Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கையில் நயா பைசா இல்லாமல் அன்ஷ் மிஷ்ரா இந்தியா முழுக்க சுற்றிய கதை!

அன்ஷ் மிஷ்ரா, தான் பிறந்த ஊரான அலஹாபாத்தில் இருந்து கிளம்பி இன்றோடு(ஜூலை 3) 150 நாள் நிறைவடைந்துள்ளது. ‘சரி; அதுக்கென்ன இப்போ?’ என்பவர்கள் தொடர்ந்து படித்தால், ‘நம்ப முடியலையே... எக்ஸெலன்ட்... வாழ்த்துகள்... எங்க வீட்டுக்கு வந்து ரெண்டு நாள் ஸ்டே பண்ணிட்டுப் போங்க’ என்று கமென்ட் தெளிக்க ஆரம்பித்து விடுவீர்கள்.

 

கேமரா, லேப்டாப், மொபைல் போன், நான்கைந்து செட் ஆடைகள், ஷூ, ஒரு டிராவல் பேக் - சத்தியமாக இது மட்டும்தான் அன்ஷ் மிஷ்ரா கிளம்பும்போது எடுத்து வந்தவை. கையில் ஒரு ரூபாய்கூடக் கிடையாது. ஆனால், அலஹாபாத் வழியாக குஜராத், ராஜஸ்தான், ஜெய்சால்மர், வயநாடு, கேரளா, பெங்களூரு என்று செம டூர் அடித்துக் கொண்டிருக்கிறார். 

அன்ஷ் மிஸ்ராஅன்ஷ் மிஷ்ரா

நீங்கள் நினைப்பதுபோல் இந்தப் பயணம் எல்லாமே முன்கூட்டியே டிக்கெட்கூஸ்.காமிலோ, ரயிலிலோ முன்பதிவு செய்துவிட்டு, வயிறு முட்டச் சாப்பிட்டு விட்டு தொடர்கிற பயணம் இல்லை. எல்லாமே லிஃப்ட்தான். அங்கங்கே கிடைக்கும் உணவுப் பொருள்கள்தான் சாப்பாடு. நடுரோட்டில் நின்று கையை ஆட்டி லாரியிலோ, பைக்கிலோ, காரிலோ லிஃப்ட் கேட்டுத்தான் இத்தனை தூரம் வந்திருக்கிறார். பிச்சைக்காரன் படத்தில் வரும் விஜய் ஆண்டனிபோல், கையில் நயா பைசாகூட இல்லை; அப்புறம் சாப்பாடு எல்லாம் எப்படி?

‘‘சாப்பாடு எல்லாம் டெய்லி கிடைக்கும்னு சொல்ல முடியாது. ஆனா, நான் சந்தோஷமா இருக்கேன்!’’ என்று கன்னியாகுமரிக்குச் செல்வதற்காக லிஃப்ட் கேட்டு நடுரோட்டில் நின்றுகொண்டிருந்தவரை சென்னை பைபாஸில் மடக்கினோம். ‘‘எதுக்கு இந்தப் பயணம்? கைல காசு இல்லாம இவ்வளவு தூரம் எதுக்கு வரணும்? ஏதேனும் வேண்டுதலா?’’

traveller

அன்ஷ் மிஷ்ரா, பிறப்பிலேயே பணக்காரர். வளர்ந்தவுடன் மாடலானார். பி.எட் பட்டப்படிப்பை முடித்து ஒரு தனியார் நிறுவனத்தில் கை நிறைய சம்பாதித்தவருக்கு, திடீரென அந்த யோசனை வந்தது. ‘காசு இருந்தால்தான் இந்த உலகத்தில் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா?’ 

‘‘இந்த உலகத்தில் பணம்தான் எல்லாத்தையும் முடிவு பண்ணுதுனு ஒரு பேச்சு இருக்கு. பணத்தால எது வேணாலும் வாங்கலாம். ஆனால் ஜாலியை வாங்க முடியாது. அதை நிரூபிக்கத்தான் இந்தப் பயணம். அதுக்காகவே நான் பார்த்துக்கிட்டிருந்த வேலையை விட்டேன். ‘எல்லோரும் லூசு பிடிச்சுடுச்சா’னு திட்டினாங்க. வீட்ல அம்மாகூட ரொம்ப வருத்தப்பட்டாங்க. பணம் இல்லாமலும் இந்த உலகத்துல ஜாலியா இருக்கலாம். இந்த உலகம் அன்பால் நிறைந்ததுனு எடுத்துக்காட்டத்தான் வீட்ல இருந்து பிப்ரவரி 3-ம் தேதி கிளம்பினேன்’’ என்று அசால்ட்டாகச் சொல்கிறார் அன்ஷ் மிஷ்ரா.

சாதாரணமாக சொந்த ஊருக்கு லிஃப்ட் கேட்டாலே, ஒரு மாதிரி பார்ப்பார்கள். அலஹாபாத்தில் இருந்து பென்ஸ் முதல் சைக்கிள் வரை எல்லாவற்றிலும் லிஃப்ட் மூலமாக மட்டுமே சென்னைக்கு வந்திருக்கிறார் அன்ஷ் மிஷ்ரா. இருந்தாலும், அவருக்கு அதிகமாக லிஃப்ட் கொடுத்து உதவியது லாரி டிரைவர்கள்தானாம். ‘‘எனக்கு லாரி டிரைவர்கள் மேல் ஒரு நல்ல மதிப்பு வந்திருக்கு. இந்தியப் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்துவதில் ட்ரக் டிரைவர்கள்தான் ஹீரோன்னு சொல்லுவேன். எனக்கு லிஃப்ட் கொடுத்ததுக்காக மட்டும் இதைச் சொல்லலை. அவங்க படும் கஷ்டங்கள் இந்த நெடுஞ்சாலை வாழ்க்கையில்தான் எனக்குத் தெரிஞ்சது. நான் பாதி தூரம் வந்ததே லாரியில்தான். ஒரு தடவை இரண்டரை நாள் எதுவும் கிடைக்காம சாப்பிடாமலே நடந்துக்கிட்டு இருந்தேன். அப்போ எனக்கு அன்பா சாப்பாடு சமைச்சுக் கொடுத்து கிட்டத்தட்ட 500 கி.மீ வரை எனக்கு லிஃப்ட் கொடுத்து உதவியது லாரி டிரைவர்கள்தான்’’ என்று சொல்லும் அன்ஷ் மிஷ்ரா, தங்குவதற்கு என்று எதையும் தேடிப் போவதில்லை. செல்லும் வழியில், நெடுஞ்சாலையிலோ, கோயில் வாசலிலோ காட்டில் குட்டியாய் டென்ட் அடித்தோ தங்கிக் கொள்வாராம்.

traveller

சும்மா ‘பயணம்’ என்றாலே எக்கச்சக்க அனுபவங்கள் கிடைக்கும். அன்ஷ், பர்ஸ் இல்லாமல் ‘சும்மாவே’ பயணிக்கிறார். அனுபவம் இல்லாமலா இருக்கும். கேரள மாநிலம் வயநாட்டில், நட்ட நடு ராத்திரியில் இவர் தங்கும்போது விலங்குகளிடம் இருந்து தப்பித்தது, போலீஸ் வளையத்திடம் இருந்து தப்பித்தது, குஜராத்தில் மிகப் பெரிய டவரில் ஏறி மூச்சுத் திணறியது என்று பல சிலீர் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். காட்டுக்கு நடுவில் செல்ஃபி ஸ்டிக் மூலம் மொபைல்போனில் படம் எடுத்துக் கொண்டிருந்ததை, துப்பாக்கி வைத்திருக்கும் வேட்டைக்காரன் என்று தவறாக நினைத்து கேரள போலீஸ் சுற்றிவளைக்க... தீவிரவாதியின் விசாரணை வளையத்துக்குள் சிக்கித் தப்பித்த அனுபவமெல்லாம் மறக்கவே முடியாதது என்று சொன்னார் அன்ஷ் மிஷ்ரா. 

இதுவரை 2 யூனியன் பிரதேசங்களையும், 8 மாநிலங்களையும் இந்த 150 நாள்களில் கடந்துவிட்டார் அன்ஷ் மிஷ்ரா. ஒவ்வொரு மாநிலத்திலும் இவரைப் பற்றிக் கேள்விப்பட்டு அந்தந்த ஏரியாவில் இருப்பவர்கள், இப்போது இலவசமாக தங்கும் இடம், சாப்பாடு எல்லாம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். அப்படித்தான் சென்னையில் ஒரு நண்பர் வீட்டில் தங்கி, இப்போது கன்னியாகுமரிக்குக் கிளம்பி விட்டார். ‘‘இவ்வளவு அன்பு நிறைந்த உலகத்தில் நாம்தான் பணத்துக்காக அலைந்து கொண்டிருக்கிறோம்! என்னிடம் சுத்தமாகப் பணம் இல்லை. ஆனால், இந்த உலகத்திலேயே சந்தோஷமானவன் நான்தான்’’ என்று தத்துவக் குத்து குத்தும் அன்ஷ், ‘வறுமையின் நிறம் சிவப்பு’ கமல்போல் ஒரு ஆப்பிள், மூன்று பன், பிஸ்கட் பாக்கெட் என்று பல நாள்கள் ஓட்டியிருக்கிறாராம். அன்ஷ்ஷிடம் இருக்கும் ஒரு குறிக்கோள்: ‘சாப்பாடு கொடுங்க’ என்று யாரிடமும் கேட்டதில்லையாம்.

கன்னியாகுமரியில் இருந்து மேலும் ஒரு திட்டம் வைத்திருக்கிறாராம் அன்ஷ். அதாவது, அந்தமானுக்கு லிஃப்ட் கேட்டே போவது. சிலர் அந்தமானுக்கு விமான டிக்கெட் எடுத்துத் தருவதாகச் சொல்லியும் அதை மறுத்துவிட்டாராம் அன்ஷ். அப்புறம் எப்படி? வான் பயணத்தைத் தாண்டி, அந்தமானுக்குச் சாலைகள் இல்லை; அதனால் கப்பலில்தான் லிஃப்ட் கேட்டாக வேண்டும். ‘‘எப்படியும் அந்தமான் போயிட்டுத்தான் அலஹாபாத் போவேன். எத்தனை நாள்களானாலும் பரவாயில்லை’’ என்று பை பை சொல்லிவிட்டு, பைக்கில் லிஃப்ட் கேட்டுக் கிளம்பிவிட்டார் அன்ஷ் மிஷ்ரா. கப்பல்ல லிஃப்ட் கேட்டுப் போற முதல் ஆள் அன்ஷ்தான்.

கையில் காசு இல்லையென்றால், மூஞ்சியை சிடுசிடுவென வைத்திருப்பவர்களுக்கு அன்ஷ் மிஷ்ரா சொல்வது இதுதான்: "சந்தோஷமாக இருப்பதற்குக் காசு பணம் தேவையில்லை!" 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement