Published:Updated:

“கதிராமங்கலத்தில் வேண்டாம்... கீழடியில் வேண்டும்!” - வலுக்கும் குரல்

“கதிராமங்கலத்தில் வேண்டாம்... கீழடியில் வேண்டும்!” - வலுக்கும் குரல்
“கதிராமங்கலத்தில் வேண்டாம்... கீழடியில் வேண்டும்!” - வலுக்கும் குரல்

சென்னை கவிக்கோ மன்றத்தில், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சார்பில் கீழடி ஆய்வுக் கருத்தரங்கம் 22-ம் தேதி நடைபெற்றது. இந்த அரங்கத்தில், திராவிட இயக்கத் தமிழர் பேரவையைச் சேர்ந்தவர்கள், தமிழ், வரலாற்று ஆர்வலர்கள் என அளவான கூட்டம் குழுமியிருந்தது. அப்போதுதான் தன் டிவிட்டர் பக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் `தோழர் சுப.வீரபாண்டியன் நடத்தும் இந்த மாலை நிகழ்ச்சி, வெற்றியின் முதல் படி. தமிழனின் பெருமை கீழடியில் கிடப்பதை  அனுமதியாத இந்த அறப்போர் தொடரும்' என்று அந்த நிகழ்ச்சிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தலைமை உரை ஆற்றிய சுப.வீ... “சிலப்பதிகாரத்தில் கோவலனும் கண்ணகியும் மதுரையை நோக்கிச் சென்ற பாதை முழுவதும் இளங்கோவடிகளால் குறிப்பிடப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தில் அவர்கள் எத்தனை நாள்கள் நடந்து வந்தார்கள் என்பதுவரை குறிப்பிட்டுள்ளார். அப்போது மதுரையின் அருகே வரும்போது ஆனைமலை அருகே இருந்து `அதோ மதுரை!' என்று அவர்கள் சுட்டிக்காட்டும் இடம்தான் தற்போதுள்ள கீழடி. இதை, சிலப்பதிகாரத்தைப் படித்ததன் மூலம் என் ஐயமாக இதைத் தெரிவிக்கிறேன். என் ஐயத்தின்படி இன்றைய கீழடிதான் அன்றைய மதுரையாக இருந்திருக்க வேண்டும். இந்தக் கூற்றையும் ஆய்வாளர்கள் எடுத்துக்கொண்டு ஆராய வேண்டும்" என்றும் “கதிராமங்கலத்தில் தோண்டாதே என்கிறோம் தோண்டுகிறார்கள். கீழடியில் தோண்டு என்கிறோம் `மாட்டேன்' என்கிறார்கள்” என்று ஆற்றிய உரையில் தமிழ் உணர்வை ஏற்றினார்.

பாண்டிய நாட்டுப் பேரவையின் செயலராக உள்ள முன்னாள் தமிழகத் தொல்லியல் துறை ஆய்வாளர் சொ.சாந்தலிங்கமும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் - கலைஞர்கள் சங்கத்தின் செயலாளரும் எழுத்தாளருமான சு.வெங்கடேசனும் தங்களின் கருத்துகளை எடுத்துவைத்தனர். ஆய்வரங்கம் என்பது, பல்வேறு சிந்தனைத் தொகுப்பை முன்வைக்கும் இடம் என்பதற்கு எடுத்துக்காட்டாக, பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அங்கு “இவர்கள் இருவரும் ஆற்றிய உரைகள், நூலாகக் கொண்டுவரப்படும்” என்று சுபவீ. அறிவித்தார். 

“நம் காலத்தில் இன்றைக்கு வெளிக்கொணரப்பட்டிருக்கும் கீழடி, அதிக கவனம் பெற்றுள்ளது. இதற்கு சமூக ஊடகத்தின் வளர்ச்சி மட்டுமே காரணம். ஆனால், கடந்த 50 ஆண்டுகளில் இதைவிட அல்லது இதே அளவு முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியல் கண்டுபிடிப்புகளின் ஆய்வு முடிவுகள் வெளியாகத்தான் செய்தன. ஆனாலும், அவை முக்கியத்துவம் பெறவில்லை. பாண்டிய நாட்டு முக்கிய துறைமுகமான அழகன்குளம் தொடங்கி மாங்குடி, மாங்குளம் எனப் பல்வேறு அகழாய்வுகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. கீழடியைவிட கவலைப்படவேண்டிய ஒன்று இருக்கிறது. அது ஆதிச்சநல்லூர் அகழாய்வு. அதில் 1904-ம் ஆண்டு செய்யப்பட்ட அகழாய்வுப் பணியில் கிடைத்த பொருள்கள் ஜெர்மனிக்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டன.

அதுகுறித்த அறிக்கையை மத்திய அரசு இன்று வரை   வெளியிடவில்லை. தமிழனின் உண்மையான வரலாறு அதில் உள்ளது. அங்கு கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் இருந்த மண்டை ஓட்டை ஆய்வுக்கு உட்படுத்தியபோது, அதன் வயது கி.மு.1750 ஆண்டுகள் எனச் சொல்லப்பட்டது. அதாவது சுமார் 3,750 ஆண்டுகளுக்கு முந்தைய நாகரிகம் ஆதிச்சநல்லூர் நாகரிகம். சிந்துசமவெளியின் நாகரிகம் முடியும் காலத்தில், ஆதிச்சநல்லூர் நாகரிகம் தொடங்குகிறது எனக் கொள்ளலாம். கீழடியும் முக்கியமான தொல்லியல் சுரங்கம்தான். அதே வேளையில் மற்ற தொல்லியல் ஆய்வு பகுதிகளையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இதற்குக் கொடுக்கப்படும் முன்னிலை அதற்கும் தரப்படவேண்டும். அதேபோல் தமிழ்-பிராமி கல்வெட்டு எழுத்துகளைப் படிக்கும் நபர்கள், என்னோடு சேர்த்து மொத்தம் 10 பேர்தான் தமிழ்நாட்டில் இருக்கிறோம். உடனடியாகச் செய்யவேண்டியது, இளைஞர்களை கல்வெட்டைப் படிப்பதற்கான பயிற்சி கொடுப்பதுதான். அப்போதுதான் தமிழர்களின் உண்மையான வரலாறு திரிக்கப்படாமல் கிடைக்கும்" என்றார் சொ.சாந்தலிங்கம்.

எழுத்தாளர் சு.வெங்கடேசன் பேசும்போது, `கீழடியே இதுவரையிலான தொல்லியல் கண்டுபிடிப்புகளில் முதன்மையானது' என்ற வாதத்தை முன்வைத்தார். “இதற்கு முன்பு பல்வேறு அகழாய்வுகள் செய்யப்பட்டிருந்தாலும் அவற்றிலெல்லாம் முதுமக்கள் தாழி போன்றவையும் இடுகாடுகளுமே கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், கீழடியில் முதன்முதலாக ஒரு முழு நகரமே கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக வடநாட்டு வரலாற்று ஆய்வாளர்களின் வாதமே  சங்க காலத்தில் நகர நாகரிகம் இல்லை என்பதுதானே. ரோமிலா தாப்பர் போன்றோர், `தமிழகத்தில் நிலவியது ஓர் அரைப்பழங்குடி நாகரிகம் என்றுதான் இதுவரை கண்டறிப்பட்ட அகழாய்வுகளின் மூலம் சொல்ல முடியும்' எனத் தெரிவித்து வந்தார்கள்.

தற்போது கீழடிக்குப் பிறகுதான் 3,750 ஆண்டுகளுக்கு அதாவது கி.மு.1700-களைச் சேர்ந்த இந்தக் கீழடியில் நகர நாகரிகம் இருந்ததாக ஒப்புக்கொள்கின்றனர். வைகை நதி ஓடும் மொத்த தூரமான 170 கிலோமீட்டர் முழுவதும் பல்வேறு அகழாய்வு இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 243 கிராமங்கள் தொல்லியல் அடையாளங்களுடன் உள்ளன. அதனால்  வைகை நதி நாகரிகம் என்றே இதைத் தற்போது குறிப்பிட தொடங்கியுள்ளார்கள். உலகம் முழுவதும் ஒரு லட்சம் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் 60 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ் கல்வெட்டுகள். உலகின் நதிக்கரை நாகரிகங்கள் எல்லாமே, ஜீவநதிகளின் கரையில்தான் அமைத்துள்ளனர். ஆனால், வருடத்துக்கு நான்கு மாதங்கள் நீர் ஓடாத வைகையில் கரையில் இப்படி ஒரு நாகரிகம் செழித்து வளர்ந்திருக்குமானால், நீர் மேலாண்மையில் எவ்வளவு ஆற்றல் இருந்திருக்க வேண்டும்? உண்மையில், கீழடி என்பது தமிழர்களுக்குக் கிடைத்துள்ள வரலாற்றுரீதியிலான மிகப்பெரிய பொக்கிஷம். ஆனால், ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனை மாற்றுவது, சோளப்பொறி அளவில் ஒதுக்கிய நிதியையும் நிறுத்துவது எனச் செயல்படுகிறது மத்திய அரசு. தற்போது அமர்நாத்தின் இடத்தில் வந்திருக்கும் தொல்லியல் அதிகாரி `யார் கண்டது, உள்ளிருந்து ஒரு கோயிலே வந்தாலும் வரும்' என்கிறாராம். இதுவரையிலான தமிழகத் தொல்லியல் ஆய்வுகளில் கடவுள் குறித்த எந்த அம்சமும் கண்டுபிடிக்கப்பட்டதில்லை. எனவே, இப்படி அவர் சொல்லியிருப்பது உள்நோக்கம்கொண்டதாகவே கருதலாம். இவர்கள் ராமர் கோயிலைக் கண்டுபிடிக்க என, 151 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார்கள். இல்லாத சரஸ்வதி நதியைக் கண்டுபிடிக்கிறேன் என, பல நூறு கோடி ரூபாயைக் கொட்டியுள்ளார்கள். ஆனால், கண்ணுக்கு முன் தெரியும் கீழடிக்கு ஒரு லட்சம் - இரண்டு லட்சம் ரூபாய் எனக் கொசுறுபோடுகிறார்கள்" என்றார்.