Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தியாகத் துதி வேண்டாம்... பெண்களுக்கு மறுமணம் அவசியம்..!#ChangeTaboo #SupportRemarriage

பெண்

விபத்து, நோவு போன்ற காரணங்களால் கணவரை இழந்த பெண்கள், அதற்குப் பிறகான வாழ்வை எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இந்தச் சமூகம் கண்டிப்புடன் கூடிய ஒரு வரையறை வைத்திருக்கிறது. அதேபோல, கணவனிடம் விவாகரத்துப் பெற்றோ, அவனிடமிருந்து விலகியோ தனித்து வாழும் பெண்களுக்கும் அது ஒரு வட்டம்போட்டுக் கொடுத்து, 'இதற்குள் வாழ்' என்கிறது. 

இந்தப் பெண்களுக்கான கட்டுப்பாடுகளில் முதன்மையானது... மற்றொரு துணை பற்றிய எண்ணம் வராமல் அவர்கள் தங்களின் குழந்தைகளுக்காக ஒரு தியாக வாழ்க்கை வாழ வேண்டும் என்பது. அவ்வாறு வாழும் பெண்களை, 'அவ நெருப்பு மாதிரிப் பொம்பள', 'புள்ளைகளுக்காகவே வாழுறவ' என்று துதி பாடித் துதி பாடியே, உணர்வுகளைக் கொன்ற ஒரு வாழ்க்கையை அவள் வாழப் பழக்குகிறது.  

திருமணம் ஆகி சில ஆண்டுகளில் கணவனை இழந்த, கணவனிடமிருந்து விவாகரத்துப் பெற்ற பெண்கள் பலர், கையில் குழந்தைகளை வைத்துக்கொண்டு, வைராக்கியத்துடனும் கடின உழைப்புடனும் வாழ்க்கையை எதிர்கொள்ள ஆரம்பிக்கிறார்கள். தங்கள் குழந்தைகளை அருமையாக வளர்த்து, படிக்கவைத்து, பெரிய வேலைகளில் உட்கார வைத்து, கல்யாணம் செய்து, பேரன் பேத்திகளைப் பார்த்து, என இந்த வாழ்வை வாழ்ந்து முடித்துவிடுகிறார்கள். இந்த அம்மாக்களுக்குத் தங்கள் குடும்பம் மட்டுமே உலகம். அப்படி அவர்கள் தங்கள் உலகத்தை மாற்றிக்கொள்கிறார்கள். இப்படியான பல பெண்களை நாம் கடந்திருப்போம். 

பெண்

ஆனால் ஓர் ஆணுக்கோ, ஒரு பெண்ணுக்கோ தன் பிள்ளைகளைத் தாண்டி, தன் அப்பா அம்மாவைத் தாண்டி, ஒரு துணை எக்காலத்திலும் தேவைப்படுகிறது. இதுதான் இயற்கை. அது உடல் சார்ந்தது மட்டுமல்ல. மனம் சார்ந்ததும்கூட. அது சரி... திருமணத்துக்குத் தன் துணையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தையே பெண்களுக்கு வழங்காத நம் குடும்ப, சமூக அமைப்பு, மறுமணத்தில் என்ன உரிமை கொடுத்துவிடும் அவர்களுக்கு? 

இந்த விஷயத்தில் நாம் மேற்குலக நாடுகளை எடுத்துக்காட்டாகக் கொள்ளவேண்டும். அங்கே திருமணத்துக்கு வயது ஒரு தடை அல்ல. திருமணம் (Companionship) என்பது ஒரு 'Mutual Respect' ஆக அங்கே இருக்கிறது. ஒரு பெண் தனது துணையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் அங்கே இருக்கிறது. அது திருமணத்துக்கு முன்பும் சரி, திருமணத்துக்குப் பின்பும் சரி. கணவன் இறந்துவிட்டாலோ, கைவிட்டுவிட்டாலோ ஒரு பெண் அங்கே துவண்டு போய்விடுவதில்லை. அதற்குக் காரணம் என்ன? நிறைய இருக்கின்றன! 

அங்கே, நம் ஊரைப் போன்ற குடும்பம் என்ற பிடிமானம் கிடையாது. உடனே, அவர்கள் பாசமற்றவர்கள் என்றோ, இரக்கமில்லாதவர்கள் என்றோ அர்த்தமில்லை. நம் ஊரை விட, தங்களது வயதான பெற்றோர்களைப் பார்த்துக்கொள்ளும் பிள்ளைகள் அங்கே அதிகம் இருக்கிறார்கள். ஆனால், நமக்கும் அவர்களுக்கும் உள்ள முக்கிய வித்தியாசம்... Respect for Individual Freedom. அதாவது, தனி நபர் சுதந்திரம். 

