வெளியிடப்பட்ட நேரம்: 07:59 (29/06/2017)

கடைசி தொடர்பு:14:46 (06/07/2017)

அலுவலகத்தில் ஒரு நல்ல ‘டீம் ப்ளேயர்’ ஆகவேண்டுமா.. இந்த 10 டிப்ஸ் அவசியம்! #MorningMotivation

ஓர் அலுவலகம் என்று எடுத்துக்கொண்டால் அங்கே பலர் வேலை செய்வார்கள் அவர்களோடு இணைந்து பணியாற்ற, அவர்களோடு ஒரு நல்ல பிணைப்பை ஏற்படுத்திக் கொள்வது அவசியமான ஒன்று. ஒவ்வொரு அப்ரைசலிலும் ‘நீங்கள் குழுவில் இணைந்து பணியாற்றுவதில் (Team Player) வல்லவரா?’ எனும் கேள்வியை எதிர்கொண்டுதான் இருப்பீர்கள். அப்படி ஒரு ‘டீம் ப்ளேயராக’ பணியாற்ற, உடன் பணிபுரிபவர்களிடம் நெருக்கத்தை, நட்பை வலுப்படுத்திக்கொள்ள சில சிம்பிள் டிப்ஸ்களைப் பார்ப்போம்! 

சிரிப்போடு தொடங்குங்கள்

முதன் முதலில் ஒருவரோடு பேசத்தொடங்கும்போது உங்களுடைய முகத்தில் என்ன உணர்வை வெளிப்படுத்துகிறீர்கள் என்பது மிகமுக்கியமானது. அதனால் முதலில் பேசத் தொடங்கும்போது உதட்டில் ஒரு சிறு புன்னகையோடு பேசத் தொடங்குங்கள். அருகில் இருப்பவர்களிடம் இயல்பாக நலம் விசாரியுங்கள். ‘ஹாய் டூட்.. அப்றம்...’ என பேசி அவர்களை இலகுவாக்க முடியும்!   கூடிய விரைவில் உங்கள் நட்பு வட்டம் பெரிதாகும்.

டீம்
 

உடல் மொழியை மேம்படுத்துங்கள்
 

வெளியில் நீங்கள் எப்படி இருப்பீர்களோ அது தேவையில்லாதது அலுவலகம் என்று வந்து விட்டால் உங்கள் உடல்மொழி மிகவும் முக்கியம்.எல்லோரிடமும் எப்படிப் பேசுவது என்பதைக் கற்றுக் கொள்ளுங்கள். இறுக்கமாக இருக்காதீர்கள். கைகுலுக்கும்போது, உச்சபட்ச அன்பை அவர் உணரும் வண்ணம் கைகுலுக்குங்கள். மென்மையாக. உடன்பணிபுரிபவர் ஒரு பாராட்டும் செயலைச் செய்யும்போது, இயல்பாக அவர் தோளில் தட்டிக்குடுத்து ‘செம ப்ரோ!’ என்று சொல்லுங்கள். சின்னச் சின்ன விஷயங்களில் நட்பை மேம்படுத்தலாம் பாஸ்!
 

கவனமாகப் பேசுங்கள்

நண்பர்களிடம் நீங்கள் பேசுவது வேறு அதுபோல இல்லாமல் புதிதாக அறிமுகம் ஆனவர்களிடம் வார்த்தைகளை உணர்ந்து பேசுங்கள் முதலிலேயே தேவையில்லாத பேச்சுக்களைத் தவிர்த்து விடலாம். முடிந்தவரை அவர்களின் கண்களைப் பார்த்து பேசுங்கள் அதிலேயே அவர்களின் நம்பிக்கையைப் பெற்று விட முடியும். கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் ரசனை, உணர்வுகளைப் புரிந்துகொண்டு அதற்குப் பிறகு அதிகமாக நெருங்குவது, எப்போதும் நல்லது!

உதவி செய்வதில் தொடங்கட்டும் உங்களது நட்பு

மற்றவர்களோடு உங்களுக்கான தொடர்பு என்பது உதவி செய்வதில் ஆரம்பித்தால், நீங்கள் ஒரு புதிய நண்பரைப் பெற்று விட்டீர்கள் என்று அர்த்தம். ஏனெனில் மற்றவர்களுக்கு உதவும் பண்பு என்பது உங்களது மீதான பார்வையை உயர்த்தும் என்பதால் கூடுமானவரை உங்கள் சுற்றுப்புறத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்யுங்கள். ’ஒரு லட்சம் கடன் கிடைக்குமா?’ என்று கேட்பவர்களுக்கு உதவி மாட்டிக்கொள்ளச் சொல்லவில்லை, ‘ஃபோன்ல சார்ஜ் கம்மியாகுது’ என்று யாரிடமோ புலம்பிக்கொண்டிருக்கும் சக அலுவலக நண்பருக்கு ‘இந்தாங்க ப்ரோ. போறப்ப குடுங்க’ என்று சார்ஜரை எடுத்துக் கொடுத்துப் பாருங்கள். உங்கள் நட்பின் சார்ஜும் 100% ஏறும்!  
 

மற்றவர்களின் நேரத்தை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்

உங்களைப் போலவே மற்றவர்களுக்கும் நேரம் என்பது முக்கியமான ஒன்று என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். உயரதிகாரியோ அல்லது உங்களோடு பணிபுரியும் நண்பர்களோ  - அவர்களுக்கு முக்கியமான வேலை இருக்கும் நேரங்களில் நீங்கள் தேவையில்லாததைப் பேசிக்கொண்டு இருந்தால் அவர்களின் நட்பை இழக்க வேண்டியிருக்கும். எனவே, எப்பொழுது தேவையோ அப்பொழுது மட்டும் உரையாடுங்கள்.

சமூக வலைத்தளங்கள் கவனம்

டீம் ப்ளேயர்

இப்பொழுதெல்லாம் உங்களைப் பற்றி உங்கள் அலுவலக நண்பர்கள், அதிகாரிகள் கணிக்க சமூக வலைத்தளங்களைத்தான் நாடுகிறார்கள்.  வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைத்தளங்களை உங்கள் அலுவலகத்தில் பணிபுரிபவர்களோடு நட்புறவை ஏற்படுத்திக்கொள்ளப் பயன்படுத்துங்கள். கொஞ்சம் மரியாதையான தூரத்தில் வைத்திருக்கும் ஒரு சிலரை, நண்பர்களாக அக்செப்ட் செய்யாமல், நட்பு அழைப்பு அனுப்பாமல் இருப்பதே உசிதம். அலுவலக  வாட்ஸ்அப் குரூப்களில் ஆக்டிவாக இருங்கள். ஒருவருக்கு பதிலளித்து மற்றவர்களுக்குப் பதிலளிக்காமல் இருக்காதீர்கள். உங்களது ஒரு தவறான பதிவு அல்லது ஒரு ஃபார்வார்டு மெசேஜ் உங்கள் மீதான பார்வையையே மாற்றிவிடலாம். 

கோபத்தைத் தவிர்த்து விடுங்கள்

கோபம் என்றைக்கும் ஆபத்தானதுதான். அது உங்கள் மதிப்பைச் சிதைக்கும். கோபம் உங்களை விரும்புகிறவர்களையும் உங்களிடத்தில் இருந்து விலக்கிவிடும். உங்கள் மீது தவறு இல்லையென்றாலும், சரி அமைதி காக்கப் பழகுங்கள். பிறகு அந்தக் கோபத்தீ அணைந்தபின், உங்கள் தரப்பு நியாயத்தை அவரிடம் விளக்குங்கள். 

உங்களது எல்லைகளை அறிந்துகொள்ளுங்கள்

அனைவரிடத்திலும் சகஜமாக பழகுங்கள்; அது நல்ல விஷயம்தான். ஆனால், அலுவலகத்தில் உங்கள் எல்லைகளை அறிந்து செயல்படுங்கள். அவசர கதியில் உயரதிகாரிக்கு ஆலோசனை கூறி, சிக்கலை உருவாக்கிக் கொள்ளாதீர்கள். நமக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற நினைப்பு இருந்தால் உடனே அதை மறந்து விடுங்கள். பெரும்பாலான இடங்களிலும் அமைதியாக இருப்பதே நலம்..
உங்கள் அருகில் இருப்பவர்கள் தேவைப்பட்டால் மட்டும் அறிவுரை கூறுங்கள். அவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதை அறவே தவிர்த்துவிடுங்கள்.

தவறுகளை உணருங்கள்

ஒரு தவறு செய்தால் அதைச் சமாளிக்காதீர்கள். யாராக இருந்தாலும் மன்னிப்புக் கேட்கத் தயங்காதீர்கள். மன்னிப்பு கேட்பதன் மூலமாகவும் உங்களுக்கும் மற்றவர்களுக்கான பிணைப்பு மேம்படும் .

அனைவரையும் சமமாகக் கருதுங்கள் 

உங்களை விட வயதில் சிறியவரோ பெரியவரோ உங்களுக்குக் கீழே வேலை செய்பவரோ அல்லது உயரதிகாரியோ யாராக இருந்தாலும் சரி மரியாதை கொடுக்கக் கற்று கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு நீங்கள் மரியாதை தரும் விதத்தில்தான் உங்களுக்கு மரியாதையும் கிடைக்கும். மற்றவர்களுக்கு மரியாதை தருவதன் மூலமாகவே, பலர் மற்றவர்கள் உங்களிடத்தில் பழகுவதை விரும்புவார்கள்.


டிரெண்டிங் @ விகடன்