Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிக் பாஸ் போட்டியாளர்களுக்குள் நிகழும் உளவியல் மாற்றம் என்ன? அனுபவம் பேசுது! #BiggBossTamil

பிக் பாஸ்தான் சமீபகாலமாக  நெட்டிசன்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. அப்படி என்ன பாஸ் அங்கே இருக்கிறது என்று கேட்டால், 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' என்ற வாசகத்தைத் தவிர ஒன்றுமே இல்லை என்பதுதான் பிக் பாஸோட ஸ்பெஷாலிட்டியே. போட்டியாளர்களைக் கண்ணைக் கட்டிக் காட்டிலா விட்டார்கள், பியர் கிரில்ஸ் மாதிரி கிடைத்ததை சாப்பிட்டுக்கொண்டு உயிர் பிழைத்து வாழுங்கள் என்று?  சோறு தண்ணீர்  இல்லாமல் ஜெயிலில் அடைத்தார்களா? அப்படியெல்லாம் இருந்தால் கூட, அடுத்த கணம் என்ன செய்வது என்று யோசித்தவாறே பொழுதுகள் கழிந்துவிடும். வெளியுலக தொடர்பைத் துண்டித்து ஒரு வீட்டில் அதுவும் கண்காணிப்பின் கீழ் வைத்திருப்பதுதான் அவர்களை இந்தப் பாடு படுத்துகிறது.  

பிக் பாஸ்

அங்கேயுள்ள நிலவரம் எப்படி இருக்கும், உள்ளே சென்றால் என்னவெல்லாம்  நடக்கும் என்று சல்மான்கான் ஷோக்களைப் பார்த்து தெரிந்துகொண்டவர்கள்தான் அனைவரும். அவர்களுக்கு சில பல உளவியல் மாற்றங்கள் நிகழலாம். மீடியா மக்களுக்கு முக்கியமானதே வெளியுலகத் தொடர்பும், மொபைல் போனும்தான். அதுவே அங்கு இல்லை எனும்போது கண்டிப்பாக  உளவியலுக்கு கொஞ்சம் வேலை இருக்கும் என்பதே நிதர்சனம்.

இதற்குமுன் வேறு மொழிகளில் நடந்தபோது, போட்டியாளர்களின் அனுபவம் பேசியதைக் கொஞ்சம் அலசுவோம்.

நெதர்லாந்து பிக் பிரதர் நிகழ்ச்சியில் சாதாரண மனிதர்களை வைத்து இதை நடத்திய போது, அவர்களுக்கு ஏகப்பட்ட உளவியல் மாற்றங்கள் ஏற்பட்டதால் இரண்டு உளவியலாளர்களை நியமனம் செய்து எப்போதும் போட்டியாளர்களை கண்காணித்துக் கொண்டே இருந்தனர். அவர்கள் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் பீட்டர் கல்லட் மற்றும் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜெஃப்ரி பீட்டி. இந்த இரண்டு உளவியலாளர்களின் வேலையே வாரத்திற்கு ஒருமுறை போட்டியாளர்களின் மனநல மாற்றங்களை சேனலுக்கு கொண்டுப் போய் சேர்ப்பதுதான். 

இதைப் பற்றி க்ளாஸ்க்கோ சமூகவியலாளர், "இந்த பிக் பிரதர் நிகழ்ச்சி தனது  போட்டியாளர்களை குறிவைத்துத் தாக்கி  மீடியாக்களுக்கு தெரிவிக்கும் வண்ணம் இருக்கிறது. இதே நிலை தொடர்ந்தது என்றால் கண்டிப்பாக இந்நிகழ்ச்சி பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி, தடை செய்யும் நிலை கூட ஏற்படலாம்" என்று கூறியிருக்கிறார். இதற்காகவே  24 மணிநேரமும் பிக் பிரதர் வீட்டில் உளவியல் நிபுணர்களின் குழு இருந்துகொண்டே இருந்தது.

இதுகுறித்து,ஸ்டெர்லிங் பல்கலைக்கழகத்தின் ஊடக ஆராய்ச்சியாளர் டாக்டர் டேவிட் மில்லர், "மனித இயல்புகளைக் கண்டறியும் நோக்கத்தில்  ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியை  ஒவ்வொரு இரவும் நாம் தொடர்ந்து பார்த்துக்கொண்டு வருகிறோம். ஆனால், இது மனித இயல்புகளைக் கண்டறிவதற்கான சரியான வழியே அல்ல.  70,000 யூரோக்களை ஜெயிக்க வேண்டும் என்பதற்காக போட்டியாளர்கள் தீவிர மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். அதுதவிர சமூக நெறிமுறைகளையும் இந்த நிகழ்ச்சி மீறுகிறது. வெளியேற்றப்பட்ட ஒவ்வொரு போட்டியாளர்களையும் மனோதத்துவ ரீதியாக திரையிடப்பட்டுப் பார்க்கும் போது அவர்கள் தீவிர மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பது தெரிய வந்துள்ளது" என்று கூறியுள்ளார்.

பிக் பாஸ்

ரேடியோ நெதர்லாந்து வேர்ல்ட் வைட் வெளியிட்டுள்ள செய்தியில், அகோரஃபோபியா என்ற மனநோய்தான் அதிகளவில் போட்டியாளர்களைத் தாக்கியுள்ளது என்றும் தெரியவந்துள்ளது. இந்த நோய் ஒருவன் தான் வசிக்கும் சூழலைப் பாதுகாப்பற்றது என்றும் அங்கிருந்து செல்ல வழியேதும் இல்லை என்றும் நினைக்கும் போது ஏற்படும் ஒருவித பயம்தான். 

இரண்டாவது நோயாக நோமோஃபோபியா எனும் நவீன ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையாதல் நிலையும் இவர்களை அதிகம் தாக்கியுள்ளது. எப்படி ஆல்கஹால் பழக்கம் உள்ளவர்களளுக்கு, மது அருந்தவில்லை என்றால் கைகாலெல்லாம் நடுங்குகிறதோ, அதேபோல் மொபைல் அருகில் இல்லையென்றால் உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பித்துவிடும் இவர்களுக்கு. ஒருவேளை இந்த மனநோய் பிக் பாஸில் உள்ளவர்களுக்கு இருந்ததென்றால், அவர்கள் எப்போது பார்த்தாலும் தங்களது மொபைல் போன்களைப் பற்றியே யோசித்துக் கொண்டிருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். நிறைய சீக்ரெட்களை மொபைலில்  வைத்திருப்பவர்களுக்கு அதை யாராவது எடுத்துப் பார்த்துவிடுவார்களோ என்ற பயமும் கூட ஏற்படலாம். 

பிக் பிரதர் நிகழ்ச்சியின் இறுதியில், வெற்றியாளர் 'பார்ட்' என்பவர்தான் தீவிர மனஅழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார் என்பதையும் சேனல் 4 நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இவருக்குத்  தாக்கியிருக்கும் மனஅழுத்தம் சற்று வித்தியாசமானது. இவர் அந்த பிக் பிரதர் வீட்டிலேயே 108 நாட்கள் தங்கிப் பழக்கப்பட்டதனால், நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்குத் திரும்பிய பின்னரும் அவ்வீடு இருக்கும் தெருக்களிலேயே அங்கும் இங்குமாக இரவுமுழுவதும் உலவிக்கொண்டிருப்பதை மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து அவரை மனநல மருத்துவரிடம்  சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் அவர் எப்படி குணமாகினார் என்பது தனிக்கதை!

இதேபோல் தற்போது பிக் பாஸில் இருக்கும் போட்டியாளர்களுக்கு என்னென்ன மாதிரியான மனநல மாற்றங்கள் நிகழும் என்பது பற்றி மனநல மருத்துவர் கவிதாஃபென் அவர்களிடம் பேசிய போது, "அனைத்து பிரபலங்களும் கேமராவிற்கு நன்கு அறிமுகமானவர்களே. அவர்களே இங்கு புகழுக்காகத்தான் வந்திருக்கிறார்கள். அதனால் பெரியதாக 'Social Experiment' எதுவும் நடப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. மேலும், வாயூரிசம் (Voyeurism) எனப்படும் மற்றவர்கள் போடும் சண்டை, வாக்குவாதம், காதல் மற்றும் செக்ஸ் உணர்வுகளைப் பார்த்து திருப்தி கொள்ளும் மனநிலை பலருக்கு உண்டு. இதனடிப்படையில்தான் இந்த நிகழ்ச்சியும் 360 டிகிரி கோணங்களில் கேமராக்களை வைத்து அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர 'கேம் தியரி' இந்த நிகழ்ச்சிக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. இந்தத் தியரி, சூழ்நிலை எப்படி வெற்றியையும் தோல்வியையும் தீர்மானிக்கிறது என்பதைப் பற்றியதுதான். மேலும் ஹிந்தி பிக் பாஸை கண்டிப்பாக பார்த்த இவர்கள், அனைத்தையும் அறிந்துதான் இதில் கலந்துகொள்ள ஒப்புக் கொண்டுள்ளனர். தவிர, இந்த நிகழ்ச்சி முடிந்த பின்பு அவர்களை சோதனை செய்து பார்த்தால்தான் அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார்களா, இல்லையா என்பது புலப்படும். விமர்சனங்களை தாங்கக்கூடிய சக்தி இல்லாதவர்களுக்கும், உணர்ச்சி மிக்கவர்களுக்கும் நிகழ்ச்சி முடிந்து வெளிவந்தவுடன் கண்டிப்பாக சில மனநல பாதிப்புகள் இருக்கக்கூடும்" என்றும் அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement