Election bannerElection banner
Published:Updated:

மீன்பிடித் தடைக் காலம் நீங்கியது... ராட்சத மீன்களைப் பரிசளிக்கும் கடல் மாதா!

மீன்பிடித் தடைக் காலம் நீங்கியது... ராட்சத மீன்களைப் பரிசளிக்கும் கடல் மாதா!
மீன்பிடித் தடைக் காலம் நீங்கியது... ராட்சத மீன்களைப் பரிசளிக்கும் கடல் மாதா!

மீன்பிடித் தடைக் காலம் நீங்கியது... ராட்சத மீன்களைப் பரிசளிக்கும் கடல் மாதா!

மீன்பிடித் தடைக்காலம் நீங்கிவிட்டதால், கடலுக்குள் செல்லத் தொடங்கியிருக்கும் மீனவர்கள், ராட்சத மீன்களைப் பிடித்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் கரை திரும்புகின்றனர்.

சென்னை காசிமேடு மீன் பிடிப்புப் பகுதியில், இன்று காலை பதினோரு மணியளவில், மீனவர் ஃப்ரான்சிஸ் 500 கிலோ எடையுடைய மீனுடன் கரை திரும்பினார். ''தடைக்காலம் நீங்கி கடலுக்குள் சென்ற முதல் நாளே 500 கிலோ எடைக்கும் மேலான ராட்சத திருக்கை மீன் சிக்கியது, மகிழ்ச்சியை அளிக்கிறது'' என்கிறார், மீனவர் ஃப்ரான்சிஸ். நடுக்கடலில் சிக்கிய இம்மீன் அதிக எடையுடன் இருப்பதால், மேற்கொண்டு கடலுக்குள் பயணிக்க இயலாமல், கரை திரும்பியதாகக்  கூறுகிறார். மேலும், தடைக் காலத்துக்குப் பின் மீன் வரத்து அதிகரிக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. மேலும், மீனவர்கள் நல்ல லாபம் அடைய வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

அதிக எடையுடன் கூடிய ராட்சத திருக்கை மீன், காசிமேடு மீனவரின் பிடியில் சிக்கியிருப்பது அப்பகுதி மீனவ மக்களிடையே பெரும் ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. பெரும்பாலான மீனவர்கள் இந்த மீனைக் காண்பதற்காகவே, இன்று காசிமேடு மீன் பிடிப்புப் பகுதிகளில் திரண்டு காணப்பட்டனர்.

மீன்பிடித் தடைக்காலத்துக்குப் பின் மீன்பிடித்துத் திரும்பும் மீனவர்கள், ''ஓரளவு மீன்களின் வரத்து அதிகரித்திருப்பதாலும், தண்ணீர் ஓட்டம் அதிகரித்திருப்பதாலும் உற்சாகமாக இருக்கிறோம்'' என்று மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள் மீனவ சமூகத்தைச் சேர்ந்த வினோத் மற்றும் திருமால். 

மீன்களின் இனப்பெருக்கத்துக்காக வருடாவருடம் 45 நாள்கள் மீன்பிடிக்கத் தடை விதித்து உத்தரவிட்டு வருகிறது தமிழக அரசு. ஆனால், இந்த வருடம் மீன்பிடித் தடைக்காலத்தை 61 நாள்களாக அதிகரித்து ஆணை பிறப்பித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு, ஜுன் 15 ஆம் தேதி தடைக்காலம் நீங்கிய நிலையில், மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கத் தொடங்கியுள்ளனர். மீன்பிடித் தடைக்காலங்களில் மீனவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிவாரணம் வழங்கி வருகிறது.

''ஒவ்வொரு வருடமும் தடைக்காலம் 45 நாள்களாக இருந்துவந்த நிலையில், இந்த வருடம் மட்டும் 61  நாள்களாக அதிகரிக்கப்பட்டிருந்தது மீனவர்களை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. மீன் வரத்து அதிகரித்திருந்தால் மட்டுமே நாங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பமுடியும். அப்போதுதான் எங்கள் குடும்பங்களில் மகிழ்ச்சி பரவும்'' என்றும் கூறுகின்றனர் காசிமேடு மீனவர்கள்.

மீனவர் சங்கத் தலைவர் கபிலன் மற்றும்  துணைத் தலைவர்  ஜெயராமன் ஆகியோர் கூறியதாவது,

''மீன்பெருக்கத் தடைக்காலத்தை இந்த வருடம் அதிகரித்துவிட்டதால், மீனவர்கள் தங்கள் அன்றாட பிழைப்புக்கே மிகவும் சிரமப்படும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர். இதற்கிடையில், அரசு வழங்கும் நிவாரணத் தொகையும் அனைத்து  மீனவர்களையும் சென்றடையாதது பெரிய வருத்தத்தை அளிக்கிறது. தடைக்காலங்களில், கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து மீன் இறக்குமதி செய்யப்படுவதால், மீன்களை அதிக விலைக்கு விற்கவேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இதனால், மீனவர்கள் லாபம் அடைவதில்லை என்பதுதான் உண்மை. எனவே, மீனவர்கள் நலனுக்காக அரசு வழங்கும் நிவாரணத் தொகை அனைத்து மீனவக் குடும்பங்களையும் சென்றடையும் வகையில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இதுதவிர மீனவர் நலனுக்காக அரசிடம் பல்வேறு கோரிக்கைகளையும் மீனவர் சங்கம் சார்பாக வைத்துள்ளோம். ஆனாலும் இதுவரை  எந்த நலனும் எட்டப்படவில்லை'' என்கிறார்கள் சோகமாக.

உயிரைப் பணயம் வைத்து மீன் தொழிலை நடத்திவரும் இந்த மக்களின் இன்னல்களைத் தவிர்க்க அரசு, துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு