வ்வ்ரூம்... வ்வ்ரூம்... இந்தியாவின் டாப்-10 மைலேஜ் பைக்குகள் இவைதான்! | Top 10 Mileage bikes in india

வெளியிடப்பட்ட நேரம்: 08:02 (28/06/2017)

கடைசி தொடர்பு:08:02 (28/06/2017)

வ்வ்ரூம்... வ்வ்ரூம்... இந்தியாவின் டாப்-10 மைலேஜ் பைக்குகள் இவைதான்!

‘வீடு கட்டிப் பார்; கல்யாணம் கட்டிப் பார்’ என்பது மிடில் கிளாஸ் மக்களின் சவால் என்றால், ‘பைக் வாங்கிப் பார்; அதில் மைலேஜ் என்னனு பார்’ என்பதுதான் என்ட்ரி லெவல் மிடில் க்ளாஸ் மக்களுக்கான ஸ்லோகன். ‘‘என்னது... உங்க பைக் 55 தானா? என்னுது 59...!’’ என்று சொல்லும்போது, ஒலிம்பிக்கில் தங்கம் வாங்கியதுபோல முகத்தில் குதூகலம் வந்துவிடும் நம்மவர்களுக்கு. அப்படிப்பட்டவர்களுக்காகவே மார்க்கெட்டில் இருப்பவைதான் 100 - 125 சிசி பைக்குகள். பெரிய மைலேஜ் பைக்குகள் பற்றிய குட்டி ட்ரெய்லர் இது. அராய் மைலேஜ்படி இங்கு பைக்குகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

 

மைலேஜ்

 

அராய் என்றால் என்ன?
Automotive Research Association of India, (ARAI) - இதுதான் அராயின் முழு விளக்கம். மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில், 260 ஏக்கரில் ஏகப்பட்ட டெஸ்ட்டிங் கருவிகளுடன் மத்திய அரசால் 1996-ல் உருவாக்கப்பட்ட அரசு சார் நிறுவனம். இந்தியாவில் தயாராகும் கார்/பைக் எதுவாக இருந்தாலும், இங்குதான் முதன் முதலில் மைலேஜ் டெஸ்ட்  நடக்கும். அராய் சான்றிதழ்படி வாகனத்துக்கு நல்ல மைலேஜ் பதிவாகிவிட்டால், கார்/பைக் நிறுவனங்கள் காலரைத் தூக்கி விட்டுக்கொள்ளும். அப்படி மார்க்கெட்டில் மைலேஜில் கெத்துக் காட்டும் பைக்குகள் இவை.

 

 

மைலேஜ்

 


பஜாஜ் பிளாட்டினா 100
விலை: ரூ. 55,214 (ES Alloy)
இன்ஜின்: 102 சிசி
பவர்: 8.2bhp
எடை: 108 கிலோ
டேங்க்: 11 லிட்டர்
மைலேஜ்: 104 கி.மீ

பிளாட்டினாவைப் பார்த்து மட்டும் ‘இது உண்மையிலேயே நல்ல மைலேஜ் கிடைக்குமா?’ என்று சந்தேகப்பட்டால், அவர்கள் பஜாஜுக்குப் புதுசு என்று அர்த்தம். மைலேஜில் எப்போதுமே ஹீரோவைப் பின்னுக்குத் தள்ளும் ஹீரோ, பஜாஜ்தான். பழைய பிளாட்டினாவைவிட இன்ஜின் ரிஃபைன்மென்ட், பிக்-அப், பெர்ஃபாமென்ஸில் சிறிது முன்னேற்றம் இருக்கிறது. இதன் SNS (Spring n Spring) சஸ்பென்ஷன், முதுகுவலி ஏற்படாத வண்ணம் இருக்கும் என்கிறது பஜாஜ். 100 சிசியில் அதிக மைலேஜ், பிளாட்டினாவைத் தாண்டி எதிலும் இல்லை. புதிய சேஸியும், ஸ்லீக்கான பாடியும் இதன் பெஸ்ட் மைலேஜுக்கு இன்னும் துணை புரிகிறது.

