வெளியிடப்பட்ட நேரம்: 07:44 (04/07/2017)

கடைசி தொடர்பு:10:38 (04/07/2017)

பிசினஸ் செய்பவர்கள் அவசியம் படிக்க வேண்டிய 5 புத்தகங்கள்!

"எவ்வளவு நாள்தான் வேலையே செஞ்சிட்டிருக்கிறது , நாமும் காலாகாலத்துல ஒரு பிசினஸ் ஆரம்பிச்சு ஓஹோன்னு சூரியவம்சம் சரத்குமார் மாதிரி வளர்ந்துடணும்...." - இதுதாங்க பெரும்பாலானவங்க மைண்ட் வாய்ஸ். 

பிசினஸ்

எல்லோருக்கும் வாழ்க்கையில் பெரிய அளவில் உயர வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. சிலர் தாங்கள் பணிபுரியும் துறைகளில் ஜாம்பவான்களாக இருந்து அந்த உயரத்தை அடைவார்கள். ஆனால் எல்லோருக்கும் அது சாத்தியமாகாது. ஆனால் பிசினஸ் மூலம் ஒருவர் தான் நினைத்த உயரத்தைப் பொருளாதார ரீதியில் நிச்சயம் அடைய முடியும். 

ஆனால் ஒரு பிசினஸை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி உச்சத்தை அடைவது அவ்வளவு சாதாரண காரியமல்ல. அதற்கு நம்முடைய பிசினஸ் மாடல், நம்முடைய மனநிலை, சாதகமான சூழல், உறுதுணையான உறவுகள், சிறப்பான குழு ஆகியவை நிச்சயம் அவசியம். இவையனைத்தையும் பெறுவதற்கு நாம் முதலில் இவற்றைப் பற்றி ஒரு தெளிவுக்கு வரவேண்டும். அப்படி பிசினஸ் குறித்து ஒரு தெளிவுக்கு வர இந்த 5 புத்தகங்களைப் படித்தால் நிச்சயம் உதவியாக இருக்கும்.

1. Be a Brilliant Entrepreneur

அலெக்ஸ் மெக்மில்லன் எழுதிய இந்தப் புத்தகம் ஒருவர் தொழில்முனைவோராக ஆக விரும்பினாலும் ஆக விடாமல் தடுப்பது எது என்பதைப் பற்றி பேசுகிறது. பிசினஸ் ஆரம்பிக்க முடியாமல் போவதற்கு காரணம் பணமில்லாமையோ, ஐடியா இல்லாமல் போவதோ இல்லை. மாறாக மனதளவில் உறுதியாகத் தீர்மானிக்காததே காரணம். நம்முடைய நோக்கம் என்ன என்பதில் தெளிவு இருந்தால் நம்முடைய முடிவிலும் குழப்பம் இருக்காது. 

தொழில்முனைவோர்கள் எப்போதும் யாராலும் கண்டுபிடிக்க முடியாத தொழில் வாய்ப்புகளைக் கண்டுபிடிப்பவர்களாக இருக்க வேண்டும். எதைச் செய்தால் எவ்வளவு லாபம் பார்க்கலாம் என்பதைத் தெரிந்திருக்க வேண்டும். ஒருபோதும் எடுக்கும் முயற்சிகள் தோற்றுவிடுமோ என்ற பயம் இருக்கக் கூடாது. எதையுமே பாசிட்டிவாகப் புரிந்துகொள்ள முயற்சி செய்யவேண்டும். இப்படி ஆரம்பக்கட்ட தொழில்முனைவோர்களுக்கு பல முக்கியமான விஷயங்களை இந்தப் புத்தகத்தைப் படிப்பதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.   

2. The Power of Less: The 6 Essential Productivity Principles That Will Change Your Life

இந்தப் புத்தகத்தை எழுதியவர் லியோ பாபெளட்டா (Leo Babauta). இந்தப் புத்தகம் நம்முடைய வாழ்க்கையை மாற்றும், உற்பத்தியைப் பெருக்கும் 6 முக்கியமான கொள்கைகளைப் பற்றி பேசுகிறது. உற்பத்தியைப் பெருக்க ஒரு சிம்பிள் வழி எந்த ஒரு விஷயத்திலும் நம்முடைய மனமும், உடலும் ஆரோக்கியமாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான். 

அன்புக்குரியவர்களை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒருவித கடுப்பான உணர்வுடன் பரபரப்பாக நாம் செய்யும் எந்தச் செயலும் நமக்குப் பலனையோ மகிழ்ச்சியோ தராது. அப்படி இருக்காமல் மகிழ்ச்சியாக நாம் நம் வாழ்க்கை வழிநடத்திச் செல்வது என்பதுதான் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது. அதற்கான உதவியை இந்தப் புத்தகம் நமக்கு வழிகாட்டுகிறது.   

இந்தப் புத்தகம் சொல்லும் சில முக்கியமான கொள்கைகள்: 1. எல்லைகளை வகுத்துக் கொள்ளுதல் 2. இன்றியமையாத விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துதல். 3. தேவையற்றவற்றை கைவிடுவது. 4. படிப்படியான வளர்ச்சியில் கவனம்

3. Dance with Chance

இந்தப் புத்தகத்தை ஸ்பைரோஸ் மகிர்டாகிஸ், ராபின் ஹாக்ராத் மற்றும் அனில் காபா (Anil Gaba, Robin M Hogarth and Spyros Makridakis) ஆகியோர் இணைந்து எழுதியிருக்கிறார்கள். நமக்கான வாய்ப்புகளைச் சரியாக அடையாளம் கண்டு அவற்றை அள்ளிவிடுவதுதான் வளர்ச்சிக்கான அடிப்படை. ஏனெனில் அதிர்ஷ்டம் எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாது. எனவே சரியான நேரத்தில் சரியான முடிவெடுக்க வேண்டும். நாம் எடுக்கும் முடிவுகள்தான் நம்முடைய வாழ்க்கையாக இருக்கும். அப்படிப்பட்ட முடிவுகளை எடுக்க இந்தப் புத்தகம் உறுதுணையாக இருக்கும். 

4. The Only Sales Guide You’ll Ever Need

இந்தப் புத்தகத்தின் ஆசிரியர், அந்தோணி ஐயனாரியோ (Anthony Iannarino). பிசினஸில் மிக முக்கியமான விஷயம் விற்பனை. விற்பனையை அதிகரித்தால்தான் நம்மால் பிசினஸை வளர்க்க முடியும். இந்தப் புத்தகம் விற்பனை அதிகரிப்பதற்கான வழிகளை உங்களுக்குக் காண்பிக்கிறது. நம்முடைய நம்பிக்கையும் அணுகுமுறையும்தான் விற்பனையின் பலம்.  எப்படி வாடிக்கையாளர்களிடம் சுலபமாக விற்பனை செய்வது, விற்பனையில் உள்ள சூட்சுமங்கள் என்னென்ன, புதிய வாடிக்கையாளர்களைக் கவர்வது எப்படி, விற்பனை செய்யும்போது எப்படிப்பட்ட மனநிலையில் செயல்பட வேண்டும் என்பதையெல்லாம் இந்தப் புத்தகம் சொல்கிறது. 

5. Rich Dad Poor Dad

இந்தப் புத்தகம் ராபர்ட் கியோசகி மற்றும் ஷரோன் லேச்சர் ஆகிய இருவரும் இணைந்து எழுதியது. இந்தப் புத்தகம் தமிழிலும் ‘பணக்காரத் தந்தை, ஏழை தந்தை’ என்ற தலைப்பில் வெளியாகி உள்ளது. இந்தப் புத்தகம் நிதி, பணம், முதலீடு, சொத்து என பல்வேறு விஷயங்களை இருவேறு பார்வையில் அலசுகிறது. வாழ்க்கையில் முன்னேற நமக்கு முன்னே இருப்பவர்களை முன்னுதாரணமாகப் பார்க்கவேண்டுமே தவிர நமக்கும் கீழே இருப்பவர்களை அல்ல. இந்தப் புத்தகம் பணத்தின் மீதான பார்வையையே மாற்றிவிடும் மிக முக்கியமான புத்தகம். பணம் சம்பாதிப்பதும், சொத்து சேர்ப்பதும் தவறல்ல. அதனால் அந்தப் பணமும், சொத்தும் எத்தனை பேருக்கு பலனளிக்கிறது என்பதில்தான் நல்லதுக்கும் கெட்டதுக்கும் இடையிலான வித்தியாசமே இருக்கிறது.

நல்ல புத்தகங்கள் எப்போதும் நல்லதையே கொடுக்கும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்