இனி அப்பளம் சைஸில் மொபைல் கிடைக்கலாம்..! #Photonic | Ultra-Thin Silicon Photonics sheet captures Images without lens

வெளியிடப்பட்ட நேரம்: 18:22 (28/06/2017)

கடைசி தொடர்பு:18:22 (28/06/2017)

இனி அப்பளம் சைஸில் மொபைல் கிடைக்கலாம்..! #Photonic

டிஜிட்டல் உலகத்தைப் பொறுத்தவரை, எந்தவொரு பொருளும் அது கண்டுபிடிக்கப்பட்டபோது இருந்ததைவிட, அளவு மற்றும் வசதிகளில் அதன்பின் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவது வழக்கம். மொபைல் போன், தொலைக்காட்சி உள்ளிட்ட பல பொருள்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். முன்னொரு காலத்தில் டேபிள் முழுவதையும் அடைத்துக்கொண்டிருந்த தொலைக்காட்சியின் அளவு, தற்போது சில இன்ச் தடிமன் கொண்டதாக மாறியிருக்கிறது.  காலப்போக்கில் வால்பேப்பரைப்போல சுவரில் ஒட்டிக்கொள்ளும் வகையில் தொலைக்காட்சியின் அளவு மாறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

நானோ டெக்னாலஜி

அளவில் சிறியதாகவும், பயன்கள் அதிகமானதாகவும் கொண்டதாக ஒரு பொருளை மாற்றுவதில் நானோ டெக்னாலஜியின் பங்கு மிக முக்கியமானது. நானோ டெக்னாலஜியின் வளர்ச்சி காரணமாகத்தான் இன்று நாம் பல்வேறு பலன்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். தொலைக்காட்சிகளில் பயன்படுத்தப்பட்டுவந்த எல்.சி.டி திரையை விட அதிகச் சிறப்புத்தன்மை கொண்ட, அதே நேரத்தில் தடிமன் குறைவான எல்.இ.டி திரை தயாரிக்கப்பட்டது. அதன்பின் அதைவிடவும் மேம்பட்ட ஓ.எல்.இ.டி திரை தற்போது பெருமளவில் பயன்படுத்தப்பட்டுவருகிறது. தொலைக்காட்சியில் மட்டுமில்லாமல் ஸ்மார்ட்போன் திரையிலும் இந்த மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்துவருகின்றன. இதனால் தொடக்க காலத்தில் இருந்ததைவிடவும் தற்போது தொலைக்காட்சியின் தடிமனானது குறைந்துகொண்டே வருகிறது. மொபைல் போன்களுக்கும் இது பொருந்தும்.

தடிமன் குறைவான ஸ்மார்ட்போன்கள் சந்தையில் விற்கப்பட்டு வந்தாலும்கூட, அவற்றின் தடிமனை மேலும் குறைக்கும் ஆராய்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், கேமராவின் தடிமனைக் குறைத்தால் ஸ்மார்ட்போனின் தடிமனையும் கணிசமாகக் குறைக்கமுடியும் என்பதை மனதில்வைத்து, கலிபோர்னியா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் புதிதாக ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவில், அதிகத்தடிமன் கொண்ட கேமரா லென்ஸிற்குப்பதிலாக, குறைந்த தடிமன் கொண்ட சிலிக்கான் ஃபோட்டோனிக்ஸ் ஷீட்டைப் பயன்படுத்தி புகைப்படம் எடுக்க முடியும் என நிரூபித்துள்ளனர். தற்போது ரேடார் உள்ளிட்ட பல பயன்பாடுகளுக்கு இந்த சிலிக்கான் ஃபோட்டோனிக்ஸ் ஷீட் பயன்படுத்தப்படுகிறது. இந்தத்தொழில்நுட்பத்தால் வரும்காலத்தில் டிஜிட்டல் கேமரா மற்றும் மொபைல் ஆகியவற்றின் தடிமனும், பொருள்செலவும் பெரிதளவில் குறைய வாய்ப்புள்ளது.

மொபைல் போனில் பயன்படுத்தப்படவிருக்கும் Optical Phased Array சிப்

லென்ஸ் செய்யும் அனைத்து வேலைகளையும் இந்த ஷீட் மூலம் செய்ய முடியும். இந்த ஷீட்டிற்குள் நுழையும் ஒளிக்கற்றையை, சின்னஞ்சிறிய Optical Phased Array (OPA) சிப், ஒளியணுவியல் முறையில் புகைப்படமாகப் பதிவு செய்கிறது. இந்த முறையில் எடுக்கப்படும் புகைப்படத்தின் ரெசொல்யூசன் தற்போது மிகக்குறைவாகவே இருக்கிறது. வரும்காலத்தில் இதன் திறன் மேம்படுத்தப்பட்டு, அதிகத்தரம் கொண்ட புகைப்படங்களை இந்தத் தொழில்நுட்பம் மூலம் பிடிக்க முடியும்.

வெளியிலிருந்து வரும் ஒளியைக் குவித்து பின்புறமிருக்கும் ஃபிலிம் அல்லது இமேஜ் சென்சாரில் பதிவு செய்யும் வேலையைத்தான், லென்ஸ் செய்கிறது. இதே வேலையைச் சிலிக்கான் ஃபோட்டோனிக்ஸ் ஷீட் இனி செய்வதாக வைத்துக்கொள்வோம். லென்ஸை விட குறைந்த பொருள்செலவு மற்றும் இடத்தை மட்டுமே சிலிக்கான் ஃபோட்டோனிக்ஸ் ஷீட் எடுத்துக்கொள்ளும். இதனால் கேமராவின் விலையும் பெரிதளவில் குறைய வாய்ப்பிருக்கிறது. மொபைல் போன் மேலும் மெல்லியதாகவும் மாற வாய்ப்பிருக்கிறது.

Optical Phased Array சிப் தொழில்நுட்பம் பலன் கொடுத்தால், லென்ஸ் பயன்படுத்தும் பொருள்கள் அனைத்திலும் இந்த மாற்றம் எதிரொலிக்கும். டிஜிட்டல் கேமரா, மொபைல் போன், தொலைநோக்கி போன்ற பொருள்களின் தடிமன், அளவு, பொருள்செலவு, எடை போன்ற அத்தனை விஷயங்களிலும் மாற்றங்கள் ஏற்படும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்