 

 

 

மைலேஜ்பஜாஜ் CT100B
விலை: ரூ.39,500
இன்ஜின்: 99.2 சிசி
பவர்: 8.2 bhp
எடை: 108 கிலோ
டேங்க்: 10.5 லிட்டர்
மைலேஜ்: 99.1 கி.மீ

நம்புங்கள் - இந்தியாவின் விலை குறைந்த பைக் பஜாஜின் CT100B பைக்தான். டிவிஎஸ் XL மொபெட்டைவிட சுமார் 1,000 ரூபாய் மட்டுமே விலை அதிகம். வழக்கமான CT100 பைக்கில் இருந்து டிஸைன், கம்ஃபர்ட் போன்றவற்றில் கொஞ்சம் மாறுதல்கள் செய்யப்பட்டதுதான் CT100B. பழைய பிளாட்டினாவின் அதே 8.2 bhp, 0.82 kgm டார்க் என்பதால், மைலேஜைப் பற்றியோ, பராமரிப்புச் செலவைப் பற்றியோ அவ்வளவாகச் சொல்ல வேண்டியதில்லை. மைலேஜ், பராமரிப்பு விஷயத்தில் ‘நம்பி வாங்குங்க; சந்தோஷமா போங்க’ என்று CT100B-க்கு விளம்பரமே கொடுக்கலாம்.

 

 

 

மைலேஜ்

டிவிஎஸ் ஸ்டார் ஸ்போர்ட்
விலை: ரூ.55,926 (ES Alloy)
இன்ஜின்: 99.7 சிசி
பவர்: 7.8 bhp
எடை: 108.5 கிலோ
டேங்க்: 12 லிட்டர்
மைலேஜ்: 95 கி.மீ

‘மைலேஜும் வேணும்; பைக்கும் கலர்ஃபுல்லா இருக்கணும்’ என்பவர்களின் சாய்ஸ் ஸ்டார் ஸ்போர்ட். எலெக்ட்ரிக் ஸ்டார்ட், ஸ்ட்ராங்கான அலுமினியம் கிராப் ரெயில், மஃப்ளருக்கு க்ரோம் கார்டு, ஸ்போர்ட்டியான இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஐந்து கலர்கள் என்று மிடில் க்ளாஸ் மக்களின் பல்ஸ் பிடிக்கிறது ஸ்டார் ஸ்போர்ட். மைலேஜ் விஷயத்தில் இதற்கு செம டஃப் கொடுப்பது பஜாஜ் CT100B. ஏற்கெனவே ஸ்டார் சீரிஸ், மைலேஜுக்குப் பெயர் பெற்றவை என்றாலும், ஸ்போர்ட் பைக்கின் இன்ஜினை மேலும் ட்யூன் செய்திருப்பதாகச் சொல்கிறது டிவிஎஸ்.

 

 

மைலேஜ்


ஹீரோ ஸ்ப்ளெண்டர் ப்ரோ
விலை: ரூ.61,926 (ES Alloy)
இன்ஜின்: 97.2 cc
பவர்: 8.3 bhp
எடை: 112 கிலோ
டேங்க்: 11 litre
மைலேஜ்: 93.2 kmpl

ஹோண்டாவில் இருந்து பிரிந்து வந்ததும் ‘இனி ஹீரோ அவ்ளோதான்’ என்ற கணிப்பை ‘பாகுபலி’போல் அடித்துத் தூள் கிளப்பியது ஹீரோவின் ஸ்ப்ளெண்டர் ப்ரோ. பழைய ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளெண்டரில் இல்லாத வசதிகளான பட்டன் ஸ்டார்ட், அலாய் வீல், அட்ஜஸ்டபிள் சஸ்பென்ஷன், சைடு ஸ்டாண்ட் இண்டிகேட்டர் என்று சில மாற்றங்களுடன் டாப்-10 பைக் சேல்ஸ் லிஸ்ட்டில் இப்போதும் அதே முதல் இடத்தைத் தக்க வைத்து வருகிறது ஸ்ப்ளெண்டர் ப்ரோ. சிங்கிள் சிலிண்டர் 97.2 சிசி இன்ஜின், 8.3 bhp பவர், கட்டுமானத் தரம் என்று ஸ்ப்ளெண்டர் இப்போதும் பலரது நம்பிக்கைக்குரிய பைக். கேடிஎம், யமஹா என்று பவர்ஃபுல் பைக்குகளுக்கு மத்தியில், தேவ்ஜீத் சாஹா என்னும் மும்பையைச் சேர்ந்த ஒருவர், 36 மணி நேரத்தில் 2,414 கி.மீ-யை ஸ்ப்ளெண்டர் ப்ரோ பைக்கில் கடந்து, அமெரிக்காவின் ‘பன் பர்னர்’ விருது வாங்கியிருக்கிறார். ‘பெட்ரோல் செலவு ரொம்பக் கம்மி’ என்று ஸ்டேட்மென்ட்டும் விட்டிருக்கிறார்.

 

 

 

மைலேஜ்

பஜாஜ் டிஸ்கவர் 125
விலை: ரூ.63,671 (Disc)
இன்ஜின்: 124.6 சிசி
பவர்: 11 bhp
எடை: 120.5 கிலோ
டேங்க்: 8 litre
மைலேஜ்: 82.4 கி.மீ

கொஞ்சம் கண்ணைக் கட்டத்தான் செய்யும். ST, M, S, F, T என்று டிஸ்வகரில்தான் எத்தனை வேரியன்ட்டுகள்!? இப்போது இந்த அல்ஜீப்ரா விஷயங்கள் எதுவுமே டிஸ்கவரில் கிடையாது. அடைமொழி எதுவும் இல்லாத பழைய டிஸ்கவர்தான். பஜாஜில் 125 சிசி செக்மென்ட்டில் முதன் முதலில் 5 கியர்கள், நைட்ராக்ஸ் சஸ்பென்ஷனுடன் வந்தது டிஸ்கவர்தான். ‘100 சிசியில் மைலேஜ் இருக்கு; ஆனா பெர்ஃபாமென்ஸ் இல்லையே’ என்பவர்களுக்காக, 125 சிசி மார்க்கெட்டில் பெர்ஃபாமென்ஸிலும் கொஞ்சூண்டு மெர்சல் காட்டுகிறது டிஸ்கவர் 125. பராமரிப்புச் செலவிலும் டிஸ்கவரை அடித்துக் கொள்ள வேறு பைக்குகள் இல்லை. இதன் ஆயில் ஃபில்டர் 40 ரூபாய்; ஏர் ஃபில்டர் 60 ரூபாய்; டெலிஸ்கோபிக் ஃபோர்க் ஸ்ப்ரிங் 60 ரூபாய்; டைமிங் செயின் 130 ரூபாய்.

 

 

 

bikeயமஹா சல்யூட்டோ RX
விலை: ரூ.57,219
இன்ஜின்: 110 சிசி
பவர்: 7.5 bhp
எடை: 98 கிலோ
டேங்க்: 7.2 L
மைலேஜ்: 82 kmpl

சல்யூட்டோவின் டிஸைனுக்கான இன்ஸ்பிரேஷன் யமஹா FZதான். ஆனால் லைட்டான சேஸி, 17 இன்ச் டயர்கள், ஸ்லிம் அண்ட் ஸ்லீக் டிஸைன் சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். எடை 98 கிலோதான் என்பதால், ஈஸியான ஹேண்ட்லிங்குக்குப் பக்கா பைக் சல்யூட்டோ RX. அதாவாது, சாதாரண ஸ்கூட்டியைக் கையாள்வதுபோல் சல்யூட்டோவை ‘சட் சட்’ என மடக்கித் திருப்பலாம். அதேபோல், மைலேஜும் சூப்பர். சல்யூட்டோவின் 110 சிசிக்கு டிஸ்க் ஆப்ஷன் தேவையில்லை என்று நினைத்து விட்டார்களோ என்னவோ? ஆனால், கலர் டிஸைனில் மேட் ஃபினிஷிங் ஆப்ஷனைக் கொண்டு வந்த சல்யூட்டோவுக்கு ஒரு சல்யூட் வைக்கலாம்.

 

 

 

 

மைலேஜ்

யமஹா சல்யூட்டோ 125 
விலை: ரூ.69,059 (Disc)
இன்ஜின்: 123 cc
பவர்: 8.2 bhp
எடை: 112 கிலோ
டேங்க்: 7.6 L
மைலேஜ்: 78 kmpl

சல்யூட்டோவில் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். RX பேட்ஜ் இருந்தால் 110 சிசி; வெறும் சல்யூட்டோ என்றால், அது 125 சிசி. டிஸ்கவருக்கு அடுத்தபடியாக 125 சிசி செக்மென்ட்டில், ஓரளவு நல்ல மைலேஜ் சல்யூட்டோவில் எதிர்பார்க்கலாம். ஏனென்றால், 125 சிசியில் குறைந்த பவர் சல்யூட்டோ 125-ல்தான். கிட்டத்தட்ட 110 சிசியின் பவர் என்பதாலேயே, ‘மைலேஜ் மட்டும் போதும்’ என்று நம்பி பைக்கை புக் செய்தால், நிச்சயம் ஏமாற்றாது சல்யூட்டோ 125. டேங்க் கொள்ளளவு - 110 சிசிக்கும் 125 சிசிக்கும் வெறும் 400 மில்லிதான் வித்தியாசம் என்பதிலேயே இந்த இன்ஜினின் எக்கானமியைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். அதேபோல், 125 சிசி செக்மென்ட்டில் நீளமான பைக் சல்யூட்டோதான். நீளம் - 2035 மிமீ. இதனால், ஒரு சின்னக் குடும்பம் எந்தச் சிக்கலுமின்றிப் பயணிக்கலாம். 

 

 

 

மைலேஜ்

சுஸூகி ஹயாத்தே EP
விலை: ரூ.66,100
இன்ஜின்: 113 cc
பவர்: 8.7 bhp
எடை:  107 kg
டேங்க்: 10 Litre
மைலேஜ்: 76 கி.மீ

பழைய ஹயாத்தேவை ஒப்பிடும்போது, புதிய ஹயாத்தேவில் சேஸி, இன்ஜின், SEP தொழில்நுட்பம், நீளமான வீல்பேஸ், 5 ஸ்டெப் அட்ஜஸ்டபிள் ஹைட்ராலிக் ஷாக் அப்ஸார்பர், சூப்பர் ஸ்லீக் பிஸ்டன், ட்யூப்லெஸ் டயர்கள், MF பேட்டரி என்று ஏகப்பட்ட புதுசுகள். அதனால் விலையும் 125 சிசிக்குச் சமமாக கொஞ்சம் காஸ்ட்லிதான். ‘‘பிக்-அப், ரைடிங் கம்ஃபர்ட் எதிலும் காம்ப்ரமைஸ் செய்யாமல், அதே நேரத்தில் மைலேஜிலும் குறை வைக்காமல் எங்கள் இன்ஜினீயர்கள் ஹயாத்தேவை டிஸைன் செய்துள்ளார்கள்!’’ என்கிறார் சுஸூகியின் நிர்வாக இயக்குநர் மாஷயோஷி.

 

 

மைலேஜ்


ஹீரோ ஸ்ப்ளெண்டர் i-ஸ்மார்ட்
விலை: ரூ.65,119
இன்ஜின்: 109.2 சிசி
பவர்: 9.39bhp
எடை: 115 கிலோ
டேங்க்: 8.5 லிட்டர்
மைலேஜ்: 75 கி.மீ

மைலேஜ் விஷயத்தில் பஜாஜ்தான் ஒலிம்பிக்கின் உசேன் போல்ட் என்றால், ஹீரோ - போல்ட்டுக்கு அடுத்து வரும் காட்லின். கிட்டத்தட்ட பஜாஜுக்கு இணையான மைலேஜை ஹீரோவிடம் எதிர்பார்க்கலாம். அதிலும் பைக் மார்க்கெட்டில், ‘ஸ்டார்ட்-ஸ்டாப்’ சிஸ்டத்தைக் கொண்டு வந்து புதுமையைப் புகுத்தி, பைக் கம்யூட்டர்களை லைக்ஸ் போட வைத்த பெருமை ஹீரோவின் iஸ்மார்ட்டுக்கு உண்டு. அதாவது, சிக்னலில் ஐந்து விநாடிகள் நின்றால் தானாகவே பைக் ஆஃப் ஆகி, க்ளட்ச்சைப் பிடித்ததும் இன்ஜின் ஸ்டார்ட் ஆகும் சிஸ்டம்தான் ‘ஸ்டார்ட்-ஸ்டாப்!’ இதனால், பழைய 100 சிசி ஸ்ப்ளெண்டரைவிட மைலேஜ் கணிசமாகக் கிடைக்கும் என்கிறது ஹீரோ.

 

 

மைலேஜ்

 

ஹோண்டா ட்ரீம் யுகா
விலை: ரூ.62,332
இன்ஜின்: 109.2 சிசி
பவர்: 8.31bhp
எடை: 109 கிலோ
டேங்க்: 8 லிட்டர்
மைலேஜ்: 74 கி.மீ

'ட்ரீம் பைக்' என்பதுதான் ஹோண்டாவின் கோட்பாடு. கனவு பைக் என்றால் விலை அதிகமாகத்தான் இருக்கும். ட்ரீம் யுகா அதற்கு விதிவிலக்கு. ஹோண்டா நிறுவனத்தில் விலை குறைந்த இரண்டாவது பைக் ட்ரீம் யுகா. ஸ்டைல் பைக்தான்; ஆனால் வசதிகள் குறைவு. டிஸ்க் பிரேக் ஆப்ஷன்கூட இல்லை.

 

(குறிப்பு:  ஓட்டுதல் முறை, சாலை வசதி என்று ஒவ்வொரு பைக்குகளுக்கும் மைலேஜ் வித்தியாசப்படும்.அதிலும், அராய் சொல்லும் மைலேஜ் எந்த பைக்குக்கும் சாலையில் கிடைத்ததாகச் சரித்திரம் இல்லை. எனவே, 'எங்க ஊர்க்காரனுக்கு மட்டும் 50... உங்க ஊர்க்காரனுக்கு எப்படி 55 தரும்'னு சண்டை போட்டுக்காதீங்க மக்களே!)

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்