Published:Updated:

“மது அருந்தினால்தான் அப்பா பாட்டெழுதுவாரா?” - நிஜம் சொல்லும் கண்ணதாசன் மகள் ரேவதி சண்முகம் #KannadasanMemoirs

“மது அருந்தினால்தான் அப்பா பாட்டெழுதுவாரா?” - நிஜம் சொல்லும்  கண்ணதாசன் மகள் ரேவதி சண்முகம் #KannadasanMemoirs
“மது அருந்தினால்தான் அப்பா பாட்டெழுதுவாரா?” - நிஜம் சொல்லும் கண்ணதாசன் மகள் ரேவதி சண்முகம் #KannadasanMemoirs

“மது அருந்தினால்தான் அப்பா பாட்டெழுதுவாரா?” - நிஜம் சொல்லும் கண்ணதாசன் மகள் ரேவதி சண்முகம் #KannadasanMemoirs

ன்னோட 24 வயசுலேயே அப்பா இறந்துட்டதால, அப்போ அவரோட புகழும் அருமையும் முழுசா தெரியலை. இப்போ அதெல்லாம் தெரிஞ்சு தினமும் பெருமைப்பட்டாலும் அப்பா உடன் இல்லை"...  நெகிழ்ச்சியாகப் பேசுகிறார், பிரபல சமையல் கலைஞர் ரேவதி சண்முகம். இவர், கவிஞர் கண்ணதாசனின் மகள். 

"நாளைக்கு அப்பாவோட 91-ம் ஆண்டு பிறந்த நாளை பலரும் கொண்டாடுவாங்க. எனக்கோ அவர் தினசரி துதி'' என்பவர் தன் அப்பாவைப் பற்றிய நினைவுகளைப் பகிர்கிறார்.

"எல்லோரையும்போல எங்களுக்கும் பெற்றோர்தான் ரோல் மாடல். அப்பா எந்த அளவுக்கு பாசமானவரோ அதே அளவுக்குக் கோபக்காரரும்கூட. அவர் சினிமா துறையில இருந்தாலும், அவரோட பிள்ளைகளான நாங்க சினிமா துறையைப் பத்தி தெரிஞ்சுக்கவும், அவரின் சினிமா பணியை பார்க்கவும் விரும்பமாட்டார். எங்களை சினிமா படம் பார்க்கக்கூட அனுமதிக்காதவர். அவர் வெளியூர் போகும் சமயத்துலதான் அம்மா அனுமதியோடு படம் பார்ப்போம். 

இரவு 11 மணிக்குத் தொடங்கும் அப்பாவோட அந்த உலகம் பற்றி, பலருக்கும் தெரியாது. அது முழுக்கவே எங்களுக்கானது. இன்னைக்கு ஒரு குழந்தை வளர்க்கவே பெருசா சிரமப்படுற காலம். ஆனா முதல் மனைவியோட ஏழு பிள்ளைகள், என்னோட அம்மாவுக்கு ஏழு பிள்ளைகள்னு வீடு முழுக்கக் குழந்தைச் செல்வங்களா இருப்போம். எல்லோரும் ஒரே குடும்பமா ஒரு வீட்டில்தான் வாழ்ந்தோம். வேலைகள் முடிஞ்சு அப்பா வீட்டுக்கு வந்து சாப்பிட்ட பிறகு, அந்நேரம் தூங்கிட்டு இருக்கும் எங்களைச் சரியா 11 மணிக்கு எழுப்பிவிட்டு பேசத் தொடங்குவார். அப்போ படிப்பு, பிடிச்ச விஷயங்கள், ஆசைகள்னு எங்க ஒவ்வொருத்தரோட தேவைகளையும் விசாரிப்பார். அந்த நேரங்களை இப்போ நினைச்சுப் பார்த்தா, அதைவிடப் பொக்கிஷம் இந்த வாழ்க்கையில எதுவும் இல்லைன்னு தோணுது.

