“இப்படித்தான் வாழ வேண்டும் என்று அறிவுரை சொல்லும் தகுதி எனக்கு இருக்கிறது!” - கண்ணதாசன் | Kannadasan Birthday Special Article

வெளியிடப்பட்ட நேரம்: 15:38 (24/06/2017)

கடைசி தொடர்பு:15:38 (24/06/2017)

“இப்படித்தான் வாழ வேண்டும் என்று அறிவுரை சொல்லும் தகுதி எனக்கு இருக்கிறது!” - கண்ணதாசன்

கண்ணதாசன்

“எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான். அதனால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று அறிவுரை சொல்லும் தகுதி எனக்கு இருக்கிறது'' என்றவர் கவியரசு கண்ணதாசன். அவருடைய பிறந்ததினம் இன்று. பல மனிதர்களிடையே பழகி அதற்கான அனுபவங்களைப் பெற்றதால்தான், அவர் அந்த வரிகளை அப்படி எழுதியுள்ளார். அந்த அனுபவத்தின் அடிப்படையில்தான் கண்ணதாசன், மனிதர்களுக்கேற்ற ஒரு மகத்துவமிக்க வரிகளை இப்படி எழுதியிருந்தார். ''யாருக்காகவும் உன்னை மாற்றிக்கொள்ளாதே; ஒருவேளை மாற நினைத்தால், ஒவ்வொரு மனிதர்களுக்கும் நீ மாற வேண்டியிருக்கும்''.

மனித மனங்களில் இந்த மந்திர வரிகளை விதைத்த அவர், அந்தக் காலத்தில் தாம் செய்த தவறுகள் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்.
 

''சேராத கூட்டத்தில்
    என்னை மறந்துநான்
        சேர்ந்தநாள் அந்தநாளே

செறிவான புத்தியைத் 
    தவறான பாதையில்
        செலுத்தினேன் அந்தநாளே!''

இப்படி வாழ்க்கையில் ஏற்பட்ட அவமானங்களையும், சந்தித்த பிரச்னைகளையும் தன் அனுபவங்கள் மூலம் பாடல்களாகவும், கட்டுரைகளாகவும் எழுதியதால்தான் பின்னாளில் அவர், மிகச்சிறந்த கவிஞராக உருவாவததற்கு அடிகோலியது; அரசியலில் கால்வைத்த பிறகு, அவரால் அனைத்தையும் உணர்ந்துகொள்ள முடிந்தது; உடலுக்கு அழிவு தரக்கூடியதிலிருந்து அவர் விலகியபோது காலனிடம் சிக்கிக்கொள்ள நேர்ந்தது. 

அவர், தன்னுடைய அரசியல் களம் எப்படிப்பட்டது என்பதை மிகவும் தெளிவாகத் தன்னுடைய சுயசரிதைகளிலும், பிற நூல்களிலும் குறிப்பிட்டுள்ளார். தொடக்கத்தில் தி.மு.க-வில் காலடி எடுத்துவைத்த கவிஞர், அவருடைய நண்பரும் தி.மு.க-வின் தலைவருமான கருணாநிதியைப் பற்றி அரசியல்ரீதியாக இப்படிக் குறிப்பிடுகிறார்.

கருணாநிதியுடன் கண்ணதாசன்...

''கருணாநிதியின் அரசியல் சாமர்த்தியம்!'' 

''கருணாநிதி அரசியல் நிர்வாகத்தில் மிகுந்த திறமைசாலி. ‘எங்கே எந்தத் தொண்டன் இருக்கிறான்; எந்த மாவட்டத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்; எந்த ஊரில் கிளை இருக்கிறது, இல்லை’ என்கிற அனைத்தும் அவர் விரல்நுனியில் அடங்கி இருந்தன. அவ்வளவு திறமைசாலி. பேச்சில் ஒருவரை வளைக்க வேண்டும் என்றால், அவரால் வளைக்க முடியும். முன்னாலே உட்கார்ந்திருப்பவர்களை அழவைக்க வேண்டும் என்றால், அழ வைக்க முடியும். யாரைப் பக்கத்திலே இழுக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவரைச் சாகசம் செய்தாவது வரவழைத்துவிடுவார்; உள்ளே இழுத்துவிடுவார். கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்துகூட ஆள்களை இழுத்துக்கொள்ளக் கூடிய சாமர்த்தியம் அவருக்கு மட்டுமே உண்டு. எந்தக் கட்டுப்பாட்டையும் உடைத்து ஆள்களை இழுக்கக் கூடியவர். எம்.ஜி.ஆர் விஷயத்தில், யானை தடம் தப்பியதைப்போலத் தப்பினாரே தவிர, மற்றபடி அவருக்கு அரசியல் சாமர்த்தியம் என்பது மிக அதிகம். நிர்வாகத்தில் ஏற்கெனவே இருந்த எல்லாரையும்விட அவர் திறமைசாலி என தலைமைச் செயலகத்தில் இன்றைக்கும் எல்லாரும் ஒப்புக்கொள்கிறார்கள்'' என்று கருணாநிதியைப் பற்றிச் சொன்ன கவிஞர் கண்ணதாசன், அதேவேளையில்... புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைப் பற்றியும் இப்படிக் குறிப்பிடுகிறார்.

“எம்.ஜி.ஆர் கெட்டிக்காரர்!”

“யாருடன் மிகவும் நெருக்கமாக இருந்தால், எந்த எதிரியைத் தீர்த்துக் கட்டலாம் என்பதில் கருணாநிதியைவிட எம்.ஜி.ஆர் கெட்டிக்காரராக விளங்கினார். கருணாநிதிக்கு இல்லாத சில புதிய திறமைகளும், எம்.ஜி.ஆருக்கு இருந்ததாக அந்தக் காலங்களில் கருதப்பட்டது. உண்மையாகவே ஒருகட்டத்தில் ஆகிவிட்டது. எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையில் நீண்டகாலமாகத் தொழில் தொடர்பு உண்டு. அந்தத் தொடர்புகளில் கசப்பு இருந்தாலும், இனிப்பும் இருந்தது. ஆனால், அரசியலில் அவர் நடந்துகொண்ட முறையும், சாமர்த்தியமும் எனக்கே திகைப்பாக இருந்தன. நமக்குக்கூட அந்த அளவுக்கு உழைக்கிற சக்தி இல்லை என்பது புரிந்தது. திண்டுக்கல் தேர்தலில் அவர் ஈடுபட்டபோது... அந்தத் தேர்தலுக்கு அவர் பட்டபாடு, அதிகாலையிலிருந்து இரவுவரையில் அவர் செய்துவந்த சுற்றுப்பயணங்கள்... அவை வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.  சோம்பல் என்பது துளியும் இல்லாமல், அவர் எந்தச் சூழ்நிலையிலேயும் யாரையும் சந்திப்பதற்குத் தயாராக இருந்து மாபெரும் வெற்றி ஒன்றை, எல்லாக் கட்சிகளையும் எதிர்த்துப் பெற்றார் என்பது, தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும்'' என்று எம்.ஜி.ஆரைப் பற்றிப் புகழ்கிறார்.

எம்.ஜி.ஆருடன் கண்ணதாசன்...

அரசியல் கண்ணோட்டம்!

கருணாநிதி, எம்.ஜி.ஆர் மட்டுமல்லாது, தந்தை பெரியார், காமராஜர், அண்ணா, நேரு, இந்திரா காந்தி, ராஜாஜி எனப் பலருடைய பண்புகளையும் அவர்கள் நடந்துகொண்ட விதங்களையும் எந்த நேரத்திலும் தயங்காது துணிச்சலுடன் சொன்னவர் கண்ணதாசன். பொதுவாக, ''கட்சித் தலைவர்கள் அதாவது, அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றி வாழ்வதையே விரும்பினார்கள்; தலைவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் சுயலாபத்துக்காகவே செயல்பட்டனர்; கொள்கைகளைப் பற்றி மேடையில் முழங்கினாலும், அவர்கள் அதில் நம்பிக்கையோ, உடன்பாடு உள்ளவர்களோ இல்லை'' என்பதே அவரது வாதமாக இருந்தது. மேலும், அவர் வெவ்வேறு காலகட்டங்களில் ஒவ்வோர் இயக்கங்களிலும் இருந்தபோது... அரசியல் தலைவர்கள் பலரையும்  தன் எழுத்துகளால் பந்தாடினார்; அதே சமயத்தில் அவர்களுடன் நெருங்கியிருந்தபோது பாராட்டவும் செய்தார். இப்படிக் கண்ணதாசனின் எழுத்தோவியத்தில் அடிப்பட்டவர்களும், அழகாக்கப்பட்டவர்களும் எத்தனையோ பேர்? அவர், அரசியல் தலைவர்களை மட்டுமல்லாது பலருடைய ஆட்சியைப் பற்றியும்  விமர்சனம் செய்தார். 

''ஆடும் மாடும் அமைச்சர்களாயின!'' 

ஒருசமயம், மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது, தமிழக - கேரள எல்லையில் இருந்த தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகள் தமிழ்நாட்டோடு சேர்க்கப்படாமல் கேரளத்தில் சேர்ந்தன. இதை, தமிழக அமைச்சர்கள் பொருட்படுத்தாமல் விட்டதைக் கண்ட கண்ணதாசன், 

''மேடும் குளமும் கேரளாக்காயின
ஆடும் மாடும் அமைச்சர்களாயின''
- என்று எழுதினார்.

அதுமட்டுமல்லாது, அடிப்படைத் தத்துவமான மக்கள் நலன் என்பதே நிலையானது என்பதைக் கண்ட கவிஞர், அதை அடையும் வழியில் மாற்றங்களை மேற்கொள்ளும்போது, தலைவரும் தர்பாரும் மாறும் என்பதை,

''தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;
தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்’'
- என்று சுட்டிக்காட்டினார். 

இப்படி எழுத்துலகில் கொடிகட்டிப் பறந்த கண்ணதாசன், அரசியல் என்ற பயணத்தில் தொடர்ந்து பயணிக்கவில்லை என்றபோதும், அதில்பட்ட கசப்பான உணர்வுகள் அவரது மனதை ஒருவகையில் காயப்படுத்தின என்பதும் நிஜம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்