வெளியிடப்பட்ட நேரம்: 15:06 (25/06/2017)

கடைசி தொடர்பு:15:06 (25/06/2017)

வாடகைக்கு எடுக்கலாம்... வாடகைக்கு விடலாம்... கார்களும் அதற்கான ஆப்களும்! #CarApps

4G தலைமுறையில் பயணங்களுக்கான போக்குவரத்து அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்து விட்டது. பேருந்து, ரயில்  என்பதை எல்லாம் தாண்டி சாதாரண மனிதனின் போக்குவரத்து இன்று சொகுசு கார் வரை வந்துவிட்டது. எதற்கும் எங்கேயும் காத்திருக்க வேண்டியதில்லை. எல்லா வகையான போக்குவரத்திற்கும் வீடு வரை வந்து சர்விஸ் அளிக்கிறார்கள். லோக்கல் பயணத்தில் இருந்து ஊருக்கு போகிற பயணம் வரை அனைத்து பயணங்களும் இலகுவாகிவிட்டன. பயணச் சேவை அளித்து வரும் ஆப்கள் மற்றும்  நிறுவனங்கள் பற்றிய ஒரு அலசல் இது.

ப்ளா ப்ளா கார்ஸ்

கார் வைத்திருக்கிறீர்கள். ஊருக்கு தனியாக போகிறீர்கள் என்றால் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான் ப்ளா ப்ளா கார் ஆப்பில் ஊருக்கு போகிற நாள் நேரம் குறித்து அப்டேட் செய்வது. அதே தேதியில் உங்களது ஊருக்கு பயணம் செய்ய இருக்கிற மற்ற பயணிகளும் உங்களோடு இணைந்து கொள்வார்கள். பயண செலவையும் பகிர்ந்து கொள்கிறார்கள். மூன்று பேர் வரை பயணத்தில் உங்களோடு இணையும் போது   டீசல், சுங்கச் சாவடி கட்டணம், என எல்லாம் மீதமாகிறது. ”ஊருக்கு போகணும் என்னிடம் கார் இல்லையே”  என்பவரா நீங்கள்? உங்களுக்கும் அதே நடைமுறை தான். ஆப்பில் உங்கள் விவரங்களை அப்டேட் செய்துவிட்டு போகிற நாள் நேரம் குறித்து தேடுங்கள். மாருதி பிரீஸா முதல் ஆடி கார் வரை உங்களுக்காக காத்திருக்கின்றன. இவ்வகை பயணத்தில் பாதுகாப்பு பற்றிய எல்லா விஷயங்களுக்கும் நீங்கள் மட்டுமே பொறுப்பு என்பதால் கவனமாக இருப்பது அவசியம்.

ஆப் கார்

ரெவ்வ் கார்ஸ் 

குடும்பத்தோடு சுற்றுலா செல்கிறீர்கள் என்றால் ட்ராவல்  ஏஜென்சிகளிடம் கார் புக் செய்து காத்திருக்க வேண்டியதில்லை, வருகிற ஓட்டுநர் எப்படிபட்டவர், நன்றாக கார் ஓட்டுவாரா? என்கிற கவலைகள் எல்லாம் இல்லை, உங்களுக்கு கார் ஓட்ட தெரிந்திருந்தால் மட்டும் போதும். நீங்கள்தான் ஓட்டுநர். ஆன்லைனில் காரை புக் செய்து விட்டால் உங்கள் வீட்டிற்கே காரைக் கொண்டு வந்து தந்து விடுகிறார்கள், முன்பணமாக ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும். மீண்டும் காரை ஒப்படைக்கும் போது பணத்தைத் திருப்பி கொடுத்து விடுகிறார்கள். எல்லா வகையான கார்களும் நாள் வாடகைக்கும் மாத வாடகைக்கும் கிடைக்கின்றன. இவ்வகை போக்குவரத்தில்  கார் பாதுகாப்பு, பயணிகளின் பாதுகாப்பு எல்லாமே உங்களின் கைகளில்தான். 

ஆப்


ஸூம்  கார்ஸ்

மேற்கூறிய ரெவ் கார் வகையை ஒட்டியதுதான் சூம் கார்களும். சுற்றுலாத் தொடங்கி தொழில் முறை போக்குவரத்து என எல்லா வித போக்குவரத்திற்கும் வீட்டிற்கே காரைக் கொண்டுவந்து தந்து விடுகிறார்கள். கட்டணமெல்லாம் காரையும், வாடகைக்கு எடுக்கிற நாள்களையும் பொறுத்து மாறுபடும். இன்னொரு சலுகையையும் சூம் கார்ஸ் வழங்குகிறது. 2015 வருடத்திற்கு மேலான மாடல் கார்களை உங்கள் தேவையை தவிர்த்து மற்ற நாட்களில் அவர்களிடம் ஒப்படைத்து விட்டால், உங்கள் காரை அவர்கள் மற்றவர்களுக்கு வாடகைக்கு விட்டு அதில் வருகிற தொகையில் 75 சதவீத தொகையை உங்களுக்கு கொடுத்து விடுகிறார்கள். காருக்கான மாத தவணையை அதிலிருந்தே செலுத்தி விடலாம்.

ஆப்


கிரீன்பூல் கார்கள்.

கார் வைத்திருக்கிறீர்கள். தினமும் தனியாக கோயம்பேட்டில் இருந்து அண்ணாசாலையில் இருக்கிற அலுவலகத்திற்கு வருகிறீர்கள் எனறு வைத்துக் கொள்வோம். மாத டீசல் கட்டணமாக 2 ஆயிரம் வரை வருகிறது. அதுவே உங்கள் பயண வழியில் தினமும் பயணிக்கிற மற்ற பயணிகளையும் இந்த ஆப் மூலம் இணைத்துக் கொண்டால் மாதச் செலவு ஒருவருக்கு வெறும் 500 தான். தகவல் தொழில் நுட்ப துறையில் பணி புரியும் பலர்  இவ்வகை கார்களை பயன்படுத்துகிறார்கள்.

இதனை தவிர்த்து சென்னையில் மைல்ஸ் கார்ஸ், க்ரீன் கார்ஸ் என அனேக நிறுவனங்கள் இச்சலுகையை வழங்குகின்றன. வார இறுதி நாட்களில் ஒரு கட்டணமாகவும், வார நாட்களில் தனிக் கட்டணமாகவும் வசூலிக்கிறார்கள். அனைத்து வகையான கார்களும் பயன்பாட்டிற்கு கிடைக்கிறது. வணிக ரீதியாக பயன்பாட்டுக்கு இருக்கிற கார்களில் மாநிலம் விட்டு மாநிலம் செல்லும்போது  அதற்கான உரிமம் எடுத்தாக வேண்டும். அதற்குத் தனியாக கட்டணமும் செலுத்த வேண்டும். ஆனால்  மேற்கூறிய கார்களோடு ஒப்பிடும்போது தனியாக பர்மிட் எடுக்க வேண்டியதில்லை. டீசல் மட்டும் நிரப்பிக் கொண்டு போய் கொண்டே இருக்கலாம். சாலையில் கவனமும் பொறுமையும் இருந்தால் எந்த காரையும் எடுத்துக் கொண்டு எங்கே வேண்டுமானாலும் போய்  வரலாம்.


டிரெண்டிங் @ விகடன்