Published:Updated:

ஏர் இந்தியாவை வாங்க டாடா நிறுவனத்தைத் தூண்டும் அந்த சென்டிமென்ட்!

ஏர் இந்தியாவை வாங்க டாடா நிறுவனத்தைத் தூண்டும் அந்த சென்டிமென்ட்!
ஏர் இந்தியாவை வாங்க டாடா நிறுவனத்தைத் தூண்டும் அந்த சென்டிமென்ட்!

ஏர் இந்தியாவை வாங்க டாடா நிறுவனத்தைத் தூண்டும் அந்த சென்டிமென்ட்!

ர் இந்தியா நிறுவனம், இதுவரை 52 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்திருக்கிறது. இந்த நிறுவனத்தை லாபத்தை நோக்கித் திருப்ப, மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள்  தோல்வியில்தான் முடிந்துள்ளன. தற்போது, ஏர் இந்தியாவின் பங்குகளில் பாதியையோ அல்லது முழுவதையுமோ தனியாருக்குக் கொடுத்துவிட மத்திய அரசு முடிவுசெய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இன்னும் 12 மாதங்களில் ஏர் இந்தியா தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டுவிடலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. நஷ்டத்தில் இயங்கும் ஒரு நிறுவனத்தை வாங்க, எந்த நிறுவனம் முன்வரும்?

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனமான டாடாவைத் தோற்றுவித்தவர் ஜாம்ஷெட்ஜி டாடா. விமானத்தில் பறப்பதுதான் சிறுவயதிலிருந்தே ஜே.ஆர்.டி-யின் முக்கியப் பொழுதுப்போக்கு. கடந்த 1919-ம் ஆண்டு முதன்முதலாக விமானத்தில் பறந்தபோது, அவருக்கு 15 வயது. அப்போதே, ஜே.ஆர்.டி-க்கு விமான நிறுவனம் ஒன்றைத் தொடங்க வேண்டும் என்பது லட்சியம். விமான பைலட்டான முதல் இந்தியர் இவர்தான். 1929-ம் ஆண்டு விமான பைலட்டுக்கான லைசென்ஸ் பெற்ற இவர், டாடா ஏவியேஷன் நிறுவனத்தை 1932-ம் ஆண்டு தொடங்கினார். முதலீடு வெறும் இரண்டு லட்சம்தான். ஒற்றை இன்ஜின்கொண்ட இரண்டு பழைய de Havilland Puss Moths  விமானங்கள் வாங்கப்பட்டன. 

1932-ம் ஆண்டு இந்தியாவின் முதல் விமானம் பறந்தது.  கடிதங்களை எடுத்து வர மும்பையிலிருந்து கராச்சிக்கு ஜே.ஆர்.டி விமானத்தை ஓட்டிச் சென்றார்.  குவாலியர், திருவனந்தபுரம், டெல்லி போன்ற நகரங்களுக்கு இடையே விமானங்களை ஓட்டினார் டாடா. நாளடைவில் கொழும்பு நகருக்கும் சேவை விரிவுபடுத்தப்பட்டது. பிறகு 1946-ம் ஆண்டு டாடா ஏர்லைன்ஸ்  `ஏர் இந்தியா லிமிடெட்' எனப் பெயர் மாற்றப்பட்டது. இதை, மத்திய அரசுடன் இணைந்து தொடங்கினார் டாடா. மும்பையில் டாடா நிறுவன  தலைமை அலுவலகத்தில்தான் ஏர் இந்தியாவின் அலுவலகம் இயங்கியது. வெகு விரைவிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சுதந்திரத்துக்குப் பிறகு ஏர் இந்தியாவை முழுமையான அரசு நிறுவனமாக மாற்ற ஜே.ஆர்.டி எதிர்ப்பு தெரிவித்தார். 

