

இதுதவிர, 1800 - 22 - 4344 என்ற ஹாட்லைன் டோல் ஃப்ரி எண்ணையும் தொடர்புகொள்ளலாம். இப்படி அரசாங்கத்தைச் சேர்ந்த பெட்ரோலிய கார்ப்பரேஷன் நிறுவனங்கள், பெட்ரோல் - டீசல் விலைகளை அறிவதற்குப் பல வசதிகளைச் செய்து தந்திருக்கின்றன.  இந்த நிலையில், தனியார் பெட்ரோலிய நிறுவனங்களான ஷெல், எஸ்ஸார் ஆகியோரிடமிருந்து எந்தவிதமான அறிவிப்பும் வரவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்