வாரத்துல தவறாம மூணு நாளாவது எங்களோடு இரவு நேரத்துல உரையாடுவார். அந்தத் தருணங்கள்ல அன்றைய நாளில் தன்னோட வேலைகள்ல முக்கியமானவை, எழுதின பாடல், பிரபலங்கள் பத்தியெல்லாம் சொல்லுவார். அப்படி ஒரு நிகழ்வுல, 'யார் யாருக்கோ பாட்டு எழுதுறீங்க. எங்களுக்கு பாட்டு எழுதமாட்டீங்களா?'னு எல்லோருடைய சார்பா தம்பி கேட்டான். 'என்னடா இப்படிக் கேட்டுட்டீங்க'னு சொன்னவர், ' 'ஏன் பிறந்தாய் மகனே' பாட்டு உனக்காகத்தான் எழுதினேன். 'ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா.. ஒரே ஒரு ராஜாவுக்கு ஒரே ஒரு ராணி...'  பாட்டை உங்களை மையமா வெச்சுதான் எழுதினேன். இப்படி உங்களுக்காக நிறைய பாட்டு எழுதியிருக்கேன் செல்லங்களா'னு சொன்னார். அப்போ அது எங்களுக்குப் புரியல. ஆனா இப்போ நினைச்சா முகமும் மனசும் புன்னகை பூக்குது. 

அப்பா தனக்குத் தெரிஞ்ச பலருக்கும் உதவி செய்தும், சாட்சி கையெழுத்துப் போட்டும் நிறைய சொத்துகளை இழந்திருக்கார். அதையெல்லாம் ஒவ்வொரு முறையும் எங்ககிட்டச் சொல்லி, 'அப்பா செஞ்ச

தவறை நீங்க செய்திடக்கூடாது. அதைச் சொல்லுற தகுதி எனக்குதான் இருக்கு'னு சொல்லுவார். 'நல்லா படிக்கணும். ஆசைப்பட்ட படிப்புகளைப் படிச்சு நல்ல வேலைக்குப் போகணும்'னு சொல்லுவார். ஆனா, சரியா படிக்காட்டின்னா திட்டவோ அடிக்கவோ மாட்டார்.

'பெண் குழந்தைகள் அழவே கூடாது. கல்யாணம் ஆன பிறகு புகுந்த வீட்டுல என்ன பிரச்னைனாலும் முடிஞ்சவரைக்கும் அனுசரிச்சுப் போகணும். எக்காரணம் கொண்டும் கோவிச்சுக்கிட்டு பெத்தவங்க வீட்டுக்கு வரக்கூடாது'ன்னு எல்லா சகோதரிகளுக்கும் அறிவுரை சொல்லுவார். எனக்கு 15 வயசுல கல்யாணம் செய்துவெச்சார். அந்தச் சமயத்துல, 'பெண் பார்த்துட்டுப் போனவங்க, என் பிள்ளையைப் பிடிச்சிருக்குன்னு சொல்லணுமே'னு தவிச்ச அவரோட தகப்பன் மனசை, இப்பவும் அப்பப்போ நினைச்சு உருகுவேன். நான் கல்யாணமாகி என் கணவர் வீட்டுக்குப் போனப்போ, அம்மா என் பின்னாடி அழுதுகிட்டே வந்தாங்க. அம்மாவை அழக்கூடாதுன்னு சொன்னவர், அம்மாவுக்குப் பின்னாடி அழுதுட்டே வந்ததைப் பார்த்து நானும் கதறி அழுதுட்டேன். எனக்குக் குழந்தைப் பிறந்தப்போ, 'என் குழந்தைக்கு ஒரு குழந்தை'னு கண்கலங்கினார். சொல்லப்போனா, அவரும் ஒரு குழந்தைதான். 

