Published:Updated:

`` `உங்களால வாழ முடியாது. செத்துப்போங்க'னு சொல்லாம சொல்லிட்டுப் போனாங்க!'' - குமுறும் குதிரைவண்டி ஓட்டுநர்

`` `உங்களால வாழ முடியாது. செத்துப்போங்க'னு சொல்லாம சொல்லிட்டுப் போனாங்க!'' - குமுறும் குதிரைவண்டி ஓட்டுநர்
News
`` `உங்களால வாழ முடியாது. செத்துப்போங்க'னு சொல்லாம சொல்லிட்டுப் போனாங்க!'' - குமுறும் குதிரைவண்டி ஓட்டுநர்

`` `உங்களால வாழ முடியாது. செத்துப்போங்க'னு சொல்லாம சொல்லிட்டுப் போனாங்க!'' - குமுறும் குதிரைவண்டி ஓட்டுநர்

ஒரு காலத்தில் சென்னை சென்ட்ரலில் இறங்கியதும் நம்மை முதலில் வரவேற்பது, குதிரை பூட்டிய ஜட்கா வண்டிகள்தான். சென்னையைச் சுற்றிப்பார்க்கவும், பிரமாண்டமான திருமணத்தின் அடையாளமாகவும் திகழ்வது இவையே. சென்ட்ரல் குதிரை லாயத்தில் 50-க்கும் மேற்பட்ட குதிரைகள் பராமரிக்கப்பட்டன. சென்ட்ரல், பாரிஸ் கார்னர், எக்மோர் என, சென்னையின் முக்கிய நகரங்களிடையே 50 முதல் 60 வண்டிகள் ஓடின. ஆனால் இன்றோ, ஒரு ஜட்கா வண்டியைப் பார்ப்பதே மிக அரிதாக உள்ளது. அப்படிப் பார்த்துவிட்டால், ஏதோ நாமே அதில் நாட்டாமையாகப் பயணம் செய்வதுபோன்று உணர்வோம்.

சென்னையின் முக்கியமான அடையாளங்களுள் ஒன்றாக அறியப்பட்ட சென்னை சென்ட்ரல் குதிரை லாயம், இன்று இல்லை. ராஜாக்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் சேவை செய்த இந்தக் குதிரை வண்டிகளை, இன்று தேடவேண்டிய நிலை. குதிரை வண்டிகள் ஓட்டும் தொழிலில் போதிய வருமானம் இல்லை என்றபோதிலும், தங்களுக்கான அடையாளமாக இதைச் செய்கிறார்கள் தற்போதைய குதிரை வண்டி ஓட்டுநர்கள். அவர்களுக்குப் போதிய இருப்பிட வசதியோ, தொழில் அங்கீகாரமோ, அரசு உதவிகளோ கிடைப்பதில்லை.

சென்னை ரிப்பன் பில்டிங்கிலிருந்து பூந்தமல்லிக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் இருக்கிறது, சென்னை சென்ட்ரல் குதிரை லாயத்தின் மிச்சம். இங்கு, திறந்தவெளி நடைபாதையில் குதிரைகளைக் கட்டிப்போட்டுள்ளனர். விதவிதமான வண்ணங்களில் மிளிர்ந்த ஜட்கா வண்டிகள்  மட்டுமல்ல அவற்றைப் பராமரித்த மனிதர்களும் இன்று கலையிழந்து காணப்படுகின்றனர். கைவசம் இருக்கும் குதிரைகளைக் கல்யாண ஊர்வலம், சினிமா மற்றும் தொலைக்காட்சித் தொடர்களுக்கான ஷூட்டிங், கடற்கரையில் குதிரை சவாரி என வயிற்றுப் பிழைப்புக்காகப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த வேலையில் கிடைக்கும் சொற்ப பணத்தைக்கொண்டு தன் அன்றாடத் தேவைகளைப் பூர்த்திசெய்கின்றனர். இதில் குமாரும் ஒருவர். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தங்களின் பாரம்பர்யத் தொழிலான குதிரை வண்டி ஓட்டுவதால் கிடைக்கும் வருமானம், குடும்பச் சூழ்நிலை,தொழிலுக்கான சமூக அங்கீகாரம் என, தன் வாழ்க்கைமுறையை ஈர வார்த்தைகளில் உரைக்கிறார்.

