டெக்னாலஜி விஷயத்தில் அமெரிக்காவை முந்திய இந்தியா... டிஜிட்டல் இந்தியா பிறந்துவிட்டதா?

டெக்னாலஜி இந்தியா

கையில் ஸ்மார்ட்போன் இருக்கிறதல்லவா? எப்படி இல்லாமல் இருக்கும்? சரி, அதில் கூகுள் பிளேஸ்டார்-க்கு (Play Store) விரைந்திடுங்கள். சாப்பிட ஆர்டர் செய்ய, மளிகைப் பொருள்கள் வாங்கிட, சினிமா டிக்கெட் முன்பதிவு செய்ய, பல்வேறு மொழிகளில் பாடல்கள் கேட்க, திரைப்படங்கள் பார்க்க, புத்தகங்கள் படிக்க என இன்னும் பல்வேறு பணிகளின் சுமையைக் குறைத்திடும் முனைப்பில் நிறைய ஆப்களை (Apps) அங்கே காணமுடியும். பரபர நகரத்திலிருக்கும் பெரிய கடைகள் முதல் சிறிய கடைகள் வரை அனைத்து வகையான வியாபாரிகளும் பல்வேறு டெக்னாலஜிகள் உதவியுடன் பிளேஸ்டோரை ஆக்கிரமித்திருக்கிறார்கள். இது போக தனிப்பட்ட முறையில், வாடிக்கையாளர்களையும், வணிகஸ்தலங்களையும் இணைக்க உதவிடும் வகையில் நிறைய ஆப்களைப் பார்த்திட முடியும்.

அசத்தல் ஆஃபர்கள், நம்பகமான சேவை எனக் கருத்துடன் செயல்படும் இவ்வகை ஆப்களுக்கு இதுதான் தொழிலே! உதாரணமாக, உங்களுக்குப் பிடித்தமான பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்திட RedBus, பிடித்த உணவகங்களில் ஆர்டர் செய்திட Zomato, பிடித்த திரையரங்கங்களில் சினிமா டிக்கெட் வாங்கிட BookMyShow என அனைத்து தேவைகளுக்கும் இன்று ஆப்கள் உண்டு. மிகப்பெரிய சாம்ராஜ்யமான இதில் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்தி திரும்பத் திரும்ப வர வைப்பதே இவர்களின் தலையாய கொள்கை! இன்றைய டிஜிட்டல் இந்தியாவில், டெக்னாலஜியைப் பயன்படுத்தி முன்மாதிரியாக வரும் இத்தகைய நல்ல பரிசோதனை முயற்சிகளுக்கு, மக்களின் ஆதரவு என்றுமே இருக்கத்தான் செய்கிறது. இந்த உண்மையை மேலும் பறைசாற்றும் விதமாக வந்திருக்கிறது அமெரிக்காவில் நடத்திய இந்த ஆய்வின் முடிவுகள்!

யுனைடெட் ஸ்டேட்ஸில் (US) இயங்கும் கிளவுட் கம்ப்யூட்டிங் நிறுவனம் ஒன்று நடத்திய “Innovation: All Eyes on Asia” என்ற ஆய்வின் படி, வாடிக்கையாளர்களை டெக்னாலஜியின் உதவியுடன் தக்கவைப்பதில் கில்லாடியாக இருப்பது ஆசிய நாடுகள் தானாம். அதுவும் அதில் இந்தியாவிற்கே முதலிடம்! அந்த ஆய்வின் அறிக்கைப்படி ஆசியாவில் 70 சதவீத நிறுவனங்கள் டெக்னாலஜியின் உதவியுடன் வாடிக்கையாளர்களைத் தக்கவைப்பதில் முனைப்புடன் செயல்படுகிறது. அந்த 70 சதவீதத்தில், 53 சதவீத நிறுவனங்கள் புதிதாக வந்திருக்கும் ஏதாவதொரு டெக்னாலஜியை இதற்காக பயன்படுத்தத் தயங்குவதே இல்லையாம்! ஆனால் அத்தனை பேசப்படும் அமெரிக்காவில் இது வெறும் 64% மட்டுமே.

டெக்னாலஜி இந்தியா

ஆசியாவிலேயே உச்சமாக, இந்தியாவில் 90 சதவீத நிறுவனங்கள் ஏதாவதொரு புது டெக்னாலஜியைப் பயன்படுத்தித் தங்கள் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள். இந்தியாவிற்கு அடுத்ததாக மற்ற ஆசிய நாடுகள் வியட்நாம் (85%), பிலிப்பைன்ஸ் (84%), தாய்லாந்து (84%) மற்றும் இந்தோனேஷியா (83%) அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளது. இந்த அனைத்து நாடுகளும் வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மை (CRM) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தி வாடிக்கையாளர்களைக் கவரும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்கள். இதுபோக விர்ச்சுவல் ரியாலிட்டி (Virtual Reality), இ-காம் மொபைல்ஆப்கள் (Mobile eCom Apps), பீகன் டெக்னாலஜி (Beacon Technology) என அனைத்தையும் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறார்களாம் முதலீட்டாளர்கள் மற்றும் வியாபாரிகள். இவை அனைத்தும் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்ள மட்டும்! இப்படிப்பட்ட நவீன டெக்னாலஜிகளை உருவாக்கும் நாடுகள் பட்டியலில் ஜப்பான், கொரியா மற்றும் சீனா முன்னணி வகிக்கிறது.

இந்த ஆய்வின் முடிவுகள் இப்படி இருந்தாலும், உலகின் மொத்த மக்கள் தொகையில் 59% சதவீதத்தை தன்னுள் அடக்கிக்கொண்ட ஆசிய கண்டம் முதல் இடம் பிடிப்பதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது என்பது போன்ற விமர்சனங்களும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால், இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. இந்தியாவில் டெக்னாலஜிக்கும், நவின முயற்சிகளுக்கும் என்றுமே வரவேற்பு உண்டு என்பதே! புதிதாகத் தொழில் தொடங்க இருப்பவர்களுக்கு இது ஒரு நற்செய்தி!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!