90% நீருக்குள் மூழ்கிய அமெரிக்க நகரம்... என்ன காரணம்?

மூழ்கிய அமெரிக்க நகரம் Top

Isle de Jean Charles என்ற அந்தச் சிறியத் தீவு வட அமெரிக்காவின் தென்கிழக்கு லூசியானாவில் உள்ள டெரிபோன் (Terribonne) என்ற இடத்தில் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 170 வருடங்களாக Band of Biloxi-Chitimacha-Choctaw Indians எனப்படும் மாநில அங்கீகாரம் பெற்ற பழங்குடி மக்களுக்கு இதுதான் அன்னைபூமி. ஆனால் அவர்களே இன்று தங்கள் உயிரையும், உடைமைகளையும் காப்பாற்றிக் கொள்ள வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டிய அவலநிலை!

என்ன காரணம்?

அறுபது வருடங்களுக்கு முன்னர், லூசியானா மாகாணத்தில் மரம் வெட்டியவர்களுக்கும், எண்ணெய் வளத்தை துளையிட்டு உறிஞ்சியவர்களுக்கும், இப்படி ஒரு இழப்பு வருங்காலத்தில் ஏற்படப் போகிறது என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். அதிலும் இந்த சிறிய தீவின் எதிர்காலத்தைப் பற்றி எல்லாம் சிந்திக்க அவர்களுக்கு எங்கே நேரம் இருந்திருக்கும்? வெட்டிய மரங்களையும், உறிஞ்சிய எண்ணெய் வளத்தையும் இடம்பெயர்த்துக் கொள்ள பல மரங்களை வெட்டி, ஒய்யாரமாக வழித்தடம் அமைத்துக்கொண்டனர். இந்தச் செயல் அதைச் சுற்றியுள்ள ஈரநிலங்கள் மற்றும் சிறிய தீவுகள் உருவாக உதவிய காரணிகளை மிகவும் பாதிக்கத் தொடங்கியது. மண்ணரிப்பு ஏற்பட்டு பெரும்பாலான நிலப்பகுதிகள் கடலுடன் அடித்துச் செல்லப்பட்டது. இதனுடன் பருவநிலை மாற்றமும் சேர்ந்துக்கொள்ள மாபெரும் பேரழிவைக் கொஞ்சம் கொஞ்சமாக விலைக்கொடுத்து வாங்கிய கதைதான் இதுவும்!

90% நிலப்பரப்பு மாயமானது

மூழ்கிய அமெரிக்க நகரம் middle

ஏற்கெனவே பருவநிலை மாற்றத்தால் பெரிதாகப் பாதிக்கப்பட்டிருக்கும் லூசியானா கடற்பகுதிகள் போல இந்தத் தீவும் மெக்ஸிகன் வளைகுடாவில் மூழ்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. கடந்த 60 வருடங்களில், கிட்டத்தட்ட 90% மேல் நிலப்பரப்புத் தண்ணீருக்குள் சென்றுவிட,  தற்போது இந்த நகரில் ஒரேயொரு நீண்ட சாலை மட்டுமே எஞ்சி உள்ளதாகவும் அதுவும் இருபுறமும் நீர் சூழ்ந்து அபாயக் கட்டத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இங்கு இப்போது வெறும் 29 வீடுகளில், 100 பேர் மட்டுமே வசித்து வருகின்றனர். அவர்களையும் வேறு இடத்திற்கு கொண்டு சென்று வாழ்வாதாரம் அமைத்துத்தர $48 மில்லியன் டாலர்கள் ஒதுக்கி முயன்றுக் கொண்டிருக்கிறது அதன் அரசாங்கம்.

தொடரும் சோகங்கள்

இங்கே இப்படியென்றால், வட அமெரிக்காவின் மற்றொரு புறமிருக்கும் அலாஸ்காவிலும் இதே கதைதான்! நிங்க்ளிக் (Ninglick) என்ற நதிக்கரையில் இருக்கும் நியூடோக் (Newtok) என்ற ஒரு கிராமத்தில் 350 பேர் வசிக்கின்றனர். அலாஸ்க்காவின் மேற்கு முனையில் இருக்கும் இதில், பருவநிலை மாற்றத்தால் பனிக்கட்டிகள் உருகத்தொடங்க கடல் மட்டம் வருடத்திற்கு 70 அடி விகிதம் அபாயகரமாக உயர்ந்துகொண்டிருக்கிறது. இந்தச் செய்திகள் இரண்டும் தற்போது கடற்சார்ந்து வாழும் அனைத்து அமெரிக்க நகரங்களையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. ஒருவேளை, தங்கள் நகரத்திற்கும் இந்த நிலைமை வந்தால் தங்களை எங்கே இடம்பெயரச் சொல்வார்கள்? எப்படி வாழ்வாதாரம் அமைத்துக் கொடுப்பார்கள்? அதற்கான செலவை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமா? என்பது போன்ற கேள்விகள் அங்கே எழத் தொடங்கிவிட்டது.

இன்று வெகு விரைவாக புவி வெப்பமடைய மிக முக்கியக் காரணமாக கருதப்படுவது பசுங்குடில் (கிரீன்ஹவுஸ்) வாயுக்கள் பெருமளவில் உருவாவது. காடுகளை அழித்து நகரங்களை விரிவுபடுத்துவது, கிரீன்ஹவுஸ் வாயுக்களுக்கு வழிவகுக்கும் எரிபொருள் பயன்படுத்துவது என்று முழுக்க முழுக்க பாதிப்பை ஏற்படுத்தும் வழிமுறைகளையே நாம் கையாளுவதால் இவ்வகை பிரச்னைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. இது நடக்க வேண்டும் என்று யாரும் வேண்டுமென்றே செய்யவில்லைதான். ஆனால், இப்படி ஒரு நிலை வந்தபின்பாவது நாம் விழித்துக் கொள்ளவேண்டாமா? ஒருபுறம் வறட்சி என்றால், மறுபுறம் அதற்கு நேர்மாறான அவலம்! எது எப்படியோ, இது இயற்கையின் சட்டப்புத்தகத்திலிருக்கும் மனிதனுக்கான தண்டனை என்பதை மட்டும் நாம் மறுக்கமுடியாது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!