வெளியிடப்பட்ட நேரம்: 09:06 (30/06/2017)

கடைசி தொடர்பு:09:06 (30/06/2017)

2020 க்குள் வருகிறான் குளோனிங் மனிதன்... ஆர் யூ ரெடி?

குளோனிங் மனிதன்

குளோனிங் என்றவுடன் உங்கள் நினைவுக்கு வருவது என்ன? ஜுராசிக் பார்க் தொடங்கி நிறைய ஹாலிவுட் படங்கள் மற்றும் டாலி என்றழைக்கப்படும் செம்மறி ஆடு, சரியா?  குளோனிங் பற்றிய ஆராய்ச்சிகள் உலக அரங்கில் பெரிய அளவில் இன்றும் தொடர்ந்துக் கொண்டேதான் இருக்கின்றன. டாலி தவிர காப்பிகேட் என்றழைக்கப்படும் பூனை, டியூவி என்றழைக்கப்படும் மான், ஸ்நூபி என்றழைக்கப்படும் நாய் உள்ளிட்ட பல்வேறு மிருகங்களை இதுவரை குளோனிங் முறையில் உருவாக்கியிருக்கிறார்கள்  விஞ்ஞானிகள்.

எப்படி செய்கிறார்கள் குளோனிங்?

கலவியில்லா இனப்பெருக்கம் (Asexual Reproduction) குறித்து விலங்கியல் பாடத்தில் நாம் நிறையவே படித்திருப்போம். இதுதான் குளோனிங் முறைக்கு அடிப்படை. பொதுவாக குளோனிங் மூன்று வகையில் செய்யப்படுகிறது. ஜீன் குளோனிங் (Gene Cloning), இனப்பெருக்க குளோனிங் (Reproductive Cloning) மற்றும் சிகிச்சைமுறை குளோனிங் (Therapeutic Cloning). இதில் ஜீன் குளோனிங் என்பது வெறும் ஜீன்களையும், DNA கூறுகளையும் பிரதி எடுப்பது. இனப்பெருக்க குளோனிங் என்பது ஒரு முழு மிருகத்தை அப்படியே பிரதி எடுப்பது. சிகிச்சைமுறை குளோனிங் என்பது பல்வேறு நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைமுறை.

குளோனிங் என்பது ஏதோ ஏறமுடியாத மலையளவு விஞ்ஞான கோட்பாடுகளைக் கொண்டது என்றெல்லாம் எண்ணத் தேவையில்லை. அடிப்படை அறிவியலில் அதன் எளிமையான விளக்கம் இதுதான்! இனப்பெருக்கத்திற்காக குளோனிங் செய்யப்படவேண்டிய மிருகத்திலிருந்து இரண்டு செல்கள் எடுப்பார்கள். ஒன்று முதிர்ந்த சீமாடிக் உயிரணு (Matured Somatic Cell) மற்றொன்று DNA கூறுகள் நீக்கப்பட்ட முட்டை செல் (DNA removed Egg Cell). இதில் சீமாடிக் உயிரணுவில் இருக்கும் DNA கூறுகளை முட்டை செல்லுக்குள் செலுத்தி மரபணு ஒத்த தாய் மிருகம் ஒன்றினுள் உட்பொருத்திவிடுவார்கள். அது உருவாக்கும் குட்டி, இரண்டு செல்களைத் தானமளித்த மிருகத்தைப் போன்றே இருக்கும்.

குளோனிங் மனிதன்

குளோனிங் மனிதர்கள் எப்போது வருவார்கள்?

சரி, இந்த குளோனிங் ஆராய்ச்சியின் உச்சமான மனிதர்களைக் குளோனிங் செய்வது சாத்தியமா? முன்பு கணித்ததை விட இப்போது அந்த அசாத்திய மைல்கல் எட்டிவிடும் தூரத்தில்தான் இருப்பதாகக் கூறி ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார்கள் அறிவியலாளர்கள். தற்போது சிகிச்சைமுறை குளோனிங் எனப்படும் Therapeutic Cloning கொண்டு மரபணு நோய்கள், வயதானால் வரும் தீவிர பிரச்னைகள் போன்றவற்றை சரி செய்கிறார்கள். இந்தாண்டின் தொடக்கத்தில் ஜப்பானில் ஒரு பெண்மணிக்கு வயதானவர்களுக்கு ஏற்படும் கண்தசை சீர்கேடு (Macular Degeneration எனும் பார்வை குறைபாடு) வந்தபோது அவரின் தோல் செல்கள் கொண்டே Therapeutic Cloning முறையில் விழித்திரையை சரி செய்திருக்கிறார்கள்.

‘குளோனிங்பாக்ட்ரி’ என்றழைக்கப்படும் சீனாவின் போயாலைஃப் (BoyaLife) என்ற நிறுவனம் தற்போது வீடுசார்ந்த விலங்குகள் மட்டுமல்லாது பந்தயக் குதிரைகள், மோப்ப நாய்கள் என விலங்குகளையும் தயாரிக்கும் முயற்சியில் உள்ளது. இதே முக்கியத்துவம் உலகம் முழுவதும் குளோனிங் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு இருக்கும்பட்சத்தில் 2020ம் ஆண்டுக்குள் 'குளோனிங் மனிதன்' நிச்சயம் சாத்தியம் என அடித்துச் சொல்கிறார்கள் அறிவியலாளர்கள்.

இது சாத்தியம் என்றால் மலட்டுத்தன்மை, குழந்தையின்மை போன்ற குறைகளை முழுவதுமாக இல்லாமல் செய்து விட முடியும். அப்படி செய்துவிட்டால் ஒரு குழந்தைக்கு ஒன்றிலிருந்து மூன்று பெற்றோர்கள் வரை இருக்கும் நிலை ஏற்படலாம். இது நாம் வாழும் வாழ்க்கை முறையே மாற்றிவிடக்கூடும்! அதனால் இப்போது நாம் கேட்கவேண்டிய கேள்வி குளோனிங் மனிதன் சாத்தியமா என்பதல்ல, அவனை உருவாக்கலாமா, வேண்டாமா என்பதே!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்