Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வெட்கப்பட, வெட்கப்படுங்கள்! #MondayMotivation #MisterK

சந்தோஷ் நல்ல வேலைக்காரன். மூளைக்காரன். அலுவலகத்தின் பெரும்பாலான புராஜெக்ட்களைக் குறித்த நேரத்துக்கு முன்பாக அனுப்பி, பெயர் பெறுபவன். உடன் பணிபுரியும் நண்பர்களுக்கு ஒரு சந்தேகம் என்றால் அவனது டெஸ்குக்கு முன்தான் நிற்பார்கள்.

ஒரு பெரிய புராஜெக்ட் வந்தது. அதன் தலைமை  நிச்சயம் சந்தோஷுக்குத்தான் என்று பலரும் கணித்திருக்க, தலைமை அலுவகத்தில் இருந்து ‘Congrats Mister. K' என்று மிஸ்டர் Kவுக்குச் சென்றது மின்னஞ்சல்.

‘அதெப்படி? மிஸ்டர் K-யும்  திறமைசாலிதான். ஆனால் அவனைவிட நான் என்ன விதத்தில் குறை?’ என்று மண்டைகுடையவே மேலதிகாரியைச் சந்தித்துக் கேட்டான் சந்தோஷ்.

Mister K

”உனக்கே தெரியும் சந்தோஷ். ஏற்கெனவே பலமுறை நானும் சொல்லிருக்கேன். ஒரு மீட்டிங், கான்ஃப்ரன்ஸ்னா உன் கருத்தைப் பகிர்ந்துக்கவோ, கேள்வி கேட்கவோ தயங்கற. வெட்கப்படற. அதே மிஸ்டர் K வை எடுத்துக்கோ. சரியோ, தப்போ, கிண்டல் பண்றாங்களோ, பாராட்றாங்களோ அவன் குரல்தான் ஒரு ஹால்ல முதல்ல ஒலிக்குது.

இந்த புராஜெக்ட் முடியற வரை, பல கட்டங்கள் இருக்கு. டிரெய்னிங்ஸ் இருக்கும். மீட்டிங்ஸ் இருக்கும். பல கம்பெனிகள்ல இருந்து ஆட்கள் வருவாங்க. அங்க வெட்கப்படாமப் பேசியே ஆகணும். ‘எதாவது நினைப்பாங்க. கிண்டல் பண்ணுவாங்க’னு நீ காக்கற அமைதி, நம்ம நிறுவனத்துக்கே பின்னடைவா இருக்கலாம்.. அதுனாலதான்..”

அன்று மாலை மிஸ்டர் Kயுடன் காஃபிஷாப் சென்றான். 

“எனக்கே தெரியுதுடா. ஆனா கூட்டத்துல பேசவே வெட்கமா இருக்கு. ரொம்ப ஷை டைப்பாவே இருந்துட்டேன்” - புலம்பினான் சந்தோஷ்.

“அதெல்லாம் ஈஸிடா” தோளில் கைபோட்டபடி சொன்னான் மிஸ்டர் K. ”மொதல்ல காஃபி ஆர்டர் பண்ணு” என்றான் சந்தோஷைப் பார்த்து.

“எனக்கு ஒரு சாண்ட்விச். ஒரு காஃபி” என்றுவிட்டு பேச்சைத் தொடர்ந்தவனைத் தடுத்து நிறுத்தினான் மிஸ்டர் K. 

“என்கிட்ட எதுக்கு சொல்ற? கூப்டு ஆர்டர் பண்ணு”

“எப்பவும் நீதான பண்ணுவ?”

“அதான். நீ பண்ணு இனிமே. புது ஆட்கள்கிட்ட பேசப்பழகு. இதான் ஆரம்பம்”

சந்தோஷ் அழைத்து ஆர்டர் செய்துமுடித்து, ‘பண்ணிட்டேன். இதெல்லாம் பண்ணுவேனே.. இதுல என்ன இருக்கு?” என்றான்.
 
கடை இளைஞன் சாண்ட்விச் வைத்ததும், ‘என்ன ப்ரோ. டென்ஷனா இருக்கறாப்ல இருக்கு?” என்றான் மிஸ்டர் K. அடுத்த ஐந்து நிமிடங்களில், அந்த இளைஞனின் பெயர், சொந்த ஊரெல்லாம் கேட்டு ஏதோ பல வருட நண்பர்கள் பேசுவதுபோலப் பேசினான். அந்த இளைஞன் சென்றதும், சந்தோஷிடம் திரும்பினான். 

புதியவர்களிடம் பேசு:

“பொது இடங்கள்ல உனக்குத் தேவையானதை மட்டும் சொல்லிட்டு, கம்னு இருக்காத. பேசு. ஆட்டோ, டாக்ஸில ஏறினா பேச்சுக்குடுத்துப் பழகு. அதுவே உன் தயக்கத்தைப் பாதி போக்கும். 

 கேள்வி கேள்:

மீட்டிங், கான்ஃப்ரன்ஸ்ல ஒருத்தர் பேசி முடிச்சதும், ‘எனி கொஸ்டின்ஸ்?’ம் பாரு. உனக்கு நூறு டவுட் இருந்தாலும் கேட்கத் தயங்காத. தப்பா இருந்தாலும், பேசறவர் கோவிச்சுட்டாலும், சுத்தி இருக்கறவங்க சிரிச்சாலும் பரவால்ல. கேளு. அந்தக் கேள்வி, அந்த அறையில் இருக்கறவங்கள்ல 70% மனசுல இருக்கற கேள்வியாகத்தான் இருக்கும்.

இன்னொருவருக்காகப் பேசு:

பப்ளிக்ல யாரோ க்யூவ மீறி முன்னால் போறாங்க. யாருக்கோ ஒரு இடைஞ்சல் நடக்குது. நமக்கென்னன்னு நெனைக்காம, கேள்வி கேள். பயமோ, தயக்கமோ, வெட்கமோ தேவையே இல்ல இதுல.

நன்றி சொல்:

ஒரு கூட்டம், ஒரு ஆட்டோ பயணம்னு எதா இருந்தாலும் முடியறப்ப முதல் ஆளா நன்றி சொல்லு. அதுக்குத் தயக்கமோ, வெட்கமோ தேவையில்லைதானே? ‘ரொம்ப நல்லா இருந்தது. தேங்க்ஸ்’ அப்டினு பலர் முன்னாடி சொல்றப்ப உனக்குள்ள ஒரு தயக்கச் சங்கிலி அறுபடும்.   

இந்த நாலு சிம்பிள் விஷயங்களை மொதல்ல ஆரம்பி. இதெல்லாம் சின்னச்சின்ன விஷயங்கள்தான். ஆனா பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்!”

மிஸ்டர் K சொல்லிமுடித்ததும், அவனைக் கட்டிக் கொண்டான் சந்தோஷ். ‘இன்னைல இருந்தே ஃபாலோ பண்றேண்டா..” என்றான் மலர்ச்சியுடன். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement