வெளியிடப்பட்ட நேரம்: 07:16 (21/06/2017)

கடைசி தொடர்பு:07:16 (21/06/2017)

"20 ரூபாய்க்கு பெட்ரோல் குடுப்பாங்களா?’’ - அம்மா பெட்ரோல் பங்க்.. மக்கள் மனசு!

சும்மா இல்லை; எல்லாமே அம்மா பிராண்ட் ஆகிவிட்டது. உப்பு, சிமென்ட், தண்ணீர் பாட்டில், மருந்தகம், தியேட்டர் என்று கிட்டத்தட்ட வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை விஷயங்களும் அம்மா ஆகிவிட்டன. ஜெயலலிதா இறந்த பிறகு அம்மா ஸ்டிக்கர் காலியாகும் என்றார்கள். ஆனால், பொருள்களில் உள்ள ஜெயலலிதாவின் ஸ்டிக்கர் மட்டும்தான் காலியாகி இருக்கிறது. மற்றபடி அம்மா தண்ணீர் பாட்டில், அம்மா உப்பு, அம்மா உணவகம் எல்லாம் சக்கைப் போடு போட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

அ.தி.மு.க.வில் வேண்டுமானால் நிறைய கிளைகள் உண்டு. ஆனால், அம்மா பிராண்ட் எல்லாவற்றுக்கும் ஒன்றுதான். சொல்லப் போனால், இப்போதுதான் ரத்தத்தின் ரத்தங்கள் சூடாகி இருக்கிறார்கள். இப்போது மக்களின் மத்தியில் கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருக்கும் பெட்ரோல் பங்க்குகளிலும் அம்மா பிராண்ட் நுழைந்துவிட்டது. ‘அம்மா பெட்ரோல் பங்க் வரப் போகிறது’ என்று நான்கு நாள்களுக்கு முன்பு அறிவித்து விட்டார் உணவுத் துறை அமைச்சர் காமராஜ்.

முதல்வர் பழனிசாமியின் எடப்பாடி தொகுதியில் ஆரம்பித்து, தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 10 இடங்களில் அம்மா பெட்ரோல் பங்க் திறக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். சென்னை, மதுரை, தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், வேலூர், விழுப்புரம், கரூர் - இவைதான் அந்த 10 இடங்கள். 

முந்தைய அம்மா நிறுவனங்களில் மக்களுக்கு ஒரு பிரயோஜனம் உண்டு. வாட்டர் பாட்டில்கள் வெளியே 20 ரூபாய் என்றால், அம்மா பாட்டில் 10 ரூபாய்க்குக் கிடைக்கிறது. அம்மா உணவகங்கள் பல ஏழை பேச்சிலர்களுக்கு வயிறை நிரப்பி, பர்ஸைக் காப்பாற்றுகின்றன. 5 ரூபாய்க்குச் சப்பாத்தி வாங்கி, இரண்டு வேளை வைத்துச் சாப்பிடும் நபர்கள்கூட இருக்கிறார்கள். மற்ற பிராண்ட்களும் அப்படியே! ஏதோ ஒருவிதத்தில் பொருளாதாரச் சிக்கலைக் காலி செய்கின்றன.

 

Amma petrol

ஆனால், பெட்ரோல் விஷயமே வேறு. ஆயில் நிறுவனங்களுக்கு நாட்டின் பொருளாதாரத்தைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்குண்டு. பெட்ரோல் விலையும் ஆயில் நிறுவனங்கள் நிர்ணயிப்பதே! அப்படி இருக்க, அம்மா பிராண்ட் என்றாலே விலைக் குறைப்பு இருந்தால்தானே? இது மத்திய அரசு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், விலையைக் குறைக்க முடியுமா? அப்படியே குறைத்தாலும், அம்மா பெட்ரோல் பங்க் எந்தவிதத்தில் எடுபடும்? இது உண்மையிலேயே மக்களுக்கு உதவுமா?

அம்மா பெட்ரோல் பங்க்குக்கு அ.தி.மு.க. சொல்லும் காரணம்: ‘‘பெட்ரோல் ஸ்ட்ரைக் இல்லாத நேரங்களில் இது மிகவும் பயன்படும்! அப்போது மக்கள் அலைவதைப் பார்க்கப் பாவமாக இருக்கிறது. இதைத் தடுப்பதுதான் அம்மா பங்க்கின் நோக்கம்!’’ 

என்னதான் சொல்கிறார்கள் மக்கள்?

பாதி பேருக்கு அம்மா பெட்ரோல் பங்க் ஆரம்பித்த விஷயமே தெரியவில்லை. ‘‘டி.வி.யில சொன்னாங்களா? பெட்ரோல் பங்க் ஆரம்பிக்கப் போறாங்களா? எப்போ?’’ என்றார் நந்தனத்தைச் சேர்ந்த ஒருவர். நாம் கேட்ட அனைவரின் பதிலுமே, ‘‘பெட்ரோல் லிட்டருக்கு எவ்வளவு தருவாங்க?’’ என்பதாகத்தான் இருந்தது. 

‘‘நல்லது செய்றதுன்னு ஆகிப் போச்சு... அதென்ன 10 இடம்... எல்லா இடத்துலேயும் ஆரம்பிக்க வேண்டியதுதானே!’’ என்றார் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த முருகன் என்பவர். 

‘‘அம்மான்னாலே விலை குறைவாகத்தான் இருக்கும்னு ஒரு நம்பிக்கை. பெட்ரோல் விலைதான் இப்போ ரொம்பத் தலைவலியா இருக்கு. இதுக்காகவே நான் பேசாம பைக்கில் இருந்து சைக்கிளுக்கு மாறலாம்னு பார்க்கிறேன். சீக்கிரம் ஆரம்பிங்க. விலையைக் குறைங்க. என் சப்போர்ட் உங்களுக்குத்தான்!’’ என்றார் நங்கநல்லூரைச் சேர்ந்த கோபி.

‘‘இதெல்லாம் வேலைக்கு ஆகாதுங்க.. எங்க ஊர்ல கூடத்தான் 16 இடங்கள்ல கவர்ன்மென்ட் பெட்ரோல் பங்க் இருக்கு. ஒவ்வொரு இடத்துலேயும் லிட்டர் ஒவ்வொரு விலைக்கு விக்கிறான். தமிழ்நாடு மட்டும் விதிவிலக்காயிடுமா?’’ என்றார் பாண்டிச்சேரியைச் சேர்ந்த தங்கப்பன். 

‘‘கோர்ட், அம்மானு பிராண்ட்களுக்குப் பேர் வைக்கக் கூடாதுன்னு ஆர்டர் போட்டிருக்கு. அதையும் மீறி எல்லாத்துக்கும் அம்மா அம்மானு கூவுனா எப்படி? அப்புறம் நமக்கும் கர்நாடகாகாரங்களுக்கும் என்ன வித்தியாசம்? தமிழ்நாட்டுக்குத் தண்ணி தரணும்னு சுப்ரீம் கோர்ட் ஆர்டர் போட்ட பிறகும் அதை அவமதிக்கிறாங்களே... முதல்ல திருந்துங்கய்யா!’’ என்றார் மதுரையைச் சேர்ந்த ஜெகதீஷ்.

‘‘பெட்ரோல் ஸ்ட்ரைக் வந்தா, முந்தின நாளே டேங்க்கை ஃபில் பண்ணிக்கப் போறோம்... இதெல்லாம் ஒரு பெரிய பிரச்னையா பாஸ்? எப்போவாவது ஸ்ட்ரைக் வரப் போகுது. அதுக்காகவா பெட்ரோல் பங்க் ஆரம்பிக்கப் போறாங்க...? அடிக்கடி லாரி ஸ்ட்ரைக்தான் வருது. பேசாம அம்மா லாரி விடச் சொல்லுங்க பாஸ்... உணவுப் பொருள்களை கம்மி விலைக்கு டெலிவரி எடுத்தா விலைவாசியாவது கட்டுப்படும். எப்படி நம்ம ஐடியா?’’ என்றார் ஆட்டோ டிரைவர்  சுப்பிரமணி.

‘‘இப்போதான் லவ் பண்ண ஆரம்பிச்சேன். பைக்கும் புதுசுங்க. அவளைக் கூப்பிட்டு ஊர் சுத்துறதுக்கே நேரம் சரியா இருக்கு. பெற்றோருக்குப் பயப்படுறதைவிட, பெட்ரோலுக்குப் பயந்து காதலை விட்றலாமான்னு பார்க்குறேன். 20 ரூபாய்க்கு ஒரு லிட்டர் கொடுக்கச் சொல்லுங்க.. என் ஓட்டு அ.தி.மு.க.வுக்குத்தான்!’’ என்றார் வேலூரைச் சேர்ந்த பிரசன்னா. 

விலைக் குறைப்பு சாத்தியமா? இது பற்றி தமிழ்நாடு பெட்ரோல் வணிகர் சங்கத் தலைவர் முரளி என்ன சொல்கிறார்? ‘‘சார், இது நீங்க கவர்ன்மென்ட் சிவில் சப்ளையர்கிட்டதான் கேட்கணும். பெட்ரோல் விலைக் குறைப்புங்கிறதெல்லாம் மத்திய அரசு சம்பந்தப்பட்ட விஷயம். அதைத் தாண்டி ஆயில் நிறுவனங்கள்தான் ஒவ்வொரு டீலரோட விலையையும் நிர்ணயிப்பது. இப்பவே சென்னையில தி.நகர்ல ஒரு ரேட்; அதுவே கிண்டிக்குப் போனா வேற ரேட். இதுதான் பெட்ரோலோட நிலை!’’ என்றார்.

அரசிடம் இருக்க வேண்டிய துறைகள் தனியார்வசம் இருக்கும்; தனியாரிடம் இருக்க வேண்டியவை அரசு வசம் இருக்கும். இதுதான் தமிழ்நாட்டின் ஸ்பெஷல். அப்படி இருக்க, பெட்ரோல் பங்க் மட்டும் விதிவிலக்கா? 

வீ ஆர் பாவம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்