ஆளைக் காணோம்... கார் விபத்துகள்... மாயப்பூச்சி பிடிக்கும் விளையாட்டு! #OneYearOfPokemonGo

டந்த வருடத்தின் இதே ஜூலையில், உலக கேம் பிரியர்கள் கையில் போனை வைத்துக்கொண்டு சிலரை வெறித்தனமாக விரட்டிக் கொண்டிருந்தார்கள். அந்தத் தேடப்பட்ட குற்றவாளிகள் பிக்காச்சு உள்ளிட்ட போகிமான் கேரக்டர்கள். ஜான் ஹாங்க் என்பவர் தொடங்கிய 'நியாண்டிக்' எனும் மென்பொருள் நிறுவனம் 'போகிமான் - கோ' மொபைல் கேமைத் தயாரித்தது. Pocket Monsters - பாக்கெட்டில் அடங்கும் குட்டிச் சாத்தான்கள் என்பதன் சுருக்கமே Pokemon Go. நியான்டிக் நிறுவனத்தினர் முதலில் 'Field Trip' எனும் ஆப்பை டெவலப் செய்தனர். அது பயணத்தின்போது நாம் கடக்கும் முக்கிய இடங்களைப் பற்றிய விவரங்களைத் தருவது. அதற்குப் பிறகு Ingress எனும் கேமை உருவாக்கினார்கள். ஆக்மென்டட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவான இந்த கேம்தான் Pokemon-Go கேமுக்கு முன்னோடி. 

போகிமான் கோ

ஜான் ஹாங்க், போக்கிமான் படைப்புகளின் மொத்த உரிமையையும் வைத்திருந்த The pokemon company என்ற ஜப்பானிய நிறுவனத்தோடு ஜோடி சேர்ந்தார். அவற்றின் உதவியோடு முந்தைய கேமான Ingress-ல் இருந்து திரட்டப்பட்ட தரவுகளையும் இணைத்து Pokemon Go-வை உருவாக்கியது நியான்டிக் நிறுவனம். பீட்டா வெர்ஷனைத் தொடர்ந்து கடந்த ஆண்டின் ஜூலை 6-ம் தேதி அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் வெளியானது Pokemon Go. இந்த கேமை டவுன்லோடு செய்ய முண்டியடித்துப் ப்ளே ஸ்டோருக்குள் புகுந்த கூட்டத்தால் சர்வர் க்ராஷ் ஆக, பிற நாடுகளில் அறிமுகப்படுத்தும் திட்டத்தைத் தள்ளி வைப்பதாக அறிவித்தது நியான்டிக் நிறுவனம். 

ஆக்மென்டட் ரியாலிட்டி என்னும் தொழில்நுட்பத்தின் மூலம் மொபைல் கேமரா வழியாக நிஜ உலகிலேயே, ஒரு மாய உலகை உருவாக்க முடியும். ஜிபிஎஸ்ஸின் துணையில், இதனை சாத்தியப்படுத்துகிறது இந்தத் தொழில்நுட்பம். ஆக்மென்டட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தினையும், ஜி.பி.எஸ்-ஸையும் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த கேமில் முக்கியமான டாஸ்க், நிஜ உலகில் இருக்கும் மாயப் பூச்சிகளைப் பிடிப்பதே. பூச்சி பிடிக்கிறேன் பேர்வழியென, பலர் மாடியில் இருந்து கீழே விழுவது, குனிந்துகொண்டே போய் லாரியில் விழுந்த சம்பவங்கள், பிக்காச்சுவை ஸ்கேன் செய்யப்போய் நகரத்தைத் தாண்டி வெளியேபோன கதைகள் எல்லாம் நிகழ்ந்தன. 

‘உட்கார்ந்த இடத்தில் இருந்தபடியே வீடியோ கேம் விளையாடுகிறார்கள்' என்பதுதான் இந்தத் தலைமுறையினர் மீது வைக்கப்படும் மிக முக்கியமான குற்றச்சாட்டு. அதைத் தகர்த்தெறிகிறோம் எனச் சொல்லித்தான் அறிமுகப்படுத்தப்பட்டது போக்கிமான் கோ. போக்கிமான் கேரக்டர்களைப் பிடிப்பதற்கு வீட்டிலிருந்து வெளியே பல இடங்களுக்கும் செல்ல வேண்டியிருக்கும். ஆனால், இதிலும் நிறையப் பிரச்னைகள் இருக்கின்றன. இந்த விளையாட்டைத் தொடர்ந்து ஒருவர் விளையாடிக் கொண்டிருக்கும்போது, எது நிஜம், எது விர்ச்சுவல் எனப் புரியாத மாய வலைக்குள் சிக்கிக்கொள்ளலாம். நம் கண் முன் தோன்றும் போக்கிமான்களை, பந்தினை வைத்து எறிந்து பிடிப்பதன் மூலம் பாயின்ட்களைப் பெறும் வகையில் இந்த விளையட்டு உருவாக்கப்பட்டது. 

போகிமான் மீம்ஸ்

இந்த கேம் வெளியிடப்பட்ட நாடுகளில் எல்லாம் சக்கைப்போடு போட்டதையடுத்து, போகிமான் கோ அறிமுகப்படுத்தப்படாத நாடுகளைச் சேர்ந்த கேம் விரும்பிகளும் மூன்றாம்தர நிறுவனங்களின் மூலம் தரவிரக்கம் செய்து பிக்காச்சுவைத் தேடி அலைந்தனர். இப்படி அதிகாரபூர்வமில்லாத ஆப்பைப் பயன்படுத்தும்போது அந்த APK ஃபைலோடு மால்வேர்களையும் அட்டாச் செய்து ஹேக்கர்கள் ஒருபக்கம் மரணபயத்தைக் காட்டினார்கள். அந்த மால்வேர்கள், மொபைல்போன் யூசர்களின் தகவல்களைத் திருடுபவை என மென்பொருள் நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்தன. அதையும் பொருட்படுத்தாமல் ஒரு பக்கம் லட்சக்கணக்கில் இன்ஸ்டால் ஆகிக்கொண்டிருந்தது போகிமான் -கோ. இந்தியாவில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படாமலேயே  ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில்  PokemonGO பயங்கர வைரலானது. பிக்காச்சு மீம்ஸ்களும் குவியத் தொடங்கின. 

அமெரிக்காவின் பல இடங்களில் இந்தப் பூச்சிகளைப் பிடிக்க மக்கள் ஒருசில இடங்களில் திரள்வதால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டன. இந்தியாவிலும் மும்பை போன்ற இடங்களில் போகிமான் பிடிக்கப் போய் கார் விபத்துகள் நிகழ்ந்தன. சிரியாவின் உள்நாட்டுப்போரால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் 'போகிமான் கோ' படத்தை 'நீயாவது வந்து எங்களைக் காப்பாற்று' எனும் வாசகத்தோடு கையில் வைத்துக்கொண்டிருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலானது. அந்த அளவுக்கு இந்த கேமின் தாக்கம் உலகம்பூராவும் இருந்தது. ஒருகட்டத்தில் அலைந்து அலைந்து களைத்துப்போன மக்கள் பிக்காச்சுவைத் தேடுவதையும் குறைத்துக்கொண்டார்கள். மாயப் பூச்சிகள் பிடிக்கும் விளையாட்டால் காணாமல் போனவர்கள் எண்ணைக்கையும் குறைந்துவிட்டது. ஆனாலும், போகிமான் குறித்த ஆர்வத்தால், அதிகாரபூர்வமாக நமக்கும் வெளிவரும் எனக் காத்திருக்கிறார்கள் இந்திய கேம் பிரியர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!