“என் அப்பா பெயர் சாண்டோ மூர்த்தி. எனக்கு ரெண்டு குழந்தைங்க. இங்கே பத்து குடும்பங்கள் இருக்கு. பத்து குதிரைங்க வெச்சிருந்தோம். இப்போ வெறும் நாலுதான் இருக்கு.  இந்தக் குதிரைங்களை நம்பிதான் நாங்க இருக்கோம். ஒருகாலத்துல இந்தக் குதிரை லாயம் ரொம்பப் பெருசா இருந்துச்சு. காலப்போக்குல இதுக்கான மரியாதை குறையவே, இப்போ ரோட்டோரத்துல இருக்கோம். வெள்ளைக்காரங்க காலத்துல இருந்தே இங்கேதான் வாழ்றோம். சென்ட்ரல் குதிரை லாயம்னா, மொத்த சென்னை மட்டுமில்லாம தமிழ்நாட்டுக்கே தெரியும். ஆனா இன்னிக்கு, எங்கே இருக்கோம்னு தெரியாத அளவுக்கு ஏதோ ஒரு மூலையில் எங்க ஜீவனம் நடந்துட்டிருக்கு.

அந்தக் காலத்துல போக்குவரத்து, அவசர உதவினு பப்ளிக் சர்வீஸ்ல இருந்து இறுதி ஊர்வலம் வரை எல்லாத்துக்குமே நம்ம குதிரை வண்டிங்கதான் சார். இப்போ ஆட்டோ, டாக்ஸி, ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தினு அவசரமான உலகத்துல எங்க பொழப்பு அடிவாங்கிடுச்சு. இதுக்கு யாரை குறை சொல்றது?  தோ... எதிர்க்கதான் கார்ப்பரேஷன் ஆபீஸ் இருக்கு. தினமும் எத்தனையோ அதிகாரிங்க வர்றாங்க, போறாங்க. எவ்வளவோ திட்டங்கள் போடுறாங்க. ஒவ்வொருமுறையும் கட்சியும் கொடியும் மாறிக்கிட்டுதான் இருக்கு. ஆனா, எங்கள் வாழ்க்கையில எந்த ஒரு மாற்றமும் இல்லை. நாங்களும் பார்க்காத அதிகாரிங்க இல்லை, கொடுக்காத மனு இல்லை. வர்தா புயல் தாக்கினப்போகூட அரசாங்கம் அறிவிச்ச எந்த உதவியும் எங்களுக்குக்  கிடைக்கலை.

பத்து மாசங்களுக்கு முன்னாடி வரை எங்க லாயம் இருந்துச்சு. ஹைவேஸ்காரங்க ஏதோ கால்வாய் அமைக்கணும்னு இடிக்க வந்தாங்க.`வேலை முடிஞ்சதும் உங்க இடத்துலேயே நீங்க இருந்துக்கலாம்'னு சொன்னதை நம்பி எங்க கையாலேயே லாயத்தைப் பிரிச்சோம். கால்வாய் வேலை முடிஞ்சதும், `இங்கே குதிரை எல்லாம் கட்டக் கூடாது. வேற எங்கேயாவது போயிடுங்க'னு சொன்னாங்க. அதாவது `உங்களால இந்த உலகத்துல வாழ முடியாது. செத்துப்போயிடுங்க'னு சொல்லாமச் சொல்லிட்டுப் போயிட்டாங்க'' எனக் கூறும்போதே அவரின் கண்களில் நீர்  எட்டிப்பார்க்கிறது.

அதைக் காட்டிக்கொள்ளாமல் தன் உள்ளக் குமுறலைத் தொடர்ந்தார் குமார்,  ``ஹைவேஸ் கால்வாய் வேலை முடிஞ்சதும் கடப்பாக்கல் போட்டு மூடிட்டாங்க. அதுல குதிரைங்க நிக்க முடியாம வழுக்கி விழுந்து தலையில அடிபட்டும், லாயத்தைக் கட்டக் கூடாதுனு சொன்னதுனால வெயில் கொடுமை தாங்காம முடியாமயும் நாலு குதிரைங்க செத்தேபோச்சு. காலம்காலமா  நாங்க இருந்த இடத்துல குதிரை கட்டக் கூடாதுன்னா நாங்க எங்கே சார் போறது? இத்தனை நாளா மக்களுக்குத் தொந்தரவு தராம ஓரமாத்தான் இருந்துட்டு வர்றோம். ஆனா, ஏதேதோ காரணம் சொல்லி எங்க வயித்துல அடிக்கிறாங்க. ஒரு மனுஷனை அடிச்சா கேள்வி கேட்க நாலு பேர் வர்றாங்க. ஆனா, எங்களுக்கு மட்டும் ஒரு நாதியும் இல்லை. நாங்களும் மனுஷங்கதானே சார். எங்க வயித்துக்கே உணவு இல்லாதபோது இந்தக் குதிரைங்களுக்கு எங்கே இருந்து போதுமான உணவு தர முடியும்? தரமான உணவு, தண்ணி, மருத்துவ வசதி, சுகாதாரம்னு எந்த வசதியும் இல்லாமலேயே ரெண்டு குதிரை செத்துப்போச்சு. இப்போ எஞ்சியிருக்கிற நாலு குதிரைகளை முடிஞ்ச அளவுக்குக் காப்பாத்திக்கிட்டு வர்றோம்.

