இந்த 3D-யை ரசிக்க கண்ணாடி தேவையில்லை... ஆச்சர்யத்தில் ஆழ்த்தப்போகும் அவதார் 2 | Avatar 2 to be shown in glasses-free 3D

வெளியிடப்பட்ட நேரம்: 10:48 (30/06/2017)

கடைசி தொடர்பு:10:48 (30/06/2017)

இந்த 3D-யை ரசிக்க கண்ணாடி தேவையில்லை... ஆச்சர்யத்தில் ஆழ்த்தப்போகும் அவதார் 2

அவதார் 2 3D

2009 ஆம் வருடம் 'அவதார்' திரைப்படம் உலகம் முழுவதும் அப்போதே 14,000 திரை அரங்குகளில் வெளியானது. அதில் அதுவரை இருந்த 3D டெக்னாலஜியை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றிருந்தார்கள் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் மற்றும் அவரது நண்பர் வின்ஸ் பேஸ். பியூசன் கேமரா சிஸ்டம் (Fusion Camera System) எனப்படும் அந்த டெக்னாலஜி ரசிகர்களைப் பரவசத்தில் ஆழ்த்த, அவதார் திரைப்படம் அன்று திரையில் காட்டியதெல்லாம் யாரும் பார்த்திராத மேஜிக்! படம் வியாபார ரீதியாக 2,788 பில்லியன் டாலர்கள் வசூலித்து பெரும் வெற்றியைப் பெற, அவதாரின் தொடர்ச்சியாக மேலும் 4 பாகங்கள் வெளியாகும் என்று 2010ஆம் ஆண்டு அறிவித்தார் கேமரூன். இந்தியாவில் அதுவரை 'டைட்டானிக்' இயக்குனர் என்றழைக்கப்பட்ட கேமரூன், அன்று முதல் ”அவதார் கேமரூன்” ஆகிப் போனார்.

இப்போது, 7 வருடங்கள் கழித்து அவதார் 2 மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் மற்ற பாகங்களையும் 3Dயில் காண இனி கண்ணாடி எதுவும் தேவையில்லை என்று அறிவித்திருக்கிறார்கள். முதல் பாகத்திலியே 3D யில் மாயாஜாலம் காட்டியவர், அடுத்து என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருந்தது. அதை பூர்த்திசெய்யும் வகையில் வந்துள்ளது இந்த அறிவிப்பு!

எப்படி இது சாத்தியம்?

பெரும்பாலும் 3Dயில் படம் பார்ப்பது அனைவருக்கும் பிடித்த ஒரு விஷயமாகவே இருந்தாலும் சிலருக்கு அந்த 3D கண்ணாடி ஓர்  உறுத்தல்தான். அதிலும் ஏற்கெனவே கண்ணாடி அணிந்துகொண்டிருப்பவர்கள், இந்த 3D கண்ணாடியையும் சேர்த்து அணிந்துகொண்டு படத்தைப் பார்ப்பதைப் பெரும் தலைவலியாகக் கருதினர். இதற்கு விடைகாணப் போகிறது இந்த டெக்னாலஜி.

அவதார் 2 3D

கேமரூனின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான லைட்ஸ்டார்ம் என்டெர்டெயின்மென்ட் (Lightstorm Entertainment) கலிபோர்னியாவில் உள்ள கிறிஸ்டி டிஜிட்டல் (Christie Digital) என்ற நிறுவனத்துடன் கைகோத்து இந்த ஆராய்ச்சியில் கடந்த 5 வருடங்களாக ஈடுபட்டு வந்தது. இதன் விளைவாக கிறிஸ்டி டிஜிட்டல் நிறுவனம் தற்போது தயாரித்துள்ள புரட்சிகரமான RGB லேசர் புரொஜெக்ஷன் சிஸ்டம் மூலம் கண்ணாடிகள் இல்லா 3D சாத்தியமாகும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய டெக்னாலஜி மிகவும் பிரகாசமான படங்களை அதிக பிரேம் ரேட்டில் (Frame Rate) வெளியிடுவதால் தெள்ளத்தெளிவான காட்சிகளைக் கண்ணாடிகள் இல்லாமலே 3D தரத்தில் கண்டுகளிக்க முடியும்.

இது குறித்து, கிறிஸ்டி டிஜிட்டலின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜாக் க்ளீன் (Jack Kline) பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, "இந்த 3D புரொஜெக்ஷன் டெக்னாலஜி மட்டுமல்ல, இதைத்தவிர நாங்கள் கண்டுபிடிக்கப் போகும் அனைத்து விஷயங்களையும் கேமரூன் அவர்களின் லைட்ஸ்டார்ம் நிறுவனத்துடன் பகிர்ந்துகொள்ளத் தயாராக உள்ளோம். அவதார் முதல் பாகத்தைப் போன்றே அதன் அடுத்தடுத்த பாகங்களும் மிகப்பெரிய வெற்றிகளைப் பெரும்!"

நடைமுறைச் சிக்கல்கள்

இது ஒருபுறமிருக்க, இந்த புது டெக்னாலஜி வரும்பட்சத்தில் அதை நிறுவுவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். காரணம் அவதார் 2 வை இந்த நவீன தொழில்நுட்பத்துடன் திரையிட உலகெங்கும் உள்ள அனைத்து திரையரங்குகளும் தங்கள் புரொஜெக்டர், திரை உட்பட அனைத்தையும் மாற்ற வேண்டியிருக்கும். இது யாரும் கண்டிராத தொழில்நுட்பம் என்பதால் அதற்கான செலவுகள் மிகவும் அதிகம் என்று கூறப்படுகிறது. என்றாலும் அவதார் 2 வெளிவர இன்னும் 3 ஆண்டுகள் (டிசம்பர் 18, 2020) இருப்பதால் அதற்குள் இந்தத் தொழில்நுட்பத்தை உலகெங்கும் கொண்டு செல்ல சீரிய முயற்சிகள் பல மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்