வெளியிடப்பட்ட நேரம்: 21:08 (16/06/2017)

கடைசி தொடர்பு:21:08 (16/06/2017)

”படிக்க உதவி கேட்டா அவமானப்படுத்துவீங்களா?” - ‘கிரவுட் ஃபண்டிங்’ மூலம் உதவி கோரிய பெண்

கிரவுட் ஃபண்டிங்

மீபத்தில், வெளிநாட்டில்  சினிமா சம்பந்தப்பட்ட மேற்படிப்பு படிப்பதற்காக, ‘கிரவுட் ஃபண்டிங்’ மூலம் பணம் கேட்ட ஜுஹி ஷர்மா என்ற பெண், சமூகவலைதளத்தில் மிக மோசமாக ‘ட்ரோல்’ செய்யப்பட்டார் . “இதுபோல் ஆன்லைனில் பிச்சை எடுப்பவர்களைவிட பாலியல் தொழிலாளர்களே மேல்”, “மெரினா கடற்கரையில் நின்று  பாலியல் தொழில் செய்யலாம்” என்பன போன்ற பல ஆபாசமான கருத்துகளைப் பதிவிட்டிருந்தனர். என்ன நடந்தது என்பதை, ஜுஹி ஷர்மாவிடமே கேட்டோம். 

“எனக்கு சின்ன வயசுல இருந்து, படம் இயக்குவதுதான் கனவு. அதனால, பள்ளி படிப்பை முடிச்சுட்டு,  எம்.ஓ.பி வைஷ்ணவா மகளிர் கல்லூரில நான் எலெக்ட்ரானிக்  மீடியா படிச்சேன். என் அப்பா ரியல் எஸ்டேட் ஏஜென்ட்டாக இருந்தாரு. மூணு வருஷம் முன்னாடி, அவரோட தொழில்ல நஷ்டம். எங்க அம்மா  தனியா பண்ணிட்டு இருந்த பிஸினஸ் சரியா போகலை. எனக்கு ஒரு தங்கையும் இருக்கா. நான்தான் பகுதி நேரமா வேலைபார்த்து என் குடும்பத்தைக் காப்பாத்தினேன். என் தங்கையோட பள்ளி படிப்பு முதற்கொண்டு, எங்களுக்கு இருந்த கடன் வரை எல்லாம் பொறுப்புகளையும் நான் ஏத்துக்கிட்டேன். ஆனா, சினிமா சம்பந்தமா மேற்படிப்பு படிக்கணும் என்ற  ஆர்வம் மட்டும் எனக்குள்ள இருந்துச்சு. பணம் மட்டும்தான் தடையா இருந்தது. சினிமா  பத்தி அமெரிக்காவுல படிச்சா, சர்வதேச அளவுல சினிமா சம்பந்தமா தெரிஞ்சுக்கலாம். அதனாலதான் நான் அங்க இருக்கிற  ‘புரூக்ளின் காலேஜ்’ல சேர்றதுக்கு விண்ணப்பிச்சேன்; அந்த காலேஜ்ல செலக்ட்டும் ஆனேன். இந்தப் படிப்பு படிக்க மொத்தம் 60,000 அமெரிக்க டாலர் செலவாகும். என்னோட சேமிப்பு மற்றும் ஊக்கத்தொகை மூலம் 6,000 அமெரிக்க டாலர் கிடைச்சது. படிப்புக்காக லோன் கேட்டு எத்தனையோ வங்கிகள்ல ஏறி இறங்கினேன். ஆனா, ‘சினிமா படிப்பு' படிக்க லோன் வசதி கிடையாதுனு சொல்லி அனுப்பிட்டாங்க. 

கிரவுட் ஃபண்டிங்அப்போதான்,  என்னோட ஃப்ரெண்ட் ஒருத்தி, ‘கிரவுட் ஃபண்டிங்’ பத்தி எனக்கு எடுத்துச் சொன்னா. சரின்னு என்னோட கடைசி முயற்சியாதான் இதைச் செய்தேன். நான் 18,000 அமெரிக்க டாலர்தான் ‘கிரவுட் ஃபண்டிங்’ மூலம் கேட்டிருந்தேன். என்னோட  நண்பர்கள் வட்டத்துல இருந்தவங்க  நிறையப் பேர் இந்த விஷயத்தை ‘ஷேர்’ பண்ணியிருந்தாங்க. கடந்த வாரம், என்னோட ஃப்ரெண்ட்தான்  என்னை பத்தி தப்பு தப்பா ஆன்லைனில  பேசுறாங்கனு சொன்னா. இவங்க என்னைப் பத்திதான் பேசுறாங்க என்பதையே என்னால நம்பமுடியலை. உலகத்துல எங்கோ ஒரு மூலைலதான் இப்படியெல்லாம் நடக்கும்னு  நினைச்சுட்டு இருந்தேன். என் முகத்தைப் பார்த்து, நான் பணக்காரி மாதிரி இருக்கிறதாகவும், ஏதோ பொழுதுபோக்குக்காக  இந்த ‘கிரவுட் ஃபண்டிங்’கில பணம் கேட்டதாகவும் சில பேர் சொல்லியிருந்தாங்க. அது எப்படி என் முகத்தைப் பார்த்து மட்டுமே, இதையெல்லாம் சொல்றாங்க. என்னோட நிலைமை என்னனு தெரியாதவங்க என்னைப் பத்தி எப்படி பேச முடியுது? இங்க ‘கிரவுட் ஃபண்டிங்’ பண்ணி, ஆண்கள் படமே எடுக்குறாங்க. ஒரு பொண்ணு அது சம்பந்தமா ஓர் உதவி கேட்டா தப்பா? இந்த விஷயத்தை  எப்படி எதிர்கொள்றதுனு யோசிக்கவே எனக்கு ஒரு நாள் ஆச்சு.  உண்மையில, இந்த விஷயம்  என்னைக் காயப்படுத்திச்சு. 

ஆனா, நான் துவண்டு போகலை. நான் இப்போதைக்கு எந்தப் பதிலும் இதுக்குச் சொல்ல விரும்பலை.  நான் நல்லா படிச்சு, குழந்தைகள், பெண்கள் பற்றி முற்போக்கான திரைப்படங்கள் எடுப்பேன். நல்ல திரைப்படங்கள் எடுப்பது மூலமாதான் இந்த விஷயத்துக்குப் பதில் சொல்வேன்” என்று தீர்க்கமாகப் பேசி முடிக்கிறார்  ஜுஹி ஷர்மா!  

இன்றைய பெண்கள் சந்திக்கும் சிக்கல்களும் நவீனமாகிவருகின்றன என்பதற்கு ஓர் உதாரணம்தான் இந்தச் சம்பவம்!  நம் சமூகத்தில் மட்டும் அல்ல, சமூகவலைதளத்திலும் நாம் தூசு தட்டவேண்டிய  பக்கங்கள் நிறைய இருக்கின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்