Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இலக்கியத்தின் மகிழ்ச்சியான தொன்மம் வைக்கம் முகமது பஷீர்! - நினைவுதினப் பகிர்வு

பஷீர்

“முன்னொரு காலத்தில் குறிப்பிட்டுச் சொல்லிக்கொள்ளத் தாய் தந்தை யாருமில்லாத ஒரு இளைஞன் வாழ்ந்து வந்தான். அவன் நிறைய கொலை பாதகங்களைச் செய்தவன். தனது இருபத்து நான்காவது வயதில் அவன்...”

“இடையிலே ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்திக்கிறேனே, நீங்க கதையைத் தொடங்கிவிட்டீர்களா?”

“ஆமாம்!”

“சரி இப்போ நீங்க சொல்லப்போறது யாரைப் பற்றி?”

“என்னைப் பற்றித்தான்!”

“அது சரி.”

“கதையை எங்கிருந்து வேண்டுமானாலும் தொடங்கலாம் என்று நீங்கள்தானே சொன்னீர்கள்?”

“ஆமாமா, நான் அதை அவ்வளவு முக்கியமா நினைக்கலே. அப்புறம், நான் என்ன நினைச்சேன்னா... நீங்க ஒரு...”

“பைத்தியக்காரன் என்று.?”

“உண்மையாகவே கேட்கிறேன். உங்க உடம்புக்கு இப்போ என்ன செய்யுது?”

“பைத்தியம்தான். வேறென்ன?”

- கதைசொல்லிக்கும் ஒரு வாசகருக்குமான உரையாடல் வடிவிலான பஷீரின் ‘சப்தங்கள்’ குறுநாவல் இப்படித் தொடங்குகிறது. தனது கதைகளும், கதைமாந்தர்களும், சொல்முறையும் எவ்வளவு சுவாரஸ்யமானவையோ அதைவிடக்கூடுதலான சுவாரஸ்யம் கொண்டவர் பஷீர் என்னும் கதைசொல்லி.

ஒருநாள் ‘திருச்சூர் வடக்கும்நாதர்’ பஷீரின் கனவில் வந்து “நன்றாகப் பழுத்த பாக்கு கிடைக்காமல் வாயெல்லாம் என்னவோ போலிருக்கிறது” என்று சொல்ல, மறுநாள் நல்ல பாக்குகளை வாங்கிப் பொட்டலம் செய்து கோயில் சுவருக்குள் வீசியெறிந்தாராம். செல்லுமிடங்களுக்கெல்லாம் சைக்கிளில் தனது சாய்வு நாற்காலியையும் கிராமபோனையும் எடுத்துச் செல்கிறவர். தோட்டத்துப் பாம்புகளிடம் ‘என் மனைவி வருவதற்குள் ஓடிவிடுங்கள் என்று சொல்கிறவர். ஒரு கலைஞனுக்கே உரித்தான மெல்லிய பைத்தியத் தன்மையும், நாடோடி மனமும், பேரன்பின் ஆன்மிகக் குணமும்கொண்டவர் பஷீர்.

மினுக்கும் சிகையற்ற தலை, குட்டைக்கும் சற்று பெரிய மீசை, மூக்குக்கண்ணாடி, சுழலும் இசைத்தட்டுக்கு நளினம் செய்யும் பீடி புகையும் விரல்கள் என பஷீர் தமிழ் வாசகனின் மனதிலும் ஆழப் பதிந்தவர். ‘பால்யகால சகி’, ‘பாத்துமாயுடே ஆடு’, ‘மதிலுகள்’ போன்ற அவரது பெரும்பாலான படைப்புகள் தமிழ் வாசகப் பரப்பில் பெரிதும் கொண்டாடப்பட்டவை. தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராகவே பின்னாள்களில் மாறிப்போனவர். 'Reading pleasure' என்று சொல்லப்படுகிற ‘வாசிப்பின்பம்’ தரக்கூடிய படைப்பாளர்களில் முதன்மையானவர். புதிதாக எழுத வரும் எழுத்தாளன் பொறாமைப்படும் சரளமான சொல்நடைகொண்டவர். நகைச்சுவை ததும்பும் விவரிப்பினூடே மிக ஆழமான தத்துவார்த்த விஷயங்களை எளிமையாகப் போகிறபோக்கில் சொல்லிச் செல்கிறவர். அவரது உக்கிரம் மிகுந்த பயண அனுபவங்களும், வறுமையும், அதன் வழியில் அவர் செய்துபார்த்த நூற்றுக்கணக்கான வேலைகளும் (கப்பல் ஊழியர், சமையற்காரர், சூதாட்டவிடுதி ஊழியர் இன்னும் பலவற்றோடு திருட்டும் உண்டு!), சந்தித்த மனிதர்களும், பெற்ற காயங்களும் சந்தோசங்களும்தான் அவரது கதையுலகம். பஷீர் ஒரு நாடோடி! பஷீர் ஒரு சூஃபி! பஷீர் மலையாளத்திண்டே ஓர் வல்லிய எழுத்துக்காரன்!

வைக்கம் முகமது பஷீர், 1908 -ம் ஆண்டு ஜனவரி 10-ம் நாள் கேரளாவில் உள்ள வைக்கமில் ‘தலயோலப் பரம்பில்’ பிறந்தார். தனது பள்ளிப்படிப்பை முடிப்பதற்கு முன்பே வீட்டை விட்டு ஓடிவிட்டவர், இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்து சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டார். பலமுறை சிறைதண்டனை அனுபவித்தார். பகத் சிங் பாணியிலான தீவிரவாத அமைப்பொன்றை உருவாக்கி இயங்கினார். அவ்வமைப்பின் கொள்கை இதழாக ‘உஜ்ஜீவனம்’ எனும் வாரப் பத்திரிகையும் தொடங்கினார். பத்தாண்டுகள் இந்தியா முழுக்க தேசாந்திரியாக அலைந்து திரிந்தார். ஆப்பிரிக்கா, அரேபியா போன்ற நாடுகள்வரைகூட அந்தத் தேசாந்திரி பயணம் நீண்டது. இந்தக் காலகட்டத்தில் பஷீர் செய்யாத வேலைகளே இல்லை என்று சொல்லிவிடலாம். சில வருடங்கள் இமயமலைச் சரிவுகளிலும் கங்கைக் கரைகளிலும் இந்துத் துறவியாகவும் இஸ்லாமியச் சூஃபியாகவும் வாழ்ந்தார். மலையாளத்தில் சிறுகதை, நாவல், உரைநடை என விரிவாக இயங்கி மலையாள இலக்கியத்தின் முக்கியமான முகமாக மாறினார். பத்மஸ்ரீ உள்பட பல்வேறு உயரிய விருதுகள் பெற்றவர். 1994 -ம் ஆண்டில் இதே நாளான ஜூலை 5-ம் நாளில் தனது 86வது வயதில் காலமானார். ஆரம்பத்தில் இடதுசாரிக் கருத்தியல்மீது நெருக்கம்கொண்டிருந்தவர், பின்நாள்களில் காந்தியக் கருத்தியலால் ஈர்க்கப்பட்டு தனது இறுதிக்காலம் வரை அதில் நிலைகொண்டிருந்தார்.

பஷீரை வாசிக்கும்போது பஷீரின் குரலை, அவரது உடல்மொழியை, புன்னகையை ஒரு வாசகன் உணர்வான். பஷீர் அவரது எழுத்துகளில் தனது குரலை நிலைக்கச் செய்துவிட்டார். அதற்கு எப்போதும் ஓய்வில்லை. அழிவில்லை. இந்த இடத்தில் பஷீரின் ஆளுமையை நாம் உணர்ந்துகொள்ளத் துணையாக இரண்டு படைப்புகளை இணைத்துத் தர விரும்புகிறேன். ஒன்று, கவிஞர் இளங்கோ கிருஷ்ணனின் பஷீர் குறித்த கவிதை. மற்றொன்று அவரைப் பற்றி எம்.ஏ.ரஹ்மான் இயக்கிய ‘பஷீர் த மேன்’ எனும் ஆவணப்படம். இவை அவரைக் கூடுதலாக அறிந்துகொள்ள நமக்கு உதவும்.

பஷீருக்கு ஆயிரம் வேலைகள் தெரியும்

வைக்கம் முகம்மது பஷீர்

கேரளத்தின்டே சூஃபி

அவருக்கு ஆயிரம் வேலைகள் தெரியுமாம்

அவர் பார்த்த முதல் வேலை

குரங்குக்குப் பேன் பார்ப்பது

சாதாரணக் குரங்கு இல்லை

பைத்தியம் பிடித்த

பெரும் மசைக் குரங்கு

இன்னொரு வேலை

சுமை கழுதைகளை மலையேற்றுவது

பஷீர் கழுதை ஒன்றை

இழுத்துக்கொண்டு போகும்

சித்திரம்

சிலுவை சுமக்கும் தேவகுமாரனுக்கு

நிகரானது

வேறொரு வேலை

குட்டிச்சாத்தான்களைக் கட்டிவைப்பது

பஷீர்

ஒரு குட்டிச்சாத்தனை கட்டிவிட்டு

இன்னொன்றை துரத்திக்கொண்டு

ஓடும் போது

முதல் சாத்தான்

தப்பித்துக்கொள்ளும்

நான்காவது வேலை

கொஞ்சம் கவித்துவமானது

பேய்களைச் சிங்காரித்து

மேடைக்குக் கூட்டி வருவது

இப்படியாக

பஷீர்

தன் ஆயிரமாவது வேலையில்

மூச்சிரைத்துக்கொண்டிருந்த போது

அல்லா அவர் முன் தோன்றினார்

மோனே

பஷீர்!

என்னை தெரியலையா?

பஷீர்

ஸ்டைலாய் பீடி வழித்துக்கொண்டே

சொன்னார்

தெரியாம என்ன அச்சனே!

நான் கண்ட

குரங்கும், கழுதையும்

குட்டிச்சாத்தானும் பேயும்

நீ தன்னே...

 

ஆவணப்படம்

 

 


பஷீர் மலையாள மொழியின் மகிழ்ச்சியான தொன்மம்! எல்லையற்ற இலக்கிய உலகின் ஓர் நாடோடி முகம். அதை நினைவுகூர்தல் வாசகனுக்கு ஒரு மகிழ்ச்சியான தருணம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close