அங்கெல்லாம் ஒருவனது வாழ்க்கைக்கு அவன் மட்டுமே பொறுப்பாகிறான். ஒரு மனிதன் தன்னைத்தானே பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது அவர்களின் பண்பாடாக இருக்கிறது. இதனால், பள்ளிப்படிப்பு முடியும் தருவாயிலேயே பெற்றோரை சாராமல் பிள்ளைகள் வாழ்கிறார்கள். பெற்றோர்களுக்கும், தங்களுக்கான வாழ்க்கையை வாழ ஒரு வெளி கிடைக்கிறது. இந்த வெளி நம் ஊர்ப் பெற்றோர்களுக்குக் கிடையாது. கல்யாணம் ஆகி, குழந்தைப்பேறில் ஆரம்பித்து குழந்தைகளின் படிப்பு, வேலை, கல்யாணம், பேரன், பேத்தி என எல்லாவற்றையும் சுமக்கும் பொறுப்பு அவர்களிடம் வந்துவிடுகிறது. அவர்களுக்கான வாழ்க்கையை அவர்கள் இதனூடேதான் வாழவேண்டி இருக்கிறது. இதில், இருவர் ஒருவர் ஆகும்போது பிரச்னை இன்னும் பெரிதாகிறது. 
 
'இதெல்லாம் நம்ம ஊருக்கு ஒத்துவராதுங்க. நம்ம கலாசாரம் என்னாவது, நம்ம பண்பாடு என்னாவது?' ஒரு சமூகத்தை அடிமைப்படுத்தி கலாசாரத்தைக் காப்பதற்கு, மேற்கு நாடுகள் மதிப்பளிக்கும் தனி நபர் சுதந்திரம் எவ்வளவோ மேல். துணை வேண்டாம் என்பது சம்பந்தப்பட்ட பெண்ணின் சுய முடிவெனில், அதுவும் அவளின் தனி நபர் சுதந்திரம்தான். ஆனால், இந்தச் சமூகத்துக்குப் பயந்து அந்த முடிவை எடுக்கும் பெண்களைப் பற்றியே நாம் இங்கு பேசுவது. அந்த எண்ணம்கூட வராத அளவுக்கு அவளைச் சுற்றியுள்ள உலகம் அவளைத் தன் கலாசாரக் கட்டுப்பாட்டில் வைக்கிறது.  

இளவயதில் கணவனை இழந்தாலோ அல்லது ஒரு கசப்பான திருமண முறிவு ஏற்பட்டாலோ, பல பெண்கள் தங்களது வாழ்க்கையைச் சுருக்கிக்கொள்கிறார்கள். 'இனி இந்த வாழ்க்கை எனக்கானது அல்ல. என் பிள்ளைக்கானதும், என் குடும்பத்துக்கானதும்' என்று மாற்றிக்கொள்கிறார்கள். தங்கள் குடும்பத்தைத் தாண்டியும் 'தங்களுக்கான'  ஒரு வாழ்க்கை இருக்கிறது என்று இவர்கள் யோசிப்பதில்லை. தங்களது கூட்டை விட்டு இவர்கள் வெளியே வர விரும்புவதில்லை.

நம் ஆணாதிக்கச் சமூகமும் இதற்கு ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. சமூகம் மாற காலம் ஆகலாம். நம்மளவில் நாம் என்ன செய்யலாம்? சிங்கிள் மதர் பெண்களிடம், அவர்களின் குடும்பத்திடம், அந்தப் பெண்களின் மறுமணம் குறித்து வலியுறுத்தலாம். அவர்களுக்கு நிச்சயம் ஒரு துணை தேவை; அந்த எண்ணமும் உணர்வும் தவறில்லை இயல்பு என்பதான உரையாடல்களைக் குடும்ப அமைப்புகளில் முன்னெடுக்கலாம். குழந்தைகளுக்காகத் தன் சுயம் கொன்று வாழும் ஒரு பெண்ணைக் கண்டால், 'உன்ன மாதிரி முடியுமா ராசாத்தி' என்று கொண்டாடி, 'அதுதான் சரி' என்ற தீர்ப்பை அவள்மீது சர்க்கரை தடவிய விஷமாகத் திணிக்காமல் இருக்கலாம். 'உனக்காக வாழத்தான் நீ பிறந்திருக்க. உம்பிள்ளைங்க வேணும்னா உனக்கு உலகமா இருக்கலாம். ஆனா 18 வயசுக்கு மேல, அதுங்களுக்கு நீயும் ஓர் உறவாகிடுவ. அதனால, உனக்காக வாழு. அது தப்பில்ல. அதுதான் சரி' என்று பேசி, அவள் தியாகச் சால்வையைக் கிழித்தெறிந்து அவளை மீட்கலாம். 

செய்வோம்! 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement