Published:Updated:

இருளர் சமூகத்துக்கு வெளிச்சம் தந்த துளசி... காட்டுக்குள் இருந்து ஒரு டாக்டர்!

இருளர் சமூகத்துக்கு வெளிச்சம் தந்த துளசி... காட்டுக்குள் இருந்து ஒரு டாக்டர்!
இருளர் சமூகத்துக்கு வெளிச்சம் தந்த துளசி... காட்டுக்குள் இருந்து ஒரு டாக்டர்!

கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அட்டப்பாடி பகுதி, சற்று வித்தியாசமானது. கோவை மாவட்டத்தில் தமிழக எல்லைப் பகுதியான ஆனைக்கட்டியையொட்டி அமைந்திருக்கும் இங்கு, தமிழ் பேசும் ஆதிவாசி இன மக்கள் நிறைந்துள்ளனர். ஒருகாலத்தில் கள்ளச்சாராயமும் கள்ளும் மதுவும் ஆறாக ஓடியப் பகுதி. தமிழகத்தில் டாஸ்மாக்குக்கு எதிராக பெண்கள் கிளர்ந்தெழுவதுபோல, அட்டப்பாடி பகுதியில் மதுவுக்கு எதிராக பெண்கள் பெரும் போராட்டம் நடத்தினர். அந்த அளவுக்குக் குடித்துக் குடித்தே செத்த மக்கள் இங்கு ஏராளம். அதனால் அட்டப்பாடி பகுதியில் மட்டும் கேரள அரசு மதுவுக்குத் தடை விதித்தது. 

இங்குதான் புகழ்பெற்ற `சைலன்ட் வேலி' தேசிய பூங்கா அமைந்துள்ளது. பவானி ஆறு, அட்டப்பாடி வழியாகத்தான் தமிழகத்துக்குள் நுழைகிறது. வெள்ளந்தி மனிதர்கள் நிறைந்த இந்த பூமியில், சாமியும் ( யானை) காடும் மட்டும்தான் தெரியும். காடுதான் இவர்களின் வாழ்வாதாரம். அப்படிப்பட்ட பகுதியிலிருந்து அதுவும் இருளர் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மருத்துவராகிச் சாதித்துள்ளார். 

அட்டப்பாடி பகுதியில், ஆதிவாசி மக்களில் பல பிரிவினர் வசித்துவருகின்றனர். கேரளத்தில் 1995-ம் ஆண்டு கமலாக் ஷி என்கிற ஆதிவாசி பெண் முதன்முறையாக டாக்டர் ஆனார். அட்டப்பாடியைச் சேர்ந்த `முதுகா' என்கிற பிரிவைச் சேர்ந்தவர் அவர். அவருக்குப் பிறகு 22 ஆண்டுகளாக அட்டப்பாடியால் இன்னொரு பெண் கழுத்தில் ஸ்டெதஸ்கோப்பை மாட்டிப்பார்க்க முடியவில்லை. அட்டப்பாடியில் அதிகமாக வசிக்கும் இருளர் மக்களில் எவரும் டாக்டர் ஆனதில்லை. அந்தக் குறையைத் தீர்த்துவைத்திருக்கிறார் துளசி. அதுவும் 12-ம் வகுப்பு வரை தமிழ் மீடியத்தில் படித்து, கேரள மக்களை வியக்கவைத்துள்ளார்.  

துளசியின் தந்தை முத்துசாமி விவசாயி. தாயார் காளியம்மா காடுகளில் சுள்ளி பொறுக்குபவர். துளசி குடும்பத்துக்கு, அட்டப்பாடியில் பத்து ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. விவசாயத்துக்குப் பெரிய அளவில் பலன் தராத பூமி அது. கேரளத்தைப் பொறுத்தவரை, அட்டப்பாடி நம்ம ஊர் ராமநாதபுரம் மாதிரி. அதாவது பனிஷ்மென்ட் ஏரியா. இங்கு டாக்டராகப் பணியாற்ற யாருமே முன்வர மாட்டார்கள். வந்தாலும் விரைவிலேயே மாற்றல் வாங்கிக்கொண்டு ஓடிவிடுவார்கள். இங்கு பாம்புக் கடியால் இறப்போர் அதிகம். மருத்துவ வசதி கிடைக்காமல் கர்ப்பிணிப் பெண்கள் வீட்டுக்கு ஒருவர் இறந்திருப்பார்கள். 

இத்தகைய துயரங்களைப் பார்த்துப் பார்த்தே வளர்ந்த  துளசிக்கு, டாக்டராக வேண்டும் என்ற வெறி மனதுக்குள் ஊறிப்போனது. அட்டப்பாடி  `அகழி'யில் உள்ள அரசுப் பள்ளியில் ப்ளஸ் டூ வரை படித்தார்.  ப்ளஸ் டூ முடித்த பிறகு, எந்த கோச்சிங்கும் இல்லாமல் நேரடியாகவே எம்.பி.பி.எஸ் மற்றும் கால்நடை மருத்துவத்துக்கான நுழைவுத்தேர்வு எழுதினார். அந்தச் சமயத்தில் கேரளத்தில் 13 ஆயிரம் பேர் மருத்துவ நுழைவுத்தேர்வு எழுதினர். துளசிக்கோ முதன்முறை தோல்வியே கிட்டியது. ஆனால், ஒரு பாடம் கிடைத்தது. அதாவது, கோச்சிங் எடுக்க வேண்டும் என்கிற விஷயம் துளசிக்குத் தெரியவந்தது. 

அடுத்த முறை நகரவாசிகள்போலத் திட்டமிட்டுப் படித்தார். அட்டப்பாடி பகுதியில் சற்று பெரிய நகரம் என்றால் சைலன்ட் வேலிக்குப் பக்கத்தில் உள்ள மன்னார்காடுதான். நல்லவேளையாக அங்கே ஒரு கோச்சிங் சென்டர் இருந்தது. அதில் சேர்ந்து பயிற்சி பெற்றார். இந்த முறை எழுதிய தேர்வில் எஸ்.டி பிரிவில் 17-வது ரேங்கில் வெற்றிபெற்றார். திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் டாக்டருக்குப் படிக்க இடம் கிடைத்தது. அட்டப்பாடியோ ஊருக்குள் கார் சென்றால்கூட பின்னாலேயே ஓடும் சிறுவர்கள் நிறைந்த பகுதி. திருவனந்தபுரமோ... மிகப்பெரிய நகரம்.

ஆனாலும் நகர வாழ்க்கை துளசியை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி எம்.பி.பி.எஸ் பட்டமும் பெற்றுவிட்டார். `டாக்டர் ஆன இருளர் இனத்தைச் சேர்ந்த முதல் பெண்' என்கிற பெருமையும் அவருக்குக் கிடைத்துள்ளது. துளசிக்கு இரு கனவுகள். ஒன்று, அறுவைசிகிச்சை நிபுணர் ஆவது. மற்றொன்று, சாகும் வரை அட்டப்பாடியிலேயே மருத்துவச் சேவை புரிவது. `இந்த இரண்டுமே என் கண்கள் ' எனக் கூறும் அவரின் கழுத்தில் இப்போது 'ஸ்டதெஸ்கோப்' தொங்கிக்கொண்டிருக்கிறது!

Photo Courtesy: Manorama