ஹோட்டல்... தியேட்டர் தேடியது போதும்... உங்களுக்கருகில் இருக்கும் வேலைவாய்ப்புகளை சொல்கிறது கூகுள்!

கூகுள்... பிக் பேங் தியரியில் தொடங்கி, புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கோள் வரை எதைப்பற்றிக் கேட்டாலும், அது தொடர்பான அத்தனைத் தகவல்களையும் தரும் உலகின் முன்னணி தேடுதல் இயந்திரம். எந்தவொரு தேடல் பற்றியும் ட்ரில்லியன் பக்கங்களுக்குத் தகவல் தருவது கூகுளின் ஸ்பெஷாலிட்டி. பக்கத்துத் தெருவிலுள்ள இடத்திற்குக்கூட கூகுளிடம் வழிகேட்டுச் செல்பவர்கள்தான் அதிகம். தேடும் விஷயத்தைப் படங்கள், வீடியோக்கள், செய்திகள் எனப் பல கேட்டகிரிகளில் தகவல்கள் கொடுத்துக்கொண்டிருக்கிறது கூகுள்.

கூகுள்

ஒவ்வொரு நிறுவனத்துக்கும் வேலைவாய்ப்பு கேட்டு அலைந்து திரிந்த காலம் எப்போதோ முடிந்துவிட்டது. கூகுள் தேடுதல் இயந்திரத்தில்தான் தற்போது இளைஞர்கள் வேலை தேடுகின்றனர். அத்தனைத் தகவல்களையும் அள்ளித்தரும் கூகுள், இவர்களுக்காக தனது சர்ச் வசதியில் மேலும் ஒரு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, வேலைபற்றித் தேடுபவர்களுக்கு, வேலைவாய்ப்புள்ள நிறுவனங்களின் முகவரி மற்றும் விவரங்களை கூகுள் அளிக்கிறது.

இதுவரை வேலையைப் பற்றித்தேடினால், மான்ஸ்டர் (Monster), நவுக்ரி (Naukri) உள்ளிட்ட வேலைவாய்ப்பு நிறுவனங்களின் இணையதளங்களின் முகவரிகளையும், மற்ற தகவல்களையும் தான் கூகுள் தேடித்தரும். கூகுள் தற்போது சில வேலைவாய்ப்பு நிறுவனங்களுடனும், ஃபேஸ்புக் நிறுவனத்துடனும் இணைந்து செயல்படவிருக்கிறது. இதன்படி, எந்தவொரு வேலையைப்பற்றி இனி கூகுளில் சர்ச் செய்தாலும், வேலைவாய்ப்பு இருக்கும் நிறுவனங்களின் முழு விவரங்களைத் தேடுபவர்களுக்கு அளிக்கும்.

'Jobs near me' எனத்தேடினால், தேடுபவர்களின் இடத்தின் அருகே, வேலைவாய்ப்புள்ள  நிறுவனங்களின் முகவரி மற்றும் வேலையைப் பற்றிய விவரங்களைக் கூகுள் அளிக்கும். இதேபோல், 'Accountant Jobs' எனத் தேடினால் அது தொடர்பான வேலைவாய்ப்புள்ள நிறுவனங்களின் பெயர், காலிப்பணியிடத்திற்கான அறிவிப்பு, நிறுவனத்தின் முகவரி போன்ற முழு விவரங்களையும் கூகுள் காண்பிக்கும். இதேபோல், குறிப்பிட்ட துறைசார்ந்த தேடலையும் மேற்கொள்ள முடியும். உதாரணத்துக்கு தயாரிப்பு நிறுவனத்தில் வேலை வேண்டுமா அல்லது ஹெல்த்கேர் துறையில் வேலை வேண்டுமா என்பதைக் குறிப்பிட்டு, தேடலை மேற்கொள்ள முடியும். வேலையைக் குறிப்பிட்டுக்கூட தேடல் மேற்கொள்ள முடியும். ஒரு நிறுவனம் வேலைவாய்ப்பை அறிவித்த தேதி பற்றியும் தேடல் முடிவில் தெரிந்துகொள்ள முடியும். முழுநேரப் பணி, பகுதிநேரப் பணி, ஒப்பந்தப்பணி மற்றும் பயிற்சி போன்றவற்றில், ஒன்றை மட்டும் குறிப்பிட்டுத் தேடும் வசதியும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Google Search - Job

லிங்கெட்இன் (LinkedIn), மான்ஸ்டர் (Monster), வேஅப் (WayUp), டேரக்ட் எம்ப்ளாயர்ஸ் (DirectEmployers), கேரியர் பில்டர் (CareerBuilder), கிளாஸ்டோர் (Glassdoor) மற்றும் ஃபேஸ்புக் (Facebook) நிறுவனங்களுடன் இணைந்து கூகுள் இந்த வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்களை, நிறுவனங்கள் கூகுளில் பதிவிட்டால் போதும். தேடல் முடிவில் அவை பற்றிய விவரங்கள் அப்டேட் ஆகிவிடும்.

இந்த வசதி முதற்கட்டமாகத் தற்போது அமெரிக்காவில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வேலை வாய்ப்புத் தளம் முதன்மையாக இருக்குமென்பதால், எதிர்காலத்தில் முதன்மை நிறுவனங்களுடன் கூகுள் இணைந்து செயல்படவுள்ளது. அதன்பின், இதே வசதியை விரைவில் மற்ற நாடுகளிலும் கூகுள் கொண்டுவரும் எனத்தெரிகிறது.

"வேலை வேண்டுமா கூகுளில் தேடு" என்பதற்குப் பதில், "முறையான வார்த்தைகளைப் போட்டு கூகுளில் வேலை தேடு" என எதிர்காலத்தில் பெரியவர்கள் அறிவுரை சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!