Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தென்னிந்திய மசாலா என்றால் என்னவென்று கூகுளுக்கு நாம் சொல்வோமா? #ThisIsNotSouthIndianMasala #LetsCleanGoogleResult

சமீபத்தில் சோசியல் மீடியாவில் ஒரு ஸ்க்ரீன்ஷாட் பார்க்க நேர்ந்தது. அநேகமாக நீங்களும் அதைப் பார்த்திருப்பீர்கள். கூகுள் இமேஜில் 'North Indian Masala' என்று தேடினால் உணவுப் பொருட்களையும்.. 'South Indian Masala' கிளாமரான நடிகைகளின் படங்களையும் காட்டுகிறது என்று ஒருவர் பதிவேற்ற அது பரபரவென பற்றிக் கொண்டது. இது ’நாட்டுல எவ்வளவோ பிரச்னை இருக்கு. இதெல்லாம் ஒரு மேட்டரா?’ என்று கடந்து போகக்கூடிய விஷயமோ...  ’ஹா ஹா’ ஸ்மைலி போட்டுவிட்டு ஸ்க்ரோல் செய்துவிடக்கூடிய பிரச்னையோ இல்லை. 

This is not south Indian Masala

இது சிறப்பு கவனம் செலுத்தி உடனடியாகக் களைய வேண்டிய பிரச்னை. ஏனென்றால் இன்று இணையம் பயன்படுத்தும் எல்லோருக்கும் கூகுள் தான் முதல் ஆசான். எந்த ஒரு சந்தேகத்திற்கும் முதலில் கூகுளைத்தான் நாடுகிறோம். எந்த ஒரு விஷயத்தைத் தெரிந்துகொள்வதென்றாலும் கூகுளில்தான் தேடுகிறோம் என்றிருக்கும் நிலையில், கூகுளில் காட்டப்படும் தகவல்கள் உண்மை என்றுதான் பெரும்பாலானோர் நம்புகிறோம். நமக்குத் தெரியாத ஒரு விஷயத்தில் கூகுள்  ரிசல்ட்தான் அதைப் பற்றிய நமது முதல் பிம்பம். அந்த பிம்பம் தவறாக இருக்கும் பட்சத்தில் அது தேடுபவர்களின் மனதில் தவறாகவே அடையாளப்படுத்தப்படும். இப்போது சொல்லுங்கள் இந்த ரிசல்ட் 'South Indian’ மக்கள் இப்படித்தான் என்று அடையாளப்படுத்துவதாகத் தானே இருக்கும். 

தவறு கூகுளுடையது தானே... இதில் நாம் செய்ய என்ன இருக்கிறது? அப்படி முழுக்க முழுக்க கூகுளின் மீது பழிபோட்டு நாம் தப்பித்துக்கொள்வது சரியல்ல. பாதித் தவறு நம்மீதும் உள்ளது என்பதால் கூகுள் ரிசல்டை சுத்தம் செய்ய வேண்டிய பொறுப்பும் நமதாகிறது. ஒரு சவுத் இந்தியனை சி.இ.ஓவாகக் கொண்ட கூகுளில் சவுத் இந்தியர்கள் இப்படித்தான் சித்தரிக்கப் படவேண்டுமா? இது கூகுள் இமேஜ் பற்றிய பிரச்னை இல்லை சவுத் இந்தியர்களின் ’இமேஜ்’ பற்றிய பிரச்னை. இன மானம், தன் மானம் என்ற பேச்செல்லாம் லைக்ஸூக்காக ஸ்டேட்டஸ் போட மட்டும்தானா? இணையத்தில் நம் மானம் காக்க களமிறங்க வேண்டாமா? 

இதை எப்படி சரி செய்யலாம்?

இந்த ரிசல்ட் ஏன் இப்படி வருகிறது? இதை எப்படி சரி செய்யலாம்? என்று பார்ப்பதற்கு முன் ஒரு சில ஃப்ளாஷ்பேக்ஸ். கூகுள் இப்படி தவறான ரிசல்ட் வந்து சர்ச்சை வெடிப்பது இது முதல்முறை அல்ல. மிகச்சரியாக ஓராண்டுக்கு முன்புகூட ஒரு பஞ்சாயத்தில் சிக்கியது கூகுள் இமேஜ் சர்ச். அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் கூகுள் இமேஜில் இரண்டு விஷயங்களைத் தேடி அதை வீடியோவாக எடுத்து ட்விட்டரில் பதிவேற்றினார். சில நிமிடங்களில் தடதடவென ரீட்வீட்களை அள்ளிக் குவித்து வைரலானது. காரணம் கூகுள் காட்டிய ரிசல்ட். அந்த இரண்டு விஷயங்கள் என்ன தெரியுமா?  ‘Three black teenagers’ & ‘Three white teenagers’. இதில் ‘Three white teenagers' என்ற கீவேர்டுக்கு மூன்று வெள்ளை நிற சிறுவர்கள் சிரிப்பது.. விளையாடுவது என அழகான புகைப்படங்களாக காட்டியது. அதே ‘Three black teenagers' என்ற கீவேர்டுக்கு போலீஸ் வெளியிடும் கிரிமினல்களின் புகைப்படங்களில் இருக்கும் மூன்று கருப்பு நிற சிறுவர்களைக் காட்டியது. ’வெள்ளையர்களை அழகாகவும்... கருப்பர்களை கிரிமினல்களாகவும் காட்டுவதா??? நிறவெறி பிடித்த கூகுளே..!’ என்று கடுப்பாகி கூகுளை வறுத்தெடுத்தார்கள் நெட்டிசன்கள். ஏன் நம்மூரில் கூட “Top 10 criminals” என்று தேடினால் நரேந்திர மோடியின் படத்தைக் காட்டியதும் சர்ச்சையைக் கிளப்பியது. இதுவும் பல்வேறு எதிர்ப்புகளைக் கிளப்ப... அந்த ரிசல்டுக்கு மேலேயே ‘இது அல்காரிதம்(Algorithm) தரும் ரிசல்ட் மட்டுமே தவிர கூகுளின் கருத்தை பிரதிபலிக்கவில்லை’ என்று  வெளியிட்டு மன்னிப்புக் கேட்டுக்கொண்டது. 

எப்படி இதுபோன்ற தவறுகள் நடக்கிறது?

இதற்கு முதலில் கூகுள் இமேஜ் எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும். கூகுளால் வார்த்தைகளைப் புரிந்து கொள்வதைப் போல இமேஜை புரிந்துகொள்ள முடியாது. இந்த வார்த்தைக்கு இதுதான் அர்த்தம் என்று டிக்சனரியை வைத்து முடிவு செய்வதைப் போல இமேஜூக்கு டிக்சனரி போட முடியாதல்லவா? பிறகு எப்படி ஒரு இமேஜில் இதுதான் இருக்கிறது என்று முடிவுசெய்கிறது. இணையத்தில் ஒரு படம் பதிவேற்றப்பட்ட உடன் கூகுள் ஸ்பைடர் என்றழைக்கப்படக்கூடிய ஒரு ப்ரோக்ராம் அதைப் பற்றிய தகவல்களை சேகரித்துக் கொள்ளும். தொடர்ந்து எல்லா வெப்சைட்களிலும் நுழைந்து தகவல் சேகரிப்பதுதான் இதன் வேலையே. அப்படி சேகரிக்கும் போது அந்த இமேஜில் என்ன இருக்கிறது என்பதை, அதன் File name, கட்டுரையின் தலைப்பு, வெப்சைட்டில் அந்த இமேஜை சுற்றி இருக்கும் வார்த்தைகள் என சில விஷயங்களை வைத்து முடிவு செய்யும். இதெல்லாம் விட மிக முக்கியம் Alt Text. வெப்சைட்டில் ஒரு இமேஜை பதிவேற்றும்போது Alt Text என்ற ஃபீல்டில் அந்த இமேஜில் என்ன இருக்கிறது என்பதைத் தரவேண்டும். எந்த ஒரு வெப்சைட்டிலும் இருக்கும் படங்களின் மீது மவுஸ் கர்சரை வைத்தால் இந்த Alt Text ஐக் காணலாம். இந்த Alt Text தான் கூகுளுக்கு வேத வாக்கு. (உதாரணமாக கீழே உள்ள படத்தின் மீது உங்கள் மவுஸ் கர்சரை வைத்துப் பாருங்களேன்..!) 

தோசை

கூகுள் இமேஜில் நாம் ஒரு வார்த்தையைக் கொடுக்கும்போது மேலே சொன்ன லிஸ்ட்களை ஆராய்ந்து இதற்கு சரியான இமேஜ் எது என்று முடிவு செய்து கூகுள் தனது ரிசல்ட்டில் காட்டும்.  உதாரணமாக ஃபைல் நேம், Alt Text, கட்டுரையின் தலைப்பு எல்லாவற்றிலும் ’தோசை’ என்ற வார்த்தை இருந்தால் அந்த படத்தில் இருப்பது ‘தோசை’ என்று தானாக முடிவு செய்துகொள்ளும். ஆனால் தலைப்பில் மட்டும் ’தோசை’ என்ற வார்த்தை இருந்து உண்மையில் அது ‘இட்லி’யின் படமாக இருந்தால்..? கூகுளைப் பொறுத்தவரை அதை ’தோசை’ என்றுதானே நினைக்கும். அதே பிரச்னை தான் இந்த நார்த் இந்தியா சவுத் இந்தியா விஷயத்திலும். 

உண்மையில் வெறும் 'Indian Masala' என்று கூகுளில் தேடினால் கூட ஆபாசமான படங்கள் தான் பட்டியலிடப்படுகிறது. காரணம் சில இணையதளங்கள் தங்கள் இணையப் பக்கங்களுக்கு அப்படி பெயர் வைத்திருக்கின்றன. அதில் அப்லோடப்பட்டிருக்கும் படங்களுக்கு அவ்வாறு பெயரிட்டிருக்கிறார்கள். பிறகு ஏன் ‘North Indian Masala’ வுக்கு மட்டும் வரவில்லை? ஏனென்றால் அந்த பெயரில் ஆபாச இணையதளங்கள் குறைவாக இருக்கின்றன அதனால் உணவுப் பொருட்கள் வருகிறது. (நார்த் இந்தியர்கள் மசாலா என்கிற வார்த்தையை அவ்வளவாக பயன்படுத்துவதில்லை). 

கூகுள் தன்னை எப்படி திருத்திக்கொள்ளப் போகிறது?

Mob or Komondor

சில நாட்களுக்கு முன்பு நடந்த கூகுள் I/O 2017 கான்ஃப்ரன்ஸின் போது கூகுளின் Developer advocate, sara robinson சொன்னது நினைவுக்கு வருகிறது. வீடு துடைப்பதற்கு பயன்படும் மாப் (Mob) ஐயும் கிட்டத்தட்ட அதே தோற்றத்தில் இருக்கும் komondor வகை நாய்களையும் கூட பிரித்து அறியும் அளவிற்கு கூகுளின் தொழில்நுட்பம் முன்னேறியிருக்கிறதாம். (லிங்க்)  Artificial Intelligence எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கூகுளில் வெப் சர்ச், முன்பை விட பன்மடங்கு முன்னேறிவிட்டாலும் இமேஜ் சர்ச்சில் தன்னை மேம்படுத்திக்கொள்ள தொடர்ந்து போராடி வருகிறது. முழுமையாக செயற்கை அறிவைப் பயன்படுத்தி தேடல்களுக்கு பதில் தருமளவிற்கு வளரும் வரை கூகுள் வார்த்தைகளை வைத்து மட்டும்தான் இமேஜில் என்ன இருக்கிறது என்ற முடிவுக்கு வரும். படத்தில் இருப்பது மங்கையா மசாலாவா என்று பிரித்தறியும் தொழில்நுட்பத்திற்கு சீக்கிரம் மாறுங்க  கூகுள்..!

அதுவரை வெயிட் பண்ணாமல் இதை எப்படி சரி செய்யலாம்?

நம்மால் என்ன செய்துவிட முடியும் என்கிறீர்களா? இரண்டு விதங்களில் இந்த ரிசல்டை நாம் மாற்றியமைக்க முடியும். ஒன்று கூகுள் Machine learning அடிப்படையில் இயங்குகிறது. அதாவது கூகுளில் ஒன்று தேடப்படும் போது முதலில் தன்னிடம் இருக்கும் சில ரிசல்ட்களுக்கு தானாக ஒரு ரேங்க் கொடுத்து எந்த ரிசல்ட் முதலில் வரவேண்டும், எது இரண்டாவது என்று முடிவு செய்து அதன்படி பட்டியலிடும். பிறகு நமது க்ளிக்குகளை கவனிக்கத் தொடங்கும்... அந்த லிஸ்டில் எதை அதிகமாக க்ளிக் செய்கிறார்கள் என்பதை வைத்து தனது ரேங்கை சரிசெய்துகொள்ளும். உதாரணமாக ஒரு தேடலுக்கு முதல் இமேஜை விட்டு விட்டு ஏழாவது இமேஜைத் தான் எல்லாரும் க்ளிக் செய்கிறார்கள் என்றால் சில நாட்களில் அந்த ஏழாவது இமேஜ் முதலில் காட்டப்படும். 

’South Indian Masala' என்று கூகுளில் தேடி ஒரு ஸ்க்ரோலுக்கு கீழே போனால் நம்மூர் மசால் தோசைகூட இருக்கும். அது போன்ற இமேஜ்களை க்ளிக் செய்து பார்க்கலாம். ஆயிரக்கணக்கானவர்கள் உணவுப் பொருட்களை க்ளிக் செய்யும்போது தானாகவே அவை மேலே வந்துவிடும். இது ஒரு வழி.

இன்னொரு வழி... நீங்கள் Blog அல்லது இணையதளம் வைத்திருக்கிறீர்களா? ஆம் எனில் உங்களின் கரம் தான் பெரிதாகத் தேவை. உடனடியாக உங்கள் Website / Blog / Google+ / Pinterest போன்ற தளங்களில் 'South Indian Masala' என்ற தலைப்புடன் நம்மூர் மசாலா உணவுகளைப் பதிவேற்றுங்கள். இப்படி பதிவேற்றும்போது அந்த படங்களின் File name, Alt Text போன்றவைகளில்  ‘South Indian Masala' என்றிருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். 

File Name

உங்கள் வெப்சைட் என்ன மாதிரியானது என்பதைப் பொறுத்து ஆல்ட் டெக்ஸ்ட் வைப்பதற்கான முறை மாறும். பொதுவாக ப்ளாக்கில் ஒரு இமேஜ் அப்லோட் செய்தால் அந்த இமேஜின் கீழ் Image Properties என்று ஒரு ஆப்சன் வரும் அதைக் க்ளிக் செய்து ஆல்ட் டெக்ஸ்ட் கொடுக்கலாம். இந்த இமேஜை Pinterest இல் ஷேர் செய்யும்போது Description இல் ‘South Indian Masala’ என்று சேர்க்கலாம்.

How to change alt text in Blogger

#LetsCleanGoogleResults இதெல்லாம் செய்தால் ஒரே நாளில் சுத்தமாகுமா என்றால் நிச்சயம் ஆகாது. இப்படி நூறு பேர் செய்தால் நிச்சயம் விரைவில் மாறிவிடும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement