எத்தனை வருடம் வாழ்வோம்? இனி அறிவியல் சொல்லும்..! #AI

Artificial intelligence AI

ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (Artificial intelligence - AI) உருவாக்கியுள்ளனர். இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், ஒருவர் இன்னும் எத்தனை ஆண்டுகாலம் உயிர் வாழப்போகிறார் என்பதை கண்டுபிடிக்கும். தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டு பல்கலைகழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தான் இந்த புது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார்கள்.

மனித உறுப்புகளின் புகைப்படங்களை ஆராய்ந்து மனிதனின் ஆயுளை கணக்கிட இந்தச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் முடியும். முதலில் சி.டி.ஸ்கேன் வாயிலாக மனித உறுப்புகளை ஸ்கேன் செய்து புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்ளும். பின் அந்த புகைப்படங்களை ஆராய்ந்து, ஒருவர் இன்னும் எத்தனை ஆண்டுகாலம் உயிருடன் இருப்பார் என்பதை கூறிவிடும்.

இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 48 பேரின் மீது பரிசோதித்து பார்த்தனர். அதுவும் 48 பேரையும் ஆராய்ந்து முடிவுகளையும் கணக்கிட்டுக் கொடுத்தது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் எத்தனை பேர் இறந்துவிடுவார்கள் என்ற முடிவுகளை அது அளித்தது. அந்த முடிவை மருத்துவர்களின் முடிவுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் அது 69 சதவிகிதம் துல்லியமாக இருந்தது. இது, ஒருவரின் உடலில் வருங்காலத்தில் நடக்கும் மற்றத்தைக் கண்டறிந்து, அதனை ஆரம்பத்திலேயே சரி செய்ய உதவும் என நம்பப்படுகிறது. நமது ஆரோக்கியத்தை கணிக்கும் ஜோஸியர் என இதைச் சொல்லலாம். ஆனால், அறிவியல் ஜோஸியர்

இது குறித்து அந்தக் கல்லூரியின் மாணவரும், இந்தக் கண்டுபிடிப்புக் குழுவில் ஒருவருமான லுக் ஓக்டென்-ரேனர் கூறுகையில், “ஒருவரின் உடலில் வருங்காலத்தில் ஏற்படும் மாற்றங்களை கணிப்பது மிகவும் உபயோகமானது. அது ஒருவருக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். ஒருவர் எவ்வளவு ஆண்டுகாலம் வாழ்வார், என்று ஒரு மருத்துவர் கண்டுபிடிப்பது எளிதான செயலல்ல. ஏனென்றால் அவர்களால் ஒருவரின் உடலுக்குள் சென்று ஒவ்வொரு உறுப்பின் ஆரோக்கியத்தை கண்டறிவது கடினம். அதை இந்தக் கண்டுபிடிப்பு பூர்த்தி செய்யும்” என்றார்.

Artificial intelligence

மேலும் இந்தக் கண்டுபிடிப்பை பற்றி அவர் கூறுகையில், “எங்கள் ஆராய்ச்சி மருத்துவ பட பகுப்பாய்வுத் துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஒரு புதிய வாயிலை திறந்துள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு வருங்காலத்தில் நோய்களை வரும் முன்னரே கண்டறிந்து, அதற்கு முன்னரே சிகிச்சை அளிக்க உதவும்” என்று அவர் கூறினார்.

அறிவியல் உலகில் எதையும் நம்பவும் முடிவதில்லை. நம்பாமல் இருக்கவும் முடிவதில்லை. உண்மையில், இந்தக் கண்டுபிடிப்பு மனிதர்களுக்கு பயன் தரும் வகையில் அமைய வேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசையும்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!