வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (18/06/2017)

கடைசி தொடர்பு:10:00 (18/06/2017)

தமிழ் சினிமாவின் சாம்பியன்ஸ் டிராபி இவர்களுக்குத்தான்! #Kollywoodcricketteams

இரண்டு மாத ஐ.பி.எல், அதைத் தொடர்ந்து இப்போது சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி என கொஞ்ச காலமாகவே கிரிக்கெட் ஜுரம் உச்சகட்டத்தில் இருக்கிறது. இந்தப் பொன்னான தருணத்தில் தமிழ் கூறும் நல்லுலகு சினிமாவில் அறிமுகப்படுத்திய சில அசத்தலான கிரிக்கெட் டீம்களை பற்றி நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளோம் என்பதை நினைவுகூர்கிறோம். 

சுண்ணாம்புக் கால்வாய் ஷார்க்ஸ்:

சினிமா

கிரிக்கெட் என்றாலே முதலில் மூளையில் ப்ளாஷ் அடிப்பது இந்த சேட்டைக்கார சுண்ணாம்புக் கால்வாய் பாய்ஸ்தான். எண்ணிப் பார்த்தால் பத்து பேரில் நான்கு பேருக்குத்தான் விளையாடவே வரும். மற்ற ஆறு பேரும் 'பந்தை பிடி, பந்தைப் பிடி, குருட்டு சுத்து சுத்து' ரகம்தான். ஆனாலும் இந்த ஓட்டை ஒடைசல் டீமை வைத்துக்கொண்டே ஒவ்வொரு முறையும் பைனல் வருவதுதான் கெத்து. கொஞ்சமே கொஞ்சம் கிரிக்கெட், நிறைய கலாய் என தமிழ் சினிமாவின் கலர்ஃபுல் டீம் இது!

7ஜி ரெயின்போ கம்பெனி:

சினிமா

டிபிக்கல் நம்ம வீட்டுப் பசங்க. ஒரு ஆளுக்கு சூப்பராக ஆட வரும். இன்னொருவர் டபுள் சைட், மற்றொருவர் 'நானும் கிரிக்கெட் விளையாடுவேன், நானும் கிரிக்கெட் விளையாடுவேன்... பாத்துக்க பாத்துக்க' ரகம். இப்படி நம் காம்பவுண்டைச் சுற்றி இருக்கும் பிளேயர்களைக் கண் முன் நிறுத்தும் தத்ரூபம் இவர்களின் பலம். கிரிக்கெட் வருகிறதோ இல்லையோ அதை வைத்து பெர்மாமன்ஸ் செய்ய மட்டும் நன்றாகவே வரும்.

பக்ஸ் அண்ட் பாய்ஸ்:

சினிமா

மேலே பார்த்தது நம் காம்பவுண்டில் இருக்கும் டீம் என்றால் இது நம் வீட்டில் இருக்கும் மினி டீம். மொத்தமே நான்கே பேர்தான். ஒன்பிட்ச் கேட்ச், டபுள் சைட் கீப்பர், டென்னிஸ் பால், மூடு இருந்தால் அவுட், இல்லையென்றால் நாட் அவுட் என ஏகப்பட்ட சர்வதேச ரூல்களைக் கொண்டு விளையாடும் டீம். இலவச இணைப்பாக மண்டையில் உள்காயம், ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் என எக்கச்சக்க பரிசுகள் வேறு. நடுவுல கொஞ்சம் கிரிக்கெட்டைக் காணோம்!

கோடைவண்ணன் அண்ட் கோ:

சினிமா

ஐ.பி.எல்லின் கிராமத்து வெர்ஷன் இது. ரெண்டு பரம வைரி டீம்கள். அவர்களை ட்ரெய்ன் செய்ய வரும் அசலூர் கோச், கோப்பைக்கு பதிலாக நிலபுலன்கள் என பாலிவுட் லகானை வருஷநாட்டு லாடமாக்கி இருப்பார்கள். மற்ற டீம்களுக்கும் இதற்கும் உள்ள ஒரே வித்தியாசம், நிஜ கிரிக்கெட் பிளேயரே இதில் நடித்திருப்பதுதான். மற்றபடி சுமார் ரக கிரிக்கெட்தான். வாட் டு டூ!

பாப்பம்பட்டி அணி:

சினிமா

தமிழ் சினிமாவின் காமெடி குடோன் இந்த பாப்பம்பட்டி அணிதான். சத்யராஜ் கேப்டன், வடிவேலு வைஸ் கேப்டன் என ரகளை காம்போ. 'ஒண்ணு தூங்குற இல்ல தூர் வாருற', 'இனி நீ சங்கிலி இல்ல.. கங்குலி' மாதிரியான உலகத்தர டயலாக்குகள் இடம்பெற்ற படம். பேட்டை வைத்து பிச்சை எடுப்பது, டயர் உருட்டுவது என காமெடி கியாரன்டி என்பதால் தமிழ் சினிமாவின் சாம்பியன்ஸ் டிராபி கோப்பை சந்தேகமே இல்லாமல் இவர்களுக்குத்தான்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்