ஒரு கல்யாண நிகழ்ச்சிக்கு 1,000-த்துல இருந்து 3,000 ரூபாய் வரைக்கும் கிடைக்கும். இருந்தாலும்,  முகூர்த்த நேரம், ஷூட்டிங் தவிர, பல நேரம் பொழப்பே இல்லாம பீச்ல குதிரை சவாரி போய் ஏதோ இருபது முப்பது ரூபாய் சம்பாதிக்கிறோம். அப்படி கிடைக்கிற பணம் எங்களுக்கோ குதிரையின் பராமரிப்புக்கோ போதுமானதா இருக்குமா நீங்களே சொல்லுங்க. ஒரு குதிரையோட ஒருநாள் தீனியே 400 ரூபாய்கு மேல செலவாகுது. அதுங்களோடு சேர்த்து நாங்களும் சாப்பிடணும். எங்களுக்கு மூணு வேளை சாப்பாடு கிடைக்கலைன்னாகூட இதுவரைக்கும் குதிரைங்களைப் பட்டினி போட்டதில்லை. எப்படியோ கடனோ கைமாத்தோ வாங்கிக் குதிரைக்குத் தேவையானதைச் செஞ்டுவோம். அப்படி செஞ்சாத்தான் அதுங்களை நம்பி இருக்கும் நாங்க ஜீவனம் பண்ண முடியும். 

எங்க தாத்தா காலத்துல இருந்து இந்தத் தொழிலை செய்றோம். ஆனா, எந்தவிதமான உதவியோ, ஆலோசனையோ, நம்பிக்கையோ, உறுதிமொழியோ கிடைக்கிறதில்லை. எங்களுக்குள் ஒருத்தர்கொருத்தர் உதவி செஞ்சுக்கிட்டு, நல்லது கெட்டதுகள்ல கலந்துகிட்டு, தன்னம்பிக்கையையும், இந்தக் குதிரைங்களையும் நம்பித்தான் எங்க வாழ்க்கை ஓடிக்கிட்டிருக்கு. தனிநபரோ, அரசாங்கமோ, அறக்கட்டளையோ, தனியார் நிறுவனமோ யாரும் எங்களுக்கு எந்தவிதமான உதவியும் செய்றதில்லை. எத்தனை நாளைக்குதான் நாங்களே எங்களுக்குத் தேவையானதைச் செஞ்சுக்க முடியும்? அதுக்கான வருமானம் வருதா... இல்லையே! சரி, எங்களை மாதிரி கஷ்டப்படுவங்களுக்கு உதவியாவது கிடைக்குதா அதுவும் இல்லையே. இப்படி எந்தவிதமான உதவியும் இல்லாம, சாகுறதுக்கு பயந்து உயிர் இருக்கிற வெறும் உடம்போடு நடமாடிக்கிட்டு இருக்கோம்.

நாங்களும் இந்த உலகத்துல இருக்கோங்கிறதை ஞாபகம் வெச்சு, இனிமேலாவது அரசோ, அரசு அதிகாரிங்களோ எங்களுக்கு உதவினாங்கனா,  ஏதோ நாங்க குடிக்கிற கஞ்சியை அவங்க பெயரைச் சொல்லிக் குடிப்போம்” என்று குமார் சொல்லி முடிக்கும்போது, என் மனதில் ஏதோ ஓர் இறுக்கம் இருப்பதை, விழிகளில் வழிந்த நீரே உணர்த்தியது.

நிவாரண உதவி கிடைக்கவும், குதிரை லாயத்தை மீட்டுருவாக்கம் செய்யவும் மனுகொடுத்து அலைந்து களைத்த குமார் போன்றோருக்கு, சென்னையின் வரலாற்று இடங்களைப் பாதுகாக்கும் அலுவலகம் எங்கு இருக்கிறது என்பதுகூடத் தெரிவதில்லை. சென்னையின் எத்தனையோ இடங்களில் சிதிலமடைந்த கட்டடங்களை வரலாற்றுச் சின்னங்களாகக் காப்பாற்றிவரும் அரசு, இந்த எளிய மனிதர்களின் வாழ்விடத்தை மறந்தது ஏனோ?


குதிரைகளைப் பாதுகாக்க இவர்கள் இருக்கிறார்கள்,
இவர்களைப் பாதுகாக்க?