அப்பா ஒருமுறை சிங்கப்பூர் போனப்போ, எல்லாக் குழந்தைகளுக்கும் என்ன வேணும்னு கேட்டுட்டுப்போனார். திரும்பி வந்ததும் வாங்கிவந்த பரிசுகளைக் கொடுத்தார். அப்போ எனக்குக் கொடுத்த புடவையும், என் குழந்தைக்கு வாங்கிட்டு வந்த துணிகளும் என் வாழ்நாளில் எப்பவும் மறக்க முடியாத பரிசு. 

மது அருந்திய நேரத்தில்தான் அப்பாவால் நல்ல பாடல்களை எழுத முடியும்னு பலரும் சொல்லுவாங்க. அது ரொம்பவே தவறு. அப்பா மது  அருந்தினாலும், அதை, வேலை நேரத்துல பெரும்பாலும் செய்யமாட்டார். எல்லா வேலைகளையும் முடிச்சுட்டு, மதியம் மற்றும் இரவு நேரத்துல சாப்பிட்ட பிறகுதான் மது அருந்துவார். அடுத்து உடனே தூங்கிடுவார். மது அருந்தாத நேரத்தில்தான் பெரும்பாலான நல்ல பாடல்களை எழுதியிருக்கார். இது நான் கண்கூடாப் பார்த்த விஷயம். அவர் தன்னோட உடல்நலத்துக்கு பெருசா முக்கியத்துவம் கொடுக்கமாட்டார். அதை நினைச்சுதான் நாங்க ரொம்பக் கலங்குவோம். 

அப்பாவைச் சந்திக்க பல தலைவர்களும், சினிமா பிரபலங்களும் அடிக்கடி வீட்டுக்கு வருவாங்க. அப்படி ஒருமுறை காமராஜர் எங்க வீட்டுக்கு வந்த சமயத்துல, 'அப்பா, உடல்நலத்தைப் பத்தி கவலைப்படாம  இருக்கிறார் அய்யா. நீங்கதான் எடுத்துச் சொல்லணும்'னு நானும், சக உடன் பிறப்புகளும் சொல்லி அழுதோம். யார் சொல்லியும் பெருசா கண்டுக்காம இருந்தவர், ஒரு கட்டத்துக்கு பிறகு பாடல்கள் எழுதுவதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கிட்டு ஆன்மிகத்தில் அதிக நாட்டம் செலுத்த ஆரம்பித்தார்.  எதிர்பாராதவிதமா தன்னோட 54 வயசுல எங்களையும், ரசிகர்களையும் தவிக்கவிட்டுட்டு இறந்துட்டார். 

இப்போ சமையல் கலையில நான் புகழ்பெற்று இருந்தாலும், அப்பா இருக்கும்வரை சமையலுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்ததில்லை. அதனால அப்பாவுக்கு பிடிச்ச உணவுகளை நான் அவருக்கு சமைச்சுக் கொடுக்கவே இல்லை. மேலும், அப்பா சினிமாவுல வேலை செய்த தருணங்களை நேர்ல பார்க்காதது, அவர்கூட நான் மட்டும் நின்று ஒரு பிரத்யேக போட்டோ எடுத்துக்காததுனு இந்த மூணு விஷயங்களும் இப்போ வரைக்கும் எனக்கு மனசு ஆறாத ஆதங்கமா இருக்கும். 'இந்த ஆளுமையோட புள்ள இவங்க'னு எனக்கு அங்கீகாரமான ஒரு அடையாளத்தைக் கொடுத்த அப்பாவுக்கு, அவர் பூரிச்சுப்போற அளவுக்கு ஒரு மகளா அப்போ நான் எதுவும் செய்யலையே என்ற ஆற்றாமை நான் இருக்கும்வரை என்கூட இருக்கும்!" 

கண்கள் நீர்த்திரையால் ஒளிர்கின்றன கவிஞரின் மகளுக்கு! 

அடுத்த கட்டுரைக்கு