Published:Updated:

“ஆன்லைனில் மணல்” : பலே திட்டம்... பலன் தருமா...?

“ஆன்லைனில் மணல்” : பலே திட்டம்... பலன் தருமா...?
“ஆன்லைனில் மணல்” : பலே திட்டம்... பலன் தருமா...?

“ஆன்லைனில் மணல்” : பலே திட்டம்... பலன் தருமா...?

‘ஆன்லைனில் மணல் வர்த்தகம்’ என்கிற திட்டம் அருமையானது. ஆனால் அது முறையாக நடக்குமா, என்று சந்தேகம் எழுப்புகின்றனர் மணல் தொழிலில் ஈடுபட்டுவருபவர்கள்.

ஆற்றுமணல் விற்பனையைத் தமிழக அரசே ஏற்றுநடத்தியபோதும், சில தனிநபர்களின் பிடியில்தான் ஒட்டுமொத்த மணல்விற்பனையின் கட்டுப்பாடுகளும் இருந்தது. மணல் அதிபர் சேகர்ரெட்டி சிக்கிய பிறகு, மணல் விற்பனையில் சில மாற்றங்களைக் கொண்டுவர முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவுசெய்தார். அதன் பிறகுதான் மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்தும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார். 

ஏற்கெனவே அரசுதானே மணல் விற்பனை செய்கிறது என்று சிலர் கேள்விகள் எழுப்பினர். மணல் விற்பனை அரசு ஏற்று நடத்தினாலும், ஆற்றில் மணல் அள்ளுவது முதல், அதை விற்பனை செய்வதுவரை அனைத்தும் தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் விடப்பட்டதால் அதில் பல்வேறு முறைகேடுகள் அதிகரித்தன. அரசு நிர்ணயித்த விலையை விட பல மடங்கு கூடுதலாக ஒப்பந்ததாரர்கள் மணலை விற்பனை செய்தனர். அதைத் தடுக்க வேண்டியவர்களான அதிகாரிகள் முதல், ஆளும் கட்சிப் பிரமுகர்கள் வரை அத்தனை பேரையும் தனியே 'கவனித்து' எந்த இடையூறுமின்றி மணல் தொழிலை செய்துவந்தார்கள்.

மணல் விற்பனையில் இனி கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தபிறகு, மணல் விற்பனையில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஏற்கெனவே மணல் அள்ளிவந்த தனியார் ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தங்களும் முடிவுக்கு வந்துவிட்டன. அதே நேரம், பல ஆண்டுகளாக தமிழக ஆறுகளில் மணல் அள்ளியதன் விளைவாகப் பல ஆறுகளில் அள்ளுவதற்கு மணல் இல்லாத நிலைவந்துவிட்டது. தமிழகத்தில் தற்போது ஏழு இடங்களில் மணல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. அதேநேரம் மணல் தேவையும் அதிகமாக உள்ளது. சென்னைக்கு நாள் ஒன்றுக்கு இருபதாயிரம் யூனிட் மணல் தேவைப்படும் நிலை உள்ளது. இந்நிலையில் அரசே மணல்குவாரிகளை ஏற்று நடத்தும் என்று அறிவித்தபிறகு ஆற்றிலிருந்து மணல் அள்ளுவதற்கு நான்கு, ஐந்து நாள்கள் மணல் லாரிகள் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதால், மணல் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனால் பல இடங்களில் கட்டடப் பணிகள் பாதிக்கபட்டுவருகின்றன. 

இந்நிலையில்தான் தமிழக அரசு மணல் வர்த்தகத்தை ஆன்லைனில் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியது. மணல் தேவைக்கு ஆன்லைன் மூலமே முன்பதிவு செய்யும் செயலியை முதல்வர் பழனிசாமி துவங்கிவைத்துள்ளார். முதல் மூன்று நாள்கள் சோதனை செய்யப்பட்டு, அதன்பிறகு இந்தச் செயலி முழுப் பயன்பாட்டிற்கு வரும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆன்லைன் மணல் வர்த்தகம் குறித்து மணல் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் பன்னீர்செல்வத்திடம் கேட்டபோது “ஆன்லைன் மணல் வர்த்தகம் வரவேற்கப்படக்கூடிய விஷயம்தான். அதே நேரம் அது முறையாக நடக்குமா என்ற அச்சம் எங்களுக்கு உள்ளது. மணல் வியாபாரத்தை அரசு ஏற்றுநடத்தியும் மணல் விலை உச்சத்துக்குப் போய்விட்டது என்று தொடர்ந்து புகார்கள் சொல்கிறார்கள். மணல் விலையை லாரி உரிமையாளர்கள் நிர்ணயிப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் உள்ளூர் தாதாக்களும், ஆளும் கட்சிப் பிரமுகர்களும் எங்களிடம் வசூலிக்கும் பணத்தைப் பார்த்தாலே மணல் விலை உச்சத்திற்குச் சென்ற காரணம் தெரியும். ஆன்லைனில் மணல் விற்பனை என்பது புதிதல்ல. ஏற்கெனவே ஜெயலலிதா இதே போன்று ஒரு திட்டத்தைத் தொடங்கினார். மாவட்டத் தலைநகரங்களில் மணல் குவிக்கப்பட்டு, ஆட்சியர் மேற்பார்வையில் விற்பனை செய்யப்படும் என்ற திட்டத்தை அறிவித்தார். ஆனால் கொஞ்சம் காலத்திலே அந்த திட்டம் செயலிழந்து தனியார் கைவசமே மணல் பிஸினஸ் சென்றுவிட்டது.

இப்போது மணல் தேவையுடையவர்கள், ஆன்லைனில் பதிவு செய்து, அதற்கான தொகையை ஆன்லைனிலேயே செலுத்தும் விதத்தில் இது நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது. இதன்படி மணல் லாரிகள் வைத்திருப்பவர்கள் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளவேண்டும் என்பதால் ஆற்றில் லாரிகளோடு காத்திருப்பது குறையும். சில முறைகேடுகளையும் இதனால் குறைக்கலாம். ஆனால் இதை அரசு செயல்படுத்தும் விதத்தில்தான் இதன் பயனை முழுமையாக அடையமுடியும்” என்கிறார்.

சென்னைக்கு, திருச்சி மாவட்டத்திலிருந்துதான் மணல் வருகிறது. திருச்சியில் இருபதாயிரம் ரூபாய்க்கு விற்கபடும் மணல், சென்னையில் முப்பதாயிரம் முதல் நாற்பதாயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் மணல் வர்த்தகம் நடைபெற்றால் இந்தத் தொகை குறைவதற்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டாலும், வசூலில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்து வசூலில் ஈடுபட்டால் மணல் விலை குறைய துளியும் வாய்ப்பில்லை. 

“ஆன்லைன் மணல் விற்பனை என்பதைத் தெலங்கானா அரசு ஏற்கெனவே சிறப்பாகச் செயல்படுத்திவருகிறது. அங்கு மணல் விலையும் கட்டுப்பாட்டில் உள்ளது. இப்போது தமிழக அரசு கொண்டுவந்துள்ள இந்த ஆன்லைன் சிஸ்டம் செயல்பாட்டிற்கு வந்தால்தான் அதுகுறித்து முழுமையாக நம்மால் அறிந்து கொள்ளமுடியும். மணலை ஒரே இடத்தில் கொட்டி அங்கிருந்து விற்பனை செய்யப் போகிறார்களா... அல்லது ஆற்றில் இருந்தே விற்பனை செய்ய போகிறார்களா? என்ற விவரங்கள் முழுமையாகத் தெரிந்த பிறகுதான் இதன் பயனை நாம் சொல்லமுடியும்” என்கிறார் பொறியாளர் பாலாஜி.

மணல் பிஸினஸ் என்பதே ஆளுங்கட்சியின் கஜானாவை நிரப்பத்தான் என்ற நிலை இனியாவது மாறுமா?!

அடுத்த கட்டுரைக்கு