இந்தியாவுக்கு முதன்முதலாக விமானத்தை அறிமுகப்படுத்திய இவர்தான், இந்திய வானில் முதன்முறையாக விமானத்தை ஓட்டியவர். ``ஆங்கிலேயர்கள் நம் நாட்டைவிட்டு இப்போதுதான் வெளியேறினர். புதிய அரசுக்கு, விமான நிறுவனத்தை நடத்திய அனுபவம் இல்லை. பயணிகளின் பாதுகாப்பு மிக முக்கியமானது. அனுபவமிக்கவர்களின் கரங்களில் ஏர் இந்தியா நிறுவனம் இருக்க வேண்டும்'' என அரசிடம் விவாதித்தார். எந்தப் பலனும் இல்லை. 1953-ம் ஆண்டு ஏர் இந்தியா தேசியமயமாக்கப்பட்டது. எனினும் அப்போதையை பிரதமர் ஜவஹர்லால் நேரு, ஜே.ஆர்.டி-யை ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவராக நியமித்தார். சுமார் 25 வருடங்கள், அதாவது 1977-ம் ஆண்டு மொரார்ஜி தேசாய், ஜே.ஆர்.டி-யைப் பதவியிலிருந்து நீக்கும் வரை மிகச் சிறப்பாகவே செயல்பட்டார் ஜே.ஆர்.டி. இந்தக் காலகட்டத்தில்தான்  ஏர்இந்தியா பல ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளுக்கான சேவையைத் தொடங்கியது. நிறுவனத்தில் நஷ்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை. `இந்திய விமானத்தில் பயணிப்பது பாதுகாப்பானது' என்கிற எண்ணம் வெளிநாட்டுப் பயணிகளுக்கும் ஏற்பட்டிருந்தது. இதனால், வெளிநாட்டுப் பயணிகளும் ஏர்இந்தியாவில் பயணிக்க விரும்பினர்.  தரத்திலும் சரி... பாதுகாப்பிலும்  சரி, எந்தவிதமான சமரசத்தையும் ஜே.ஆர்.டி செய்துகொள்ள மாட்டார். 

1953-ம் ஆண்டு விமான துறைக்கு என வகுத்த விதிகளின்படி, ஏர்இந்தியா மட்டுமே இந்திய வானில் கோலோச்சிக்கொண்டிருந்தது. 1994-ம் ஆண்டு நரசிம்மராவ் காலத்தில் தனியார் விமான நிறுவனங்களுக்கு இந்திய சந்தையில் அனுமதி வழங்கப்பட்டது. நிர்வாக வசதிக்காக செலவுகளைக் குறைக்கும் வகையில், இந்தியன் ஏர்லைன்ஸ் ஏர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. எனினும், ஏர் இந்தியா லாபத்தை நோக்கித் திரும்பவே இல்லை. இப்போதுகூட உள்நாட்டுச் சந்தையில் ஏர்இந்தியாவுக்கு மூன்றாவது இடம்தான். முதல் இரு இடங்களில் இண்டிகோ, ஜெட் ஏர்வேஸ் உள்ளன.  

டாடாவின் மறைவுக்குப் பிறகு, ஊசி முதல் இரும்பு வரை தயாரித்துவரும் டாடா நிறுவனம், விமான நிறுவனத்தை தொடங்குவதில் மட்டும் ஆர்வம்காட்டவே இல்லை. 2015-ம் ஆண்டு சிங்கப்பூர் ஏர்லைன்ஸுடன் இணைந்து `விஸ்தாரா ஏர்லைன்ஸ்' நிறுவனத்தைத் தொடங்கியது. டாடாவைப் பொறுத்தவரை, தங்கள் நிறுவினர் தொடங்கிய நிறுவனமாகவே  ஏர் இந்தியாவைப் பார்க்கிறது. அந்த சென்டிமென்ட்டுக்குத்தான் ஏர் இந்தியா விற்பனைக்கு வந்தால் வாங்கவும் தயாராக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 

அடுத்த கட்டுரைக்கு