Published:Updated:

என்ன நடக்கிறது கிண்டி ரேஸ் கோர்ஸில்? நம் நிருபரின் நேரடி அனுபவம்!

என்ன நடக்கிறது கிண்டி ரேஸ் கோர்ஸில்? நம் நிருபரின் நேரடி அனுபவம்!
News
என்ன நடக்கிறது கிண்டி ரேஸ் கோர்ஸில்? நம் நிருபரின் நேரடி அனுபவம்!

என்ன நடக்கிறது கிண்டி ரேஸ் கோர்ஸில்? நம் நிருபரின் நேரடி அனுபவம்!

சென்னையின் பல்வேறு அடையாளங்களுள் ஒன்று, கிண்டி ரேஸ் கோர்ஸ். இந்தியாவைவிட்டு ஆங்கிலேயர்கள் வெளியேறியபோது ரிப்பன் பில்டிங், புனித ஜார்ஜ் கோட்டை, லயோலா கல்லூரி என எத்தனையோ கட்டங்ளையும் கல்லூரிகளையும் வரலாற்று நினைவிடங்களையும் விட்டுச்சென்றனர். அவற்றுள் ஒன்றுதான் இந்த கிண்டி ரேஸ் கோர்ஸ். 1777-ம் ஆண்டு கட்டப்பட்ட இது, இப்போது மெட்ராஸ் ரேஸ் க்ளப் ஆளுமையின் கீழ் இயங்கிவருகிறது. வருடம்தோறும் நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை குதிரைப் பந்தயம்  நடைபெறும்.

அலுவலகரீதியிலோ தனிப்பட்டரீதியிலோ அதை நாம் எத்தனையோ முறை கடந்து போயிருப்போம். அங்கு எந்நேரமும் சிறு புத்தகம் கையுமாக அலைந்துகொண்டு, பித்து பிடித்தாற்போல் தோற்றம்கொண்ட பலரின் நிலைக்கான காரணத்தைப் பற்றி நாம் என்றாவது யோசித்திக்கிறோமா... குதிரைப் பந்தயம் பற்றியும் அதன் இயக்கம் பற்றியும் எப்போதாவது சிந்தித்துள்ளோமா? இப்படி ஒரு சிந்தனை எழுந்த அடுத்த நிமிடமே சென்னை கிண்டி ரேஸ் க்ளப்பில் கால் பதித்தோம்.

கையடக்கப் புத்தகத்தையும் (கைடு), மஞ்சள் நிறத்தில் அச்சிடப்பட்ட தாள் ஒன்றையும் வைத்துக்கொண்டு, பலரும் எதையோ யோசித்துக்கொண்டும், தனக்குள் பேசிக்கொண்டும், எழுதிக்கொண்டும் இருப்பதை இங்கு நாம் பார்க்கலாம். இவ்வளவு ஆர்வமாகவும் அவசரமாகவும் என்ன யோசிக்கிறார்கள், பன்னிரண்டாம் வகுப்பு கணக்குப் பாடத்தில் வரும் கணக்கு ஸ்டெப்களைப்போல பேப்பரில் எழுதியதைப் பார்த்து அசந்துவிட்டேன்... ஆடிப்போயிட்டேன். ஆம், அவர்கள் எழுதுவது ரேஸ் குதிரைகளைத் தேர்தெடுப்பதற்கான கணக்கு. சுருக்கமாகச் சொன்னால், சூதாட்டம் என்ற பெயரில் ஒளிந்திருக்கும் சூட்சுமத்தை அறியும் முயற்சி.

உள்ளே... வெளியே!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கிண்டி ரேஸ் கோர்ஸினுள்ளே நுழைந்ததும் வலது மூலையில் ஒரு கவுன்ட்டர் இருக்கிறது. பத்து ரூபாய் கட்டணம். இது எளிய மக்களுக்கான நுழைவுவாயில். அதாவது ஐந்நூறு அல்லது ஆயிரம் ரூபாய் கட்டி சூதாடுபவர்களுக்கான கவுன்ட்டர் இது. இதற்கு சற்று தள்ளி அமைந்துள்ளது, பெரும்பணக்காரர்களுக்குரிய கவுன்ட்டர். இங்கு ஆறேழு பேர் பணத்தைக் கொடுக்க வரிசையில் காத்திருக்க,  ஓரிரு நபர்கள் அதை வாங்கிக்கொள்ள, இருபதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் உட்கார்ந்துகொண்டு புத்தகத்தையே வெறித்துக்கொண்டிருந்தார்கள். வரிசையில் நின்ற ஒருவர், வெயிலில் வெம்மையைக் கட்டுப்படுத்திக்கொள்ள கட்டிங்கை உள்ளே தள்ளிவிட்டு, ஏதோ... அரிய சாதனையைச் செய்துவிட்ட தோரணையில் தன் உடல்மொழியை அமைத்துக்கொண்டார். கவுன்ட்டருக்கு வெளியேயும் உள்ளேயும் இருக்கும் மனிதர்கள் ரேஸ் குறித்த ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார்கள். நெருக்கமாக அமர்ந்திருந்தாலும் அருகில் என்ன நடக்கிறது, நாம் எங்கு இருக்கிறோம் என்பது பற்றிய எந்த உணர்வும் இல்லாமல் ரேஸ் ஒன்று மட்டுமே தன் வாழ்க்கை என்பதாக ரேஸ் புத்தகத்தையும் மஞ்சள் நிறத் தாளையும் மாற்றி மாற்றிப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

இவர்களின் நோக்கத்தையும் செயல்பாட்டையும் எப்படியாவது தெரிந்துகொள்ள வேண்டும் என்ற முனைப்புடன் ஒருவரிடம் பேச்சுகொடுத்தேன். “தம்பி, உனக்கு சின்ன வயசு. இங்கே நீ உன் வாழ்க்கையைத் தொலைச்சுடாதே. இங்கிருந்து போயிடு. வெளியே போய் உருப்புடற வழியைப் பாரு. இதுக்கு மேல என்னை எதுவும் கேட்டாதே. நான் ரொம்ப பிஸி!” என்று நமக்கு கட்டளையிட்டவர் வேறு யாருமல்ல, வெயிலின் வெம்மையைத் தணித்துக்கொண்ட விஞ்ஞானி. 

‘வந்த வேலைக்கான விவரங்களில் பாதிக்கூட கிடைக்கவில்லையே!’ என்ற யோசனையுடன் அமர்ந்திருந்த என்னைக்  கடந்து சென்றார் ஒருவர். ‘ஆஹா, இவரை விடக்கூடாது... ஒரே அமுக்கா அமுக்கிறணும்’ என எண்ணியவாறு, “அந்த 5617-ம் நம்பர் சூப்பர்ண்ணே” என்று வாயில் வந்த எண்ணைச் சொல்லி, அவர் கவனத்தை என்பக்கம் ஈர்த்தேன். என் குரலைக் கேட்ட அவர், “கரெக்ட், நான்கூட இந்த நம்பரைத்தான் யோசிச்சுக்கிட்டே போனேன். நீங்களே சொல்லீட்டீங்க. சந்தேகமே இல்லாம அந்த எண் குதிரை மேலேயே கட்டிடவேண்டியதுதான். ரொம்ப தேங்க்ஸ்ப்பா!” என்று கூறிவிட்டு தொகைக் கட்டியதற்குரிய சீட்டை வாங்கிக்கொண்டு வந்தவரை, அவ்வளவு எளிதில் விட முடியுமா என்ன? அவரிடம் பல தகவல்களை எதிர்பார்த்து சில கொக்கிகளைப் போட்டோம்.

“என் பேரு சீனிவாசன். நான் அனகாபுத்தூர்ல இருக்கேன். இந்தச் சூதாட்டத்தைச் சின்ன வயசுலேயே பழகிக்கிட்டேன். விட முடியலை. எத்தனையோ பேரு சொத்தையே அழிச்சுட்டு உள்ளே சுத்திக்கிட்டிருக்காங்க. அதுல நானும் ஒருத்தன். படிக்கிற பையன் மாதிரி இருக்க. வாழ்க்கையை அழிச்சுக்காத. இதுக்குமேல எதுவும் சொல்றதுக்கில்ல கெளம்பு. நான் போய் குதிரையைப் புடிக்கணும் வழியை விடு” என்று தனக்கான செயலில் கவனமாக இருந்தார் சீனிவாசன். இவர், மாதா மாதம் தனக்கு வரும் 6,000 ரூபாய் பென்ஷன் பணத்தில்  4,000 ரூபாயை இங்கு இழப்பது இவரின் வாடிக்கை.

அடுத்ததாக தூரத்தில் தனியாக ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருந்தவரிடம் பேசினோம். அவர் சீனிவாசனைபோல் இல்லாமல் தன்மையாகப் பேசினார். “நான் செக்யூரிட்டியா வேலை பார்க்கிறேன்.  பேரு சுந்தர். சுமார் 20 வருஷங்களா ரேஸ் ஆடுறேன். செய்றது தப்புன்னு தெரியுது, இருந்தாலும் அது பழக்கமாகிப்போனதால விட முடியலை” என்று கூறிய சுந்தர், பெட்டிங் கட்டுவது, குதிரைகளைத் தேர்ந்தெடுப்பது, எந்த ரேஸுக்கு எங்கு பணம் கட்டுவது, ஜெயிச்சா எவ்வளவு பணம் கிடைக்கும் என்பது போன்ற பல தகவல்களை அள்ளி வீசினார். “இங்கே கோடி ரூபாய் ஜெயிச்சவனும் இருக்கான்; தோத்து தெருக்கோடியில நின்னவனும் இருக்கான்” என அதகள ஆச்சர்ய பன்ச் வைத்த சுந்தரிடம், “நீங்க எவ்ளோ ஜெயிச்சிங்க?” என்று கேட்டேன். “அது வரும்... போகும். 2,000 ரூபாய் வந்தா, 10,000 ரூபாய் போகும். அதெல்லாம் கேட்காதீங்க” என முடித்தார்.

அங்கு இருந்தவர்களில் இதுபற்றி எவரிடம் பேச்சுகொடுத்தாலும், “தம்பி நீங்க எல்லாம் இங்கே வரக் கூடாது. கிளம்புங்க... கிளம்புங்க..!'' என அக்கறையுடன் நம்மை விரட்டிவிட்டு, அவசரமாகப் பணத்தை எண்ணத் தொடங்கினார் ஒருவர். ஆக, வயது வித்தியாசமின்றி அங்கு இருந்த அத்தனை பேருமே குதிரைப் பந்தயத்தால் தன் குலத்தையே இழந்தவர்கள் என்பது புரிந்தது.

பெட்டிங் ஈஸி... வின்னிங்தான் கஷ்டம்!

பெட்டிங் கட்டுவது ரொம்ப ஈசி. கையடக்கப் புத்தகத்தை (கைடு) வாங்கி எந்த ரேஸில் எந்தக் குதிரை முதலாவதாக வரும் எனக் கணிக்க வேண்டும். பிறகு அந்த குதரையின்மேல் பணத்தைக் கட்டவேண்டும். அதிர்ஷ்டம் நம் பக்கமா... இல்லையா என்பதை ரிசல்ட் வரும்போது தெரிந்துகொள்ளலாம். ரேஸ்கள் சென்னையில் நடக்காதபோது ஊட்டி, பெங்களூரில் நடைபெறும் ரேஸ்கள் இங்கு எல்.இ.டி திரை மூலம் ஒளிபரப்பப்பட்டு சூதாட்டம் நடத்தப்படுகிறது. சென்னையில் நேரடியாக ரேஸ்கள் நடக்காததால், இப்போது சனி, ஞாயிறு என வாரம் இரண்டு நாள்கள் மட்டுமே இங்கு சூதாட்டம் நடைபெறுகிறது. பெங்களூரில் மொத்தம் எட்டு ரேஸ்கள் நடத்தப்பட்டு, அவை நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன.

ஜாக்பாட், மினி ஜாக்பாட், டிரெபிள் 1, 2 என்று நான்கு வகை பந்தயங்கள் உள்ளன. ஒவ்வொரு பந்தயத்திலும் ஐந்து குதிரைகளை ஒவ்வொரு ரேஸிலிருந்தும் தேர்ந்தெடுத்து, அவற்றின்மேல் பணம் கட்ட வேண்டும். மினி ஜாக்பாட்டில் மொத்தம் நான்கு ரேஸ்களிலிருந்து நான்கு குதிரைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றின்மேல் பணம் கட்ட வேண்டும். டிரெபிள் 1, 2 பந்தயங்களில் மூன்று ரேஸ்களிலிருந்து மூன்று குதிரைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றின்மேல் பணம் கட்ட வேண்டும். 100, 200 ரூபாயிலிருந்து கோடி ரூபாய் வரைகூட பணம் கட்டலாம். உதாரணத்துக்கு ஜாக்பாட் பந்தயத்தை எடுத்துக்கொள்ளலாம். மொத்தம் எட்டு ரேஸ்களிலிருந்து 4, 5, 6, 7, 8 என ஐந்து ரேஸ்கள் அதில் அடங்குகின்றன. எனவே, 4, 5, 6, 7, 8-வது ரேஸ்களிலிருந்து தலா ஒரு குதிரையைத் தேர்ந்தெடுத்து அவற்றின்மேல் பணம்கட்ட வேண்டும்.  ஐந்து ரேஸ்களிலுமே நாம் செலெக்ட் செய்த குதிரைகள் முதலாவதாக வந்து பந்தயம் அடித்தால்,  அந்த கையேட்டில் கொடுத்திருக்கக்கூடிய மடங்குகளில் நமக்குப் பணம் கிடைக்கும். உதாரணத்துக்கு, ஜாக்பாட்டில் 100 ரூபாய் கட்டி, நம் குதிரைகள் அனைத்தும் முதல் இடம் வந்துவிட்டால், நமக்கு 1,000 ரூபாய் வரை கிடைக்கும். ஐந்தில் எத்தனை குதிரைகள் முதல் இடம் வருகின்றனவோ, அவற்றுக்கான பணம் வந்துவிடும். அனைத்து குதிரைகளுமே தோற்றுவிட்டால், கோடி ரூபாய் கட்டினாலும் கோவிந்தாதான்.

என்ன இருக்கிறது கையடக்கப் புத்தகத்தில் (கைடில்)

‘தி ரேஸ் புரோகிராம்’ எனப் பெயர்கொண்ட இந்தக் கையேடு, பெங்களூரில் தயாராகிறது. இதில் நடந்த ரேஸ்களின் முடிவுகளுடன் நாளைக்கு நடக்கவிருக்கும் ரேஸ்களின் ஒட்டுமொத்த விவரமும் தெளிவாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. எத்தனை ரேஸ்கள் நடக்கபோகின்றன, நடந்து முடிந்த ரேஸில் எந்தக் குதிரை எந்த இடத்தைப் பிடித்தது, எவ்வளவு பணம் ஜெயித்தது, குதிரைகளின் கம்பெனி பெயர்கள், அதன் உரிமையாளர்களின் விவரம், குதிரையை ஓட்டும் ஜாக்கியின் ஜாதகம் என ரேஸ் குறித்த அத்தனை தகவல்களும் இதில் அடக்கம். அந்த மஞ்சள் நிற காகிதத்தில் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக அன்றைய ரேஸுடன் சேர்த்து எந்தக் குதிரையில் பணம் கட்டலாம், எந்ததெந்தக் குதிரைகள் பெஸ்ட் என்ற பரிந்துரைகளும் உள்ளன. மேலும், ஊட்டி, பெங்களூரில் இதற்கு முன்பு நடந்த ரேஸ்களில் ஜெயித்த குதிரைகள் விவரமும் அதில் இருக்கிறது.

சாபம், தீருமா... நம்மைத் தீர்க்குமா?

கால்களில் செருப்புகூட இல்லாதவரும், நுனிநாக்கில் ஆங்கிலம் பேசுபவரும்  இங்கு  தோளோடு தோள் உரசியபடி உலாவருகிறார்கள். போதையின் உச்சத்தில் பாதை தெரியாமல் அலைந்துக்கொண்டிருக்கிறார்கள் பலர். ரேஸ் கோர்ஸில் சூதாடும் மனிதர்களில் வெறும் பத்து சதவிகிதம் பேர்தான் பணக்காரர்கள்.  90 சதவிகிதத்தினர் மிடில் க்ளாஸ் அல்லது ஏழ்மையில் இருப்பவர்களாகப் பட்டார்கள். இந்த 90 சதவிகிதத்தில் உங்கள் தந்தையும் இருக்கலாம், உங்கள் நண்பரும் இருக்கலாம்... அவ்வளவு ஏன்... அது நீங்களாகவும் இருக்கலாம். வாழ்க்கையில் ஓடி வளத்துடன் நலத்தையும் பெறவேண்டிய மனித ஆற்றல் குதிரைப் பந்தயம் எனும் சாபத்தால் சாம்பலாகி வருகிறது. இனிவரும் காலத்தில் இந்தச் சாபம் தீர வழி இருந்தாலும், மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்களா அல்லது அதுக்கே தன்னை தாரைவார்ப்பார்களா?

அடிப்படை தேவைகளுக்கே ஆட்டம் காணும் நமக்கு சூதாட்டம் எதற்கு?