Published:Updated:

பிரதிபா பாட்டீலின் வழியனுப்பு விழாவை புறக்கணித்த எம்.பி.க்கள்!

Vikatan Correspondent
பிரதிபா பாட்டீலின் வழியனுப்பு விழாவை புறக்கணித்த எம்.பி.க்கள்!
பிரதிபா பாட்டீலின் வழியனுப்பு விழாவை புறக்கணித்த எம்.பி.க்கள்!
பிரதிபா பாட்டீலின் வழியனுப்பு விழாவை புறக்கணித்த எம்.பி.க்கள்!

புதுடெல்லி: நாடாளுமன்ற மத்திய மண்டபத்தில், ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு நடைபேற்ற  வழியனுப்பு விழாவில் பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த எம்.பி.க்கள் பலர் கலந்துகொள்ளாமல் தவிர்த்தனர்.

ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின்  பதவிக்காலம், இன்றுடன் முடிவடைகிறது. புதிய ஜனாதிபதியாக, பிரணாப் முகர்ஜி நாளை பதவி ஏற்கிறார். இதனையொட்டி பதவி நிறைவு பெற்று செல்லும்  பிரதிபா பாட்டீலுக்கு,நாடாளுமன்ற மைய மண்டபத்தில் எம்.பி.க்கள் சார்பில் நேற்று  வழியனுப்பு விழா நடைபெற்றது.

நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் மீராகுமார், துணை ஜனாதிபதியும்,மாநிலங்களவை தலைவருமான ஹமீது அன்சாரி ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்று, பிரதிபா பாட்டீலுக்கு மலர்க்கொத்துகளையும், நினைவுப்பரிசுகளையும் வழங்கினார்கள்.

பிரதிபா பாட்டீல் கவுரவம்,கருணை மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் ஆகியவற்றின் அடையாளமாக திகழ்வதாக,விழாவில் புகழாரம் சூட்டப்பட்டது.

விழாவில் பேசிய பிரதிபா பாட்டீல், எத்தனையோ சவால்களுக்கு மத்தியில், வளமான வளர்ச்சிப்பணிகளுக்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக எம்.பி.க்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

"கடந்த 20 ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் புதிய தொழில் நுட்ப கண்டுபிடிப்புகளில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. பொருளாதார வளம் அதிகரித்து இருக்கிறது. சட்டங்கள் இயற்றும்போது இவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்'' என்றும் ஜனாதிபதி அறிவுரை வழங்கினார்.

நாடாளுமன்றத்தில் சமீப காலமாக ஏற்பட்டுவரும் அமளியை மறைமுகமாக குறிப்பிடும் வகையில் கருத்து தெரிவித்த பிரதீபா பட்டீல், எம்.பி.க்கள் தங்களுடைய மாறுபட்ட கருத்துகளை தெரிவிக்கும்போது, முக்கிய சட்டங்கள் தொடர்பான வாதங்களை இழந்துவிடக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் மத்திய அமைச்சர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர்.

ஆனால் இந்நிகழ்ச்சி சிறிது நேரமே நடைபெற்றபோதிலும் ஆளும் மற்றும் எதிர்கட்சிகளை சேர்ந்த பல எம்.பி.க்கள் இதில் கலந்துகொள்ளவில்லை.

ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், இன்று இரவு 7 மணிக்கு அரசு தொலைக்காட்சியான  தூர்தர்ஷனில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.அகில இந்திய வானொலி நிலையங்களும் அவருடைய உரையை ஒலிபரப்புகின்றன.