வெளியிடப்பட்ட நேரம்: 15:59 (23/06/2017)

கடைசி தொடர்பு:16:34 (23/06/2017)

தமிழக மாணவனின் ‘கலாம்சாட்’ செயற்கைக்கோள்.. விண்ணில் பறந்த திக் திக் தருணங்கள்!

 கலாம்சாட்

"இது ஒன்றும் பெரிய ராக்கெட் சயின்ஸ் இல்லை!" மிகவும் சாதாரண விஷயங்களைச் சுட்டிக் காட்ட கிண்டலுக்காகப் பலர் இதைக் கூறுவதைக் கேட்டிருப்போம். ஆனால் கரூரில் உள்ள பள்ளப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த 18 வயது ரிஃபாத் ஷாரூக் நிஜமாகவே ராக்கெட் சயின்ஸில் உலக அளவில் அசத்தியிருக்கிறார்! வருடந்தோறும் நாசா நடத்தும் "Cubes in Space" என்ற போட்டியில் இந்த வருடம் "ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா" என்ற அமைப்பின் உதவியுடன் பங்குக்கொண்டு வெற்றிப்பெற்றிருக்கிறார்.

ஜூன் 17 முதல் 23 வரை NASAவில் கொண்டாடப்படும் 'ராக்கெட் வீக்'கின் ஓர் அங்கமாக நடந்த இப்போட்டியில், ஜூன் 22 அன்று, உலகமெங்கும் இருக்கும் பள்ளிமாணவர்கள் தயாரித்த 80 சிறிய க்யூப்களை ஏற்றி பறந்தது 36 அடி ‘நாசா டெரியர்-இம்ப்ரூவ்ட் ஓரியன் சப்பார்பிட்டல் சௌண்டிங் ராக்கெட்’ (NASA Terrier-Improved Orion suborbital sounding rocket). இப்போட்டிக்காக ‘கலாம்சாட்’ என்ற க்யூப் வடிவ செயற்கைக்கோள் ஒன்றை கார்பன் இழைகளால் 3D பிரின்டிங் தொழில்நுட்பம் கொண்டு தயாரித்திருந்தார் ரிஃபாத். வெறும் 3.8 செ.மீ. நீளமும், 64 கிராம் எடையும் கொண்ட இந்த செயற்கைக்கோளை ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் "உலகின் மிகவும் எடைக்குறைவான மற்றும் சிறிய செயற்கைக்கோள்" என்று சான்றளித்து பாராட்டியிருக்கிறது.

‘கலாம்சாட்' விண்ணில் ஏவப்படும் நிகழ்வை ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அலுவலகத்திலிருந்தே கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெரியத் திரையில், பலரின் முன்னிலையில் அந்த அற்புதமான சாதனைத் தருணத்திற்கு ஒட்டுமொத்த ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அணியும் காத்திருந்தனர். நேரடி வர்ணனையுடன், கீழே நொடிகள் ஒவ்வொன்றாகக் கரைய ஆரம்பிக்க, அனைவருக்கும் தொற்றிக்கொண்டது பரபரப்பு! சரியாகக் குறித்த நேரத்தில் பலத்த ஆரவாரங்களுக்கு இடையே வெற்றிகரமாக விண்ணில் பறந்தது கலாம்சாட். நம்மிடம் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துக் கொண்ட ரிஃபாத், இந்த மிஷன் குறித்து விளக்கத்தொடங்கினார்.

"எங்கள் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அணி பல்வேறு திறமைசாலிகளை உள்ளடக்கியது. மிஷன் டைரக்டராக டாக்டர். ஸ்ரீமதி கேசன், கட்டமைப்பு பொறியாளராக திரு. வினய் பரத்வாஜ், தலைமை தொழிநுட்பவியலாளராக திரு. யக்ஞா சாய், விமான பொறியாளராக திரு, தனிஷ்க் திவிவேதி, உயிரியல் அறிஞராக திரு. கோபிநாத், சோதனைப் பொறியாளராக திரு. முகமத் காசிப் மற்றும் தலைமை விஞ்ஞானியாக நானும் இணைந்து பணியாற்றியுள்ளோம். 73 மையில்கள் உயரம் தொடப்போகும் கலாம்சாட், விண்வெளியில் சுமார் 10 முதல் 12 நிமிடங்கள் தங்கி தகவல்களைச் சேகரிக்கும். இதன் மூலம் 3D பிரின்டட் கார்பன் இழைகள் விண்வெளியில் எத்தனை நேரம் பயணிக்கமுடியும், அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை நாம் அறிய முடியும். மேலும், பூமியின் கதிர்வீச்சு, முடுக்கம், சுழற்சி மற்றும் காந்தப்புலன் குறித்த ஆய்வுகளையும் இது மேற்கொள்ளும். கூடுதலாக விண்வெளியில் விவசாயம் சாத்தியமா என்ற கேள்விக்கு விடைக்காணும் நோக்கிலும் இதை வடிவமைத்துள்ளோம். தன் வேலை முடிவடைந்தவுடன் சேகரித்த தகவல்களுடன் தரையிறங்கும் கலாம்சாட்டைக் கொண்டு நாங்கள் எங்கள் ஆராய்ச்சியைத் தொடர உள்ளோம்."

கலாம் சாட்

இந்த மிஷனின் டைரக்டர் ஸ்ரீமதி கேசன் பேசுகையில், "விஞ்ஞானி ஆக வயது என்றுமே தடையில்லை என்று அனைவருக்கும் உணர்த்தியிருக்கிறார்கள் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அணி. இந்தப் பொன்னான வாய்ப்பளித்த நாசா, "Cubes in Space" போட்டிக்கு உறுதுணையாக இருந்த idoodlelearning inc. மற்றும் Colorado Space Grant Consortium ஆகிய நிறுவனங்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்றார்.

இறுதியாக, "அமெரிக்காவில் இருக்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் போல, நமது நாட்டிலும் விண்வெளி உற்பத்திகள் மற்றும் விண்வெளி போக்குவரத்து சேவைகள் செய்யும் நிறுவனங்கள் கொண்டுவர வேண்டும். இதன் மூலம் இந்தியாவை கூடிய விரைவில் அனைவரும் வியந்துப்பார்க்கும் ‘ஸ்பேஸ் ஹப்பாக’ மாற்றுவதே எங்கள் எண்ணம்" என்று பெரிய கனவுடன் முடித்தார், மறைந்த உயர்திரு. அப்துல்கலாமின் பெயரில் சாட்டிலைட் தயாரித்த ரிஃபாத். அவரின் கனவுகள் நனவாக வாழ்த்துவோமே.


டிரெண்டிங் @ விகடன்