வெளியிடப்பட்ட நேரம்: 20:09 (16/06/2017)

கடைசி தொடர்பு:20:09 (16/06/2017)

பாதுகப்பற்ற சிசிடிவி கேமராக்களை லைவ் செய்யும் இணையதளம்..! #Alert

”எல்லாம் மேல இருக்கிறவன் பாத்துட்டு இருக்கான்” - இதில் “மேலே இருப்பவன்” என்பது இப்போது சிசிடிவி கேமராதான். 

அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மட்டுமன்றி, பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தற்போது வீடுகளிலும் கூட சிசிடிவி கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. நம்மை யாரோ கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணத்தால், கேமராக்கள் பொருத்தப்பட்ட இடங்களில் குற்றச்செயல்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. ஆனால், பாதுகாப்புக் காரணத்துக்காகப் பயன்படுத்தப்படும் இந்த கேமராக்களே பாதுகாப்பற்றதாக இருக்கின்றன என்பதுதான் அதிர்ச்சியளிக்கும் உண்மை.

சிசிடிவி

சிசிடிவி கேமரா பொதுவாகக் கணினி அல்லது தொலைக்காட்சியுடன் இணைக்கப்பட்டிருக்கும். ரகசியக் கேமரா கனெக்ட் செய்யப்பட்டிருக்கும் கணினியின் IP அட்ரஸ் மட்டும் தெரிந்தால், அதன் மூலமாக உலகின் எந்த மூலையிலிருந்தும் வேறொருவர் கேமரா காட்சிகளைப் பார்க்கும் அபாயம் இருக்கிறது.

உலகின் பல நாடுகளைச் சேர்ந்த நகரங்களில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்புக் குறைபாடுள்ள ரகசியக் கேமராக்களை http://www.insecam.org/ என்ற இணையதளம் தொகுத்திருக்கிறது. இந்தப் பட்டியலில் சென்னை, கோயம்புத்தூர், சேலம் போன்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த நகரங்களில் பயன்பாட்டில் இருக்கும் ரகசியக் கேமராக்களும் அடக்கம். ரகசியக் கேமரா மூலம், அங்கு நடக்கும் அத்தனை காட்சிகளையும் இணையத்திலேயே பார்க்க முடிகிறது. இதைப் படித்துக்கொண்டிருக்கும் உங்களைக்கூட உலகின் ஏதோ மூலையில் இருக்கும் மற்றொருவர் கண்காணித்துக் கொண்டிருக்கலாம். பிரைவசி பாதிக்கப்படுவதோடு, சமூக விரோதிகள் இதைத் தவறாகப் பயன்படுத்தும்  அபாயமும் இதில் இருக்கிறது. இந்த இணையதளம் ரகசியக் கேமராக்களை ஹேக் செய்யவில்லை. அவற்றிலுள்ள பாதுகாப்புக் குறைபாட்டை சுட்டிக்காட்டவே இந்த ரகசியக் கேமராக்களைப் பட்டியலிட்டிருப்பதாகத் தெரிவிக்கிறது.

கணினி மற்றும் இணையத்துடன் கனெக்ட் செய்யக்கூடிய ஸ்மார்ட் உபகரணங்கள் வாங்கும்போது, அவற்றுக்கான டீஃபால்ட் பாஸ்வேர்டு சிசிடிவிஒன்றை நிறுவனம் அளிக்கும். பாதுகாப்புக் காரணங்களுக்காகவே இந்த பாஸ்வேர்ட் தரப்படுகிறது. ஆனால், இதை மாற்றாமல் தொடர்ந்து பயன்படுத்தினால், IP அட்ரஸை வைத்து அப்பொருள்களை எளிதில் ஹேக் செய்ய முடியும். வேறு எவர் வேண்டுமானாலும் மிக எளிதாக அப்பொருள்களைக் கட்டுப்படுத்த முடியும். அதுமட்டுமில்லாமல் வலிமையான பாஸ்வேர்ட் மாற்றுவது அவசியம். எளிதில் யூகிக்க முடியாத பாஸ்வேர்ட் வைப்பதன் மூலமும், குறிப்பிட்ட கால இடைவெளியில் பாஸ்வேர்டை மாற்றுவதன் மூலம் ஹேக்கர்களிடமிருந்து ஸ்மார்ட் உபகரணங்களைத் தற்காத்துக்கொள்ள முடியும். சி.சி.டி.வி கேமராக்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

இந்தப் பாதுகாப்புக் குறைபாட்டைப் பயன்படுத்திதான் அந்த இணையதளம் அத்தனை ரகசியக் கேமராக்களையும் தொகுத்திருக்கிறது. டீஃபால்ட் பாஸ்வேர்டை மட்டும் மாற்றினாலே அந்த இணையதளத்திலிருந்து சம்பந்தப்பட்ட கேமராவின் காணொளி தானாகவே நீங்கிவிடும். பாஸ்வேர்டு மாற்றாத ரகசிய கேமரா இணையத்தோடு கனெக்ட் செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில், அதன் IP அட்ரஸ் மட்டும் கிடைத்தாலே எவர் வேண்டுமானாலும் கண்காணிக்கலாம்.

கேமராவில் இருக்கும் சி.சி.டி.வி கேமராவில், யார் யாரெல்லாம் அங்கு வருகிறார்கள் என்பது தொடங்கி, அந்த பேக்கரியில் பணம் எங்கு வைக்கப்படுகிறது உள்ளிட்ட அத்தனை விஷயங்களையும் கண்காணிக்க முடிகிறது. ஓர் அலுவலகத்தின் வரவேற்பறை தொடங்கி கழிப்பிட வாசல் வரை பொருத்தப்பட்டிருக்கும் ரகசியக் கேமராக்கள் பாதுகாப்பற்றவையாக இருந்தால், என்ன விபரீதங்கள் எல்லாம் நடக்கும் என யோசித்துப் பாருங்கள்! சமூக விரோதிகள் இதைப் பயன்படுத்தி என்ன வேண்டுமானாலும் செய்ய வாய்ப்பிருக்கிறது.

ஒவ்வொரு தொழில்நுட்பமும் தரும் வசதிகளை எவ்வளவு அனுபவிக்கிறோமோ அதே அளவு அவை பாதுகாப்பாகப் பயன்படுத்தப்படுகின்றனவா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஸ்மார்ட் உபகரணங்களைப் பயன்படுத்தினால் மட்டும் போதாது, அதை ஸ்மார்ட்டாகவும் பயன்படுத்த வேண்டும். சப்டைட்டில் ஃபைல் மூலமாகவே கணினியை ஹேக் செய்யும் காலமிது. உங்கள் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ ரகசியக் கேமராக்களைப் பயன்படுத்தினால் பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிப்பது அவசியம். இல்லாவிட்டால், பாதுகாப்புக்காகப் பயன்படுத்தும் விஷயமே பாதுகாப்பின்மையைத் தந்துவிடும் அபாயம் இருக்கிறது.

இது என்னவோ டெக்னாலஜியின் குறைபாடு என எண்ண வேண்டாம். கத்தியைக் கூட கவனக்குறைவாகப் பயன்படுத்தினால் கையை கிழிக்கத்தான் செய்யும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்