வெளியிடப்பட்ட நேரம்: 20:52 (25/06/2017)

கடைசி தொடர்பு:20:52 (25/06/2017)

1.6 கோடி பார்வையாளர்கள்... 473 ஸ்டேஷன்கள்... லிம்கா சாதனை புரிந்த சயின்ஸ் எக்ஸ்பிரஸ்..!

ரயில்

தற்போது, பருவநிலையே தடாலடியாக மாறி கிடக்கிறது. வெயில் காலத்தில் மழையும், மழை பெய்ய வேண்டிய நேரத்தில் காற்றும் அடித்து பருவ சுழற்சி மாறி, பூமி பாடாதியாகி கொண்டிருக்கிறது. இதனால், பூமி நாளுக்கு நாள் வெப்பமாகி கொண்டே போகிறது. உலகமே விழித்துக் கொண்டு இயற்கையை காக்க, இயற்கைக்கு திரும்ப நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டிய நாளும் நெருங்கிவிட்டது. இல்லை என்றால், 'இங்கு மனிதர்கள் வாழ ஏற்ற சூழல் இல்லை' என்று பூமியில் ஆங்காங்கே அபாய எச்சரிக்கை போர்டுகள் வைக்க வேண்டிய சூழல் ஏற்படும். இந்த விசயங்களை எல்லாம் நாடு முழுக்க உள்ள மக்கள் மற்றும் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் விழிப்புஉணர்வு செய்ய நடமாடும் விழிப்புஉணர்வு கண்காட்சியை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பதுறை செயல்படுத்தி வருகிறது. அதுவும் எதில் தெரியுமா...?. நம் எல்லோருக்கும் பிடித்த ரயிலில்தான். 'சயின்ஸ் எக்ஸ்பிரஸ்' என்று பெயர் கொண்ட அந்த ரயில் பதினாறு பெட்டிகளை கொண்டது. நவீன கண்காட்சியுடன் கூடி சயின்ஸ் எக்ஸ்பிரஸ் அது.

 2007 ம் ஆண்டு அக்டோபரில் துவக்கப்பட்ட இந்த ரயில்,சுமார் 1,46000 கிலோ மீட்டர்கள் பயணம் செய்திருக்கிறது. 473 ஸ்டேஷன்களில்,1650 நாள்கள் நிறுத்தப்பட்டு, இந்த கண்காட்சி நடத்தப்பட்டிருக்கிறது. இதுவரை இந்த நடமாடும் ரயில் கண்காட்சியை 1.6 கோடி பேர் பார்த்து ரசித்திருக்கிறார்கள்.

ரயில்  ரயில்

ரயில்  ரயில்

 இந்த நடமாடும் அறிவியல் கண்காட்சி ரயிலால், மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும், மக்களுக்கும் அறிவியல் சார்ந்த அறிவும், இயற்கை தொடர்பான விழிப்புஉணர்வும் ஏற்பட்டிருக்கிறது. அதோடு உலகிலேயே மிகப்பெரிய, நீண்டகால மற்றும் அதிகமானோர் பார்வையிட்ட நடமாடும் அறிவியல் கண்காட்சி ரயில் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது இந்த 'சயின்ஸ் எக்ஸ்பிரஸ்'. லிம்கா புத்தகத்தில் பன்னிரெண்டு பிரிவுகளில் சாதனைகளாக பதியப்பட்டுள்ளது. 

கரூர் ஸ்டேஷனுக்கு இந்த சயின்ஸ் எக்ஸ்பிரஸ் சில நாள்களுக்கு முன்பு வந்தது. இந்த ரயிலை வரவேற்று, கண்காட்சியை மாவட்ட வருவாய் அலுவலர் சூரியபிரகாஷ் திறந்து வைத்தார். நான்கு நாள்களிலும் ஆயிரத்திற்கு மேற்பட்ட பள்ளி,கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் பார்வையிட்டனர்.

சுருதி

இந்த ரயிலை பார்வையிட்ட ஸ்டார் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவியான சுருதி (நடுவில் இருப்பவர்) நம்மிடம்,

“உண்மையில் இந்த கண்காட்சி ரயிலைப் பார்த்து அதிசயித்து போனோம். நமக்காக எல்லாம் செய்யும் இயற்கையின் நலன் பற்றி ஒரு நொடிகூட நாம் சிந்திப்பதில்லைங்கிற உண்மை தோணுச்சு. அதோடு, அறிவியலாகவும் நிறைய விசயங்கள் தெரிஞ்சுக்க முடிஞ்சுச்சு. 'இனி இயற்கையை மனிதர்களாக பாவித்து காப்பேன்'ன்னு மனசுக்குள்ள உறுதி எடுத்துகிட்டேன். பதினாறு பெட்டிகளையும் சுத்தி பார்த்து முடிச்சதும், ரயிலை விட்டு இறங்கவே மனசு வரலை" என்றார் துள்ளலாக!.

 மாணவர்களை ஒருங்கிணைத்து அழைத்து வந்த ஆசிரியர் குர்மீத்சிங்கிடம் பேசினோம்.

 "மாணவர்களுக்கு இந்த ரயில் கண்காட்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது. இந்த ரயிலில் பல்வேறு விதமான கண்காட்சிகள் உள்ளன. அவற்றில் முக்கியமாக பருவமாற்றத்தால் மனிதனுக்கு ஏற்படும் விளைவுகள், வெப்பநிலை உயர காரணங்கள், பருவநிலை வேறுபாடுகள், குடிநீர் வளம், வனம், விவசாயம், சுகாதாரம்,சுற்றுச்சுழல் பிரச்னை, உணவு உற்பத்தி, பருவநிலை மாற்றம், பேரிடர், வெள்ளப்பெருக்கு, கடல்மட்டம் உயர்தல் ஆகிவைகளால் பருவநிலை மாற்றம் உலகளாவிய அளலில் எப்படி கெட்டிருக்கிறது, அதனால் என்னன்ன பாதிப்புகள், நாம் அதை சரி செய்ய உடனடியாக என்னன்ன செய்ய வேண்டும்ன்னு இந்த ‘சயின்ஸ் எக்ஸ்பிரஸ்’ கண்காட்சி அழகாக மாணவர்களுக்கு புரிய வச்சுருக்கு. இந்த நடமாடும் ரயில் கண்காட்சியால் நல்ல மாற்றம் கிடைக்கும். இதை சாதனைக்காக மட்டும் பண்ணாமல், விடாமல் எல்லா பகுதிகளிலும் இயக்கி, 'இயற்கை மீதான விழிப்புஉணர்வு அடைந்த நாடு இந்தியா'ங்கிற நிலையை ஏற்படுத்தனும் மத்திய அரசு" என்றார்.


டிரெண்டிங் @ விகடன்