Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

7 வருடங்களாக காடுதான் வீடு என வாழும் ஜோடி... பொறாமைப்படாமல் இருக்க முடியுமா?

"மிரியம் ஒரு பைத்தியக்காரி..." , " அவர்கள் இருவருக்கும் புத்தி பேதலித்துவிட்டது..." தங்களின் முடிவை, தங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கு சொன்னபோது, அவர்களை இப்படித்தான் திட்டி தீர்த்தார்கள். ஆனால், இன்று வாழ்வில் ஒரு நாளாவது அவர்களைப் போல் வாழ்ந்திட மாட்டோமா? என்று உலகமே அவர்களை அத்தனை ஆச்சர்யத்தோடு பார்த்துக்கொண்டிருக்கிறது. இதுதான் இந்தக் கதையின் சாராம்சம்... இனி கொஞ்சம் முன்கதையையும், பின்னர், பின் கதையையும் பார்க்கலாம்.

காடு இவர்களின் வீடு

ஹாலந்து நாட்டில் பிறந்து வளர்ந்தவர் மிரியம் லான்ஸ்உட் ( Miriam Lancewood ). நல்லபடியாக படித்து முடித்துவிட்டு, பள்ளிக்கூடத்தில் உடற்பயிற்சி  ஆசிரியையாக வேலைக்குச் சேர்கிறார். வேலைக்குச் சென்று பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியமில்லா குடும்பம்தான். ஆனால், மிரியத்துக்கு அப்படியிருக்கப் பிடிக்காது. அரைத்தூக்கத்தில் அவசர அவசரமாக எழுந்து, பரபரப்பாக வேலைக்குப் போய், ஏதோ ஒன்றை செய்துவிட்டு, திரும்ப வீடு திரும்பி, சாப்பிட்டு தூங்கி, எழுந்து... திரும்ப அதே காலை .. ! . இந்த வாழ்க்கை முறையில் ஏதொரு அர்த்தமும் இருப்பதாக மிரியத்துக்குத் தோணவில்லை. உலகில் எந்தவொரு கேள்விக்கும் பதில்... பயணத்தில் கிடைக்கும். இதை உறுதியாக அவர் நம்பினார். வேலையை ராஜினாமா செய்துவிட்டு, தன்னைக் கட்டி இழுத்துக் கொண்டிருந்த வேலையை பின் தள்ளிவிட்டு, முன்னோக்கிப் பயணிக்கத் தொடங்கினார்.

2010-ம் ஆண்டு இந்தியாவின் இமயமலைப் பகுதிகளில் சுற்றிக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு நாள் இரவு நேரம்... மெலிதாக பனி பொழிந்துகொண்டிருந்தது. கடுமையாக குளிரடித்துக் கொண்டிருந்தது. சாலையோரம் இருக்கும் ஒரு தட்டுக் கடையில் சாப்பிட வந்தார் மிரியம். அப்போதுதான், அங்குதான்... பீட்டரை சந்தித்தார். இருவரும் சில மணிநேரம் பேசினர். அடுத்த நாள் விடிந்ததும், பீட்டரோடு வாழக் கிளம்பிவிட்டார் மிரியம். இன்று பீட்டருக்கு வயது 63. மிரியத்துக்கு வயது 33. இருவருக்குமிடையே 30 வருட வயது இடைவெளி... 

காடு சொல்லும் வாழ்க்கை - மிரியம் மற்றும் பீட்டர்

பீட்டர் நியூசிலாந்தைச் சேர்ந்தவர். கல்லூரிப் பேராசிரியர். ஒவ்வொரு நாளும், காடுகளில் வாழ வேண்டுமென்ற தங்களின் ஆசைக் குறித்து இருவரும் பேசிக் கொண்டே இருப்பார்கள். திடீரென ஒரு நாள் அந்த முடிவை எடுத்தார்கள். " நமக்கு எதைச் செய்யப் பிடிக்கிறதோ... அதைத் தானே செய்ய வேண்டும். நாம் ஏன் அதை நோக்கி நகராமல் ஏதோ ஒன்றை செய்துகொண்டிருக்கிறோம்?". தங்களிடமிருந்த பண்ட, பாத்திரங்களை எல்லாம் மொத்தமாக விற்றனர். தங்களுக்கு அத்தியாவசியமானப் பொருள்களை 85 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெரிய பேக் பேக்கில் நிரப்பினர். 12 பக்கெட்களில் முதல் சில நாள்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களை எடுத்துக்கொண்டு நியூசிலாந்தில் இருக்கும் "'சவுத் மார்ல்பரோ" ( South Marlborough ) காட்டுக்குள் நடக்கத் தொடங்கினர். அது குளிர் காலம்... காட்டில் எப்படி வாழ வேண்டும், என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்தெல்லாம் இருவருக்கும் பெரிய அறிவெல்லாம் கிடையாது. முழுவதுமாக தங்களை இயற்கையிடம் அர்ப்பணித்துவிட்டு, இயற்கையிடமிருந்தே பாடம் கற்றுக் கொள்ளலாம் என்ற முடிவில் காட்டுக்குள் சென்று ஒரு கூடாரத்தை அமைத்தனர்.

காடுகளை நேசிக்கும் பெண்

செல்போன், கம்ப்யூட்டர், டிவி, ரேடியோ... ஏன் ஒரு கடிகாரம் கூட கிடையாது அவர்களிடம். எந்த நவீன தொழில்நுட்பமும் கிடையாது. முதல் சில நாள்கள் மிகவும் கடுமையானதாகத்தானிருந்தன.. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக அந்த வாழ்க்கைக்குள் பெரும் காதலோடு பயணிக்கத் தொடங்கிவிட்டனர். கொண்டு போன உணவுப் பொருள்கள் முழுவதும் தீர்ந்துவிட்டது. இனி வேட்டையாடித்தான் சாப்பிட வேண்டும். ஒரு கத்தி, வில் அம்பு இதுதான் மிரியத்தின் ஆயுதம். பசி... ஏதாவது சாப்பிட்டாக வேண்டிய கட்டாயம். வாழ்வில் முதன்முதலாக ஒரு ஆட்டை வேட்டையாடினார் மிரியம். வேட்டையாடியதும் அதனருகே போய் உட்கார்ந்துகொண்டு கதறியழத் தொடங்கினார். ஏனென்றால், பிறந்ததிலிருந்தே அவர் சைவம். அசைவ உணவுகளை சாப்பிட்டதே கிடையாது. ஆனா, இயற்கையின் விதி அதுதான் என்பதை புரிந்துகொண்டார். தன் முதல் வேட்டையின் நினைவாக, அந்த ஆட்டின் சிறு கொம்பினை எடுத்து தன் கழுத்தில் மாட்டிக்கொண்டார்.

காடு எனும் வீடு

தண்ணீர் வசதி, மிருகங்களின் இருப்பு, சீதோஷ்ண மாற்றங்கள் போன்றவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு இடத்திலிருந்து புலம்பெயர்வார்கள். இப்படியாக ஒரு தடவை மலை உச்சியிலிருக்கும்போது, எதிர்பாரா விதமாக கடுமையான மழை, வெள்ளம் ஏற்பட்டுவிட்டது. எங்குமே நகர முடியாமல் கூடாரத்தின் உள்ளேயே மூன்று வாரங்கள் வரை முடங்கிக் கிடந்தனர். தன் வாழ்வை முழுமையாக ரசிக்க இயற்கை தனக்கு கற்றுக் கொடுத்த நாள்கள் அவை என்று அதைக் குறிப்பிடுகிறார் மிரியம்.
இவர்கள் பெரும்பாலும் இந்திய முறை உணவுகளைத்தான் சமைத்து சாப்பிடுகின்றனர். அரிசி சோறு, குழம்பு என செய்து சாப்பிடுகிறார்கள். மாதத்திற்கொருமுறை மிரியம் காட்டிலிருந்து தன் கிட்டாரோடு வெளிவருகிறார். அந்தச் சாலையில் வரும் ஏதேனும் வண்டிகளில் லிப்ட் கேட்டு, அருகிலிருக்கும் நகரத்தை அடைகிறார். அங்கு நின்று சிறிது நேரம் கிடார் வாசித்துப் பாடல்களைப் பாடுகிறார். அதன் மூலம் வரும் பணத்தைக் கொண்டு, தனக்குத் தேவையான அரிசி மற்றும் மளிகைப் பொருள்களை வாங்கி, மாலை இருட்டுவதற்குள் கூடாரத்துக்குத் திரும்பிவிடுகிறார்.

 

 

மிரியத்தைப் பற்றியும், அவர் வாழ்வைப் பற்றியும் கேள்விப்பட்ட பதிப்பாளர் ஒருவர் அவரை அணுகி, புத்தகம் எழுதித் தருமாறு கேட்டார். "வுமன் இன் தி வைல்டர்னெஸ் " ( Woman in the Wilderness ) என்ற அந்தப் புத்தகம், சமீபத்தில் வெளியாகி உலகம் முழுக்க பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் புத்தக விளம்பரத்துக்க்காக, சமீபகாலமாக மிரியம் பல நாடுகளைச் சுற்றி வந்திருக்கிறார். அங்கு அவருக்கு 5 ஸ்டார் ஹோட்டல்களில் ரூம் என பல ஸ்டார் வசதிகள் செய்து தரப்பட்டன. இது குறித்து... " என்னை இவர்கள் இப்படி பார்த்துக்கொண்டது நன்றாகத் தானிருந்தது. ஆனால், இதெல்லாம் நிரந்தரம் அல்ல .... என் காட்டு வாழ்க்கைத்தான் என்றுமே நிரந்தரமானது. அதற்காகத்தான் என் மனம் ஏங்கிக் கொண்டிருக்கிறது..." என்று சொன்னார்.

காடு எனும் வீடு

மிரியம் மற்றும் பீட்டரின் வாழ்வைப் புரிந்துகொண்டவர்கள் சிலர் தான். பலரும் அவர்கள் வாழ்வை விமர்சிக்கின்றனர். வெளியுலகிற்கு வந்தபோது பல கடுமையான கேள்விகளை எதிர்கொண்டபோதும், சிரித்த முகத்துடனே அதற்கான பதிலை அளித்தார் மிரியம்...

" மாதவிடாய் காலத்தில் என்ன செய்வீர்கள்?" என்ற கேள்வி கேட்கப்பட்டபோது, " அங்கு ஓடும் சிறு ஓடையில் கழுவிக் கொள்வேன்..." என்றார்.

" உங்களைவிட 30 வயது மூத்தவரை கல்யாணம் செய்தது சரியா ? " என்ற கேள்விக்கு... " நாங்கள் இருவரும் பெரும் மகிழ்ச்சியோடு இருக்கிறோமே..." என்றார்.

" எதிர்காலம் ? " ... " எதிர்காலம் குறித்து நாங்கள் அதிகம் சிந்திப்பதில்லை... அது இயற்கைப் பார்த்துக் கொள்ளும். அது காட்டும் வழியில் தொடர்ந்து பயணிப்போம்..."

காடுகளை நேசிக்கும் பெண்

தற்போது மிரியமும், பீட்டரும் மற்றுமொரு பெரிய முடிவினை எடுத்துள்ளனர். பிரான்ஸிலிருந்து, இஸ்தான்புல் வரையிலான பத்தாயிரம் கிலோமீட்டரை காடு, மலைகள் வழியே நடந்து கடக்க இருக்கின்றனர். இவர்களின் வாழ்வு பலருக்கு அதிசயமாக, ஆச்சர்யமாக தெரியலாம்... சிலருக்கு மிகவும் முட்டாள்தனமானதாக இருக்கலாம். இருவருக்குமிடையிலான உறவு கொச்சையாக புரிந்துகொள்ளப்படலாம். எதுவாக இருந்தாலும், அது அவரவரின் பார்வையாக மட்டுமே இருக்க முடியும். அப்படி நினைப்பவர்களில் எத்தனைப் பேர் தங்களுக்குப் பிடித்த வாழ்வை, எந்த சமரசமும் இல்லாமல் வாழ்கிறார்கள் என்ற கேள்வியும் கேட்டுக் கொள்ளப்பட வேண்டியதுதான். ஆனால், மிரியமும், பீட்டரும் தங்களுக்குப் பிடித்த வாழ்வை யாருக்கும் எந்த தொந்தரவையும், தீங்கையும் செய்திடாத வகையில் இயற்கையின் மடியில் வாழ்ந்து வருகிறார்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close