வெளியிடப்பட்ட நேரம்: 10:19 (20/06/2017)

கடைசி தொடர்பு:10:19 (20/06/2017)

நோபல் பரிசுக்கு இணையான மார்க்கோனி விருது... இந்தியருக்குப் பெற்றுத்தந்த Mpeg வீடியோக்கள்..!

தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் சிறப்பான பங்களிப்பை அளிக்கும் நபர்களுக்கு, வருடந்தோறும் மார்க்கோனி விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்றவரும், வானொலியைக் கண்டுபிடித்தவருமான குக்லியெல்லோ மார்க்கோனியின் நினைவாக, அவரது மகள் கியோயா மார்க்கோனி பிராகா தொடங்கிய அறக்கட்டளையின் சார்பில் இவ்விருது வழங்கப்படுகிறது. 1975-ம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வரும் இந்த விருது, அறிவியல் உலகில் நோபல் பரிசுக்கு அடுத்தபடியாக உயரியதாகக் கருதப்படுகிறது.

மார்க்கோனி விருது

'இணையத்தின் தந்தை' என்றழைக்கப்படும் டிம் பெர்னர்ஸ் லீ, மொபைல் போனைக் கண்டுபிடித்த மார்ட்டின் கூப்பர் உள்ளிட்ட பல அறிவியலாளர்கள் மார்க்கோனி விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டுள்ளனர். யூ.ஜி.சி தலைவராக இருந்த யாஷ் பால் (Yash Pal) 1980-ம் ஆண்டிலும், வயர்லெஸ் ஆன்டென்னா தொழில்நுட்பத்தின் முன்னோடியான ஆரோக்கியசாமி பால்ராஜ் (Arogyaswami Paulraj) 2014-ம் ஆண்டிலும் இதே விருதை வென்ற இந்தியர்கள் ஆவர். 

வெளிநாட்டுவாழ் இந்தியரான டாக்டர். அருண் நேத்ராவலிக்கு, தொலைதொடர்புத் துறை தொடர்பான அவரின் சாதனைகளுக்காக, 2017-ம் ஆண்டுக்கான மார்க்கோனி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பெல் லேபில் பணிபுரிந்த அவர், வீடியோ என்கோடிங் துறையில் செய்த மகத்தான சாதனையைப் பாராட்டி இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவரின் இந்தக் கண்டுபிடிப்பின் அடிப்படையைக் கொண்டே எம்.பி 1, எம்பி-4 உள்ளிட்ட பல வீடியோக்களும் கோடிங் செய்யப்படுகின்றன. இந்த விருதோடு சேர்த்து 1,00,000 டாலர் மதிப்பிலான ரொக்கப்பரிசும் டாக்டர். அருணுக்கு வழங்கப்படவுள்ளது.

அருண் நேத்ராவலி

கர்நாடகா மாநிலத்தில் உள்ள அங்கோலாவைச் சேர்ந்த அருண், மும்பை ஐ.ஐ.டி-யில் படித்தவர். மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்ற அவர், 1968-ம் ஆண்டுமுதல் அங்குதான் வாழ்ந்து வருகிறார். தற்போது 71 வயது ஆகும் அவர், டிஜிட்டல் வீடியோ தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியிருக்கிறார். மார்க்கோனி சொஷைட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், "நேத்ராவலியின் வீடியோ கம்ப்ரெஸ் தொழில்நுட்பம்தான் தற்போது பயன்பாட்டில் இருக்கும் MPEG தொழில்நுட்பத்தின் அடிப்படை. மேலும், டிஜிட்டல் வீடியோ புரட்சி ஏற்படக் காரணமான வீடியோ ஸ்ட்ரீமிங், டிஜிட்டல் மற்றும் ஹெச்.டி தொலைக்காட்சி போன்ற வீடியோ சேவைகளும் இவரின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டே செயல்படுகின்றன" எனப் புகழாரம் சூட்டியுள்ளது.

அருண் நேத்ராவலியின் பெயரில் 70-க்கும் மேற்பட்ட காப்புரிமைகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. அனலாக் வடிவில் இருந்த தொலைக்காட்சித் துறையை டிஜிட்டல் வடிவத்துக்கு மாற்றிய பெருமை இவரையே சேரும். ஹெ.டி தொலைக்காட்சி தொழில்நுட்ப வளர்ச்சியில் இவருக்கு மிகப்பெரிய பங்கிருக்கிறது. பெல் லேப்ஸில் பணிபுரிந்தபோது இவர் ஏற்படுத்திய இந்த தொழில்நுட்பம்தான், இன்று பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களிலும், வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையிலும் பயன்படுத்தப்படுகிறது.

மார்க்கோனி விருது சொஷைட்டியின் தலைவர் டாக்டர். வின்ட் செர்ப் (Vint Cerf), "தொலைதொடர்பில் சில விஷயங்கள் சமீப காலத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும் கூட, அருண் ஏற்படுத்திய வீடியோ புரட்சிக்கு நிகராக இல்லை. படங்கள், யூடியூப், லைவ் ஸ்ட்ரீமிங் என மக்களின் தொடர்பு விஷயம் பெரிதளவு மாறியுள்ளது. விர்ச்சுவல் ரியாலிட்டி உள்ளிட்ட அடுத்த தலைமுறை வீடியோவும் அருண் ஏற்படுத்திய வீடியோ கம்ப்ரெஸ் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டே செயல்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

நியூ ஜெர்ஸியில் அக்டோபர் மாதம் 3-ம் தேதி நடைபெறவிருக்கும் விருது வழங்கும் விழாவில், இவ்விருது டாக்டர். அருண் நேத்ராவலிக்கு வழங்கப